Last Updated : 21 Mar, 2014 12:00 AM

 

Published : 21 Mar 2014 12:00 AM
Last Updated : 21 Mar 2014 12:00 AM

ஆகாசத்தை நான் பார்க்கிறேன் ஆறு கடல் நான் பார்க்கிறேன்: குக்கூ நாயகர்கள்

‘‘திருமணத்திற்குப் பின் வரும் காதலைப் போலத்தான் என்னோட அனுபவம். இந்தப் படத்திற்குப் பின் எங்க எல்லோருக்குமே ஒரு ஸ்பேஸ் கிடைச்சிருக்கு. அடுத்த வேலையை இங்கே இருந்து தொடங்கி அழகா நகர்த்தணும்’’ என்கிறார் ‘அட்டக்கத்தி’ தினேஷ்.

‘‘ஒரு மருத்துவரைச் சந்திக்கும்போது அவர் சொல்படி கண்களை மேலும், கீழும் அசைக்கத் தவறிவிட்டால் அவரே கோபப்பட்டுவிடுகிறார். அப்படி இருக்க பார்வையற்ற ஒருவன் உங்களின் கேமரா, பாடி லாங்குவேஜ் எல்லைக்குள் சரியாக வரவே மாட்டேன் என்று அடம்பிடித்தவனை படம் முழுக்க நாயகனின் நண்பனாக்கி அழகு பார்த்திருக்கிறார், இயக்குநர். வேறு என்ன சொல்ல முடியும்’’ நெகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்கிறார், அறிமுக நடிகர் இளங்கோ. ‘குக்கூ’ படம் முழுக்கப் பயணிக்கும் இவர்களை ஒன்றாகச் சந்திக்க வைத்தார், படத்தின் இயக்குநர் ராஜுமுருகன்.

முதலில் பேச ஆரம்பித்தவர் தினேஷ். ‘‘ரிகர்ஸல் சமயத்துலேர்ந்து எனக்கும் இளங்கோ அண்ணனுக்கும் நட்பு தொடங்கிடுச்சு. அவர் கூடவே இருந்தது எனக்கு பெரிய சப்போர்ட். இளங்கோ அண்ணன் குரல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவர் பாடினால் கேட்க அவ்வளவு சுகமாக இருக்கும். ஷூட்டிங் நாட்களைவிட டப்பிங் இன்னும் சுவாரஸ்யமா நகர்ந்துச்சி. அப்படித்தான் ஒரு நாள் டப்பிங்ல இருக்கும்போது, ‘தினேஷ் பிரதர், அடுத்தடுத்த வாய்ப்புகளிலும் நாம சேர்ந்து நடிக்கணும். என்னை மறந்துடாதீங்க’ என்றவர், அந்த ஸ்பாட்டிலியே, ‘கோடிப் பணமும், குளு குளு அறையும், கொஞ்சும் குமரியுமா கேட்டோம். நியாயத்தைத்தானே கேட்டோம்’ என்று ஒரு டயலாக்கை எடுத்து விட்டார். அவ்வளவு ஷார்ப் அவர். இப்படியான ஜாலி, கேலி கலந்த ஒரு மூட்தான் ‘குக்கூ’ படமும்” என்றவர்,

“ இளங்கோ எம்.ஃபில் முடித்தவர். அரசியல், வரலாறுனு அத்தனையும் சரசரவென அடுக்குவார். ஆச்சரியமான விஷயமே. அவருடைய டப்பிங் போர்ஷனை ஒன்றரை நாட்களில் முடித்ததுதான்” என்றார். ஆச்சரியத்துடன்.

அவரைத் தொடர்ந்த இளங்கோ, ‘‘காரைக்குடி அருகில் உள்ள திருப்பத்தூர் ஒப்பிலான்பட்டி கிராமம்தான் எனக்கு சொந்த ஊர். அப்பா தஞ்சாவூருக்கு இடம்பெயர்ந்ததால் தஞ்சைக்காரனாக ஆனேன். சினிமாவில் பாட்டு பாடணும் என்கிற ஆசை அப்பப்போ எட்டிப் பார்க்கும். அதற்காக சின்ன சின்ன முயற்சி செய்து பார்த்துட்டு எதுவும் நடக்காமல் போனதும் அதையும் விட்டுட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் மாதவரத்தில் ஒரு இசை பயிற்சிக் கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோது ராஜுமுருகனும், அவரது நண்பர் கரிகாலனும் என்னிடம் வந்து நடிக்க வேண்டும் என்று கேட்டுவிட்டுப் போனார்கள். அதுதான் முதல் சந்திப்பு. மீண்டும் நாங்கள் சந்தப்போம்னு நினைச்சுப் பார்க்கல” என்கிறார்.

தினேஷைப் பற்றிப் பேச்சு திரும்புகிறது. “என்னையும், தினேஷையும் குறுக்கு வழியில் பணம் சம்பாதித்ததாகச் சொல்லி போலீஸ் ஸ்டேஷன் கூட்டிப்போய் எங்க பணத்தைப் பிடுங்கி வெச்சிடுவாங்க. அந்தக் காட்சியில ‘பணத்தை கொடுங்க சார்’னு தினேஷ் கேக்கற கட்டம், உண்மையான பார்வையற்றவர் கேட்பது போலவே அவரது குரல் இருக்கும். என்னமாதிரி ஆளுங்க ஃபீலை அப்படியே உள்வாங்கிப் பண்ணினாரு. செவ்வாபேட்டையில் ஷூட்டிங் நடந்தப்போ தினேஷ் அவர் வீட்டுக்கு அழைத்துபோய் எல்லோருக்கும் சாப்பாடு போட்டார். அதையெல்லாம் மறக்கவே முடியாது? என்று நெகிழ்கிறார் இளங்கோ.

பார்வையற்றோர் பற்றி சில படங்கள் வந்திருந்தாலும் குக்கூல முழுக்க நாங்கள் வர்றது பெரிய விஷயம் என்றவர், “ஆகாசத்தை நான் பார்க்குறேன், ஆறு கடல் நான் பார்க்குறேன் பாட்டு பழமையும், புதுமையும் கலந்து இருக்கு. ஏதோ ஒரு சொல்ல முடியாத தவிப்பை எனக்குள் இப்பவும் ஏற்படுத்திக்கிட்டே இருக்கு. “எல்லாம் ஓ.கே. ஆனா காமெடியனா வரும் எனக்கு ஒரு ஜோடி வைக்காமல் விட்டதற்காக ராஜுவையும், தினேஷையும் வன்மையா கண்டிக்கிறேன்!’’ என்று தினேஷின் கரம் பற்றிச் சிரிக்கிறார், இளங்கோ.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x