

எல்லோரும் திரைப்படம் பார்க்கலாம், ஆனால் புத்தகம் படிக்க இயலாது என்று நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்தார்.
இந்தியாவில் எழுத்தறிவின்மை சதவீதம் அதிகமாக இருப்பதைச் சுட்டிக் காட்டி இவ்வாறு அவர் வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
“பெங்குவின் புக்ஸ்” பதிப்பகத்தின் வருடாந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி டெல்லியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் நடிகர் அமிதாப் பச்சன் (71) பங்கேற்று பேசினார். அப்போது வாசகர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அவர் பேசியதாவது:
எனது தந்தை ஹரிவன்ஷ் ராய் பச்சன் புகழ்பெற்ற கவிஞர். அவரைப் போல் நான் கவிதைகள் எழுதவில்லை. ஒருமுறை எனது தந்தையிடம் உங்களின் சிறந்த கவிதை எது என்று கேட்டேன், அதற்கு அவர், நீ தான் எனது சிறந்த கவிதை என்றார்.
புத்தகங்கள் ஒரு மனிதனின் வாழ்க்கையை மாற்றும் சக்தி படைத்தவை. கையில் புத்தகம் வைத்திருக்காத மனிதனை நம்பாதே என்று பழமொழிகூட இருக்கிறது.
எல்லோரும் இந்தி திரைப்படத்தை பார்க்க முடியும். ஆனால் இன்னமும் புத்தகம் படிக்கத் தெரியாதவர்கள் உள்ளனர். உத்தர பிரதேசம், பீகார் மாநிலங்களில் பெண்கள் கல்வியறிவின்மை சதவீதம் அதிகமாக உள்ளது. எனவே புதிதாக ஒரு மகளிர் பள்ளி தொடங்க திட்டமிட்டுள்ளேன். பெண்கள் கல்வியறிவு பெற்றால்தான் நாடு முன்னேறும்.
ஆள்கடத்தல், பாலியல் பலாத்காரம், வரதட்சணைக் கொடுமை உள்ளிட்ட கொடுமைகள் நாட்டில் அதிகரித்துள்ளன. அவை தடுத்து நிறுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றார்.