

கணினித் திரை முன்பு அமர்ந்திருக்கும் அந்த இளைஞன் ஆடை எதையும் அணிந்திருக்கவில்லை. மறுமுனையில் அவனோடு ‘அரட்டை’அடிக்கும் பெண்ணும் அதேபோலவே திரையில் தோன்றும் கணத்துக்காகக் காத்திருக்கிறான்.
அதிரவைக்கும் இந்தத் தொடக்கமே புதுமுக இயக்குநர் ஜெயபிரகாஷ் ராதா கிருஷ்ணனின் ‘லென்ஸ்’ படத்தின் தீவிரத் தன்மையை உணர்த்திவிடுகிறது. மெய்நிகர் உலகில் நிலவும் வக்கிரங்களையும் அவற்றின் விபரீதமான விளைவுகளையும் பொட்டில் அறைந்ததுபோலச் சொல்கிறது ‘லென்ஸ்’.
இளமையும் அழகும் கொண்ட மனை வியை அலட்சியப்படுத்திவிட்டு, இணையத் தில் தன் வக்கிரங்களுக்கு வடிகால் தேடும் அரவிந்த் (ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன்), ஒருநாள் அதேபோன்ற ஒரு அனுபவத்துக் காகக் காத்திருக்கும்போது, புதிய பெண்ணின் நட்பு கிடைக்கிறது. அரட்டையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும்போதுதான் அது தனக்கு வைக்கப்பட்ட பொறி என்பது அவனுக்குப் புரிகிறது. அந்தப் பொறி என்ன? இணைய வக்கிரங்களின் விபரீதப் பரிமாணங் கள் என்ன என்பதை விறுவிறுப்பான திரைக் கதையின் மூலம் சொல்கிறார் இயக்குநர்.
வக்கிர ஆசாமியைப் பொறிவைத்து இழுக் கும் யோகன் (ஆனந்தசாமி) அடுத்தடுத்த நகர்வுகள் மூலம் அதிரவைக்கிறார். அரவிந் தின் நண்பன் காவல் துறையை நாட, அரவிந் துக்கும் யோகனுக்கும் என்ன தொடர்பு என்பது திரையில் விரிகிறது. அரவிந்தைப் போன்றவர் கள் தாங்கள் செய்யும் செயல்களின் முழு விபரீதத்தையும் உணரும் வகையில் திரைக்கதையின் போக்கு உள்ளது.
தனிநபர்களின் அந்தரங்கத்தைப் படம் எடுத்து, அதை இணையத்தில் பதிவேற்றி அற்ப சுகம் அடையும் கும்பலின் நிஜ முகத்தை இயக்குநர் அம்பலப்படுத்துகிறார். சிறிய சபலம், பலவீனம் என்றெல்லாம் ஒதுக்கிவிட முடியாத அளவில் ஆழமான வக்கிரத்துடனும் தெளிவான வழிமுறைகளுடனும் செயல்படும் இந்தப் போக்கினைப் புரியவைக்கிறார். அடுத்தவரின் அந்தரங்கத்தை நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு பார்க்கும், பரப்பும், மனிதர்கள் தங்களுக்கோ, தங்களைச் சேர்ந்த வர்களுக்கோ அப்படி நடந்தால் எப்படித் துடித்துப்போகிறார்கள் என்பதைக் காட்சிப் படுத்திய விதம் வலுவானது. இக்காட்சி இதுபோன்ற மனிதர்களின் மனசாட்சியைச் சிறிதேனும் அசைக்கும் வகையில் உள்ளது. தொழில்நுட்பம் என்பது பலமுனைகளிலும் கூரான கத்தி என்பதையும்; யாரும் அதற்கு இலக்கு ஆகலாம் என்பதையும் படம் காட்டிவிடுகிறது.
பாதிக்கப்பட்ட பெண்களின் குமுறலை ஏஞ்சல் என்னும் பாத்திரத்தின் மூலம் மிக அழுத்தமாகக் காட்டுகிறார் இயக்குநர். இணையத்தில் தன் அந்தரங்கம் பதிவேற்றப் பட்டதையும் பலரும் அதை ரசித்துப் பார்ப்பதையும் அறிந்த அந்தப் பெண், தினமும் ஆயிரம் பேர் தன்னை வன்புணரும் வேதனைக்கு ஆளாவதாகக் குறிப்பிடுவது அடுத்தவரின் அந்தரங்கத்தைக் காண விழைபவர்களின் மனசாட்சியை உலுக்கக் கூடியது. எப்போதும் மெய்நிகர் உலகில் அற்ப சுகம் நாடும் கணவனைப் பற்றி மனைவியின் உணர்வு என்னவாக இருக்கும் என்பதையும் இயக்குநர் நுட்பமாகக் காட்சிப்படுத்துகிறார்.
அந்தரங்கங்கள் படம்பிடிக்கப்படுவது, பதிவேற்றம் செய்யப்படுவது ஆகியவை குறித்த காட்சிகள் பரபரப்பைக் கிளப்பும் வகையில் அல்லாமல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலேயே இருக்கின்றன. ஆபாசத்தையே மையப் புள்ளியாகக் கொண்ட கதை என்றபோதிலும், இந்தப் படம் துளியும் ஆபாசமற்ற காட்சியமைப்பைக் கொண்டிருப்பது எடுத்துக்கொண்ட விஷ யம் சார்ந்த இயக்குநரின் நேர்மையான அக்கறையைக் காட்டுகிறது.
படத்தில் சில குறைகளும் இருக்கின்றன. மூன்று மொழிகளில் வெளியான இந்தப் படத் தில் வசனங்களும் உதட்டசைவுகளும் பொருந்தவில்லை என்பதை மன்னித்துவிட லாம். மற்ற குறைகளை அப்படித் தள்ளிவிட முடியாது. பழிவாங்குவதற்காக மிகவும் மெனக்கெடும் ஏஞ்சலின் கணவன், அதற்காகத் தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது போல இருக்கிறது. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பது அவரைப் பொறுத்தவரை சரியான முடிவாக இருக்க லாம். ஆனால், அது எப்படி அரவிந்துக்கான தண்டனையாக இருக்க முடியும்? தன்னுடைய மனைவியை இழிவுபடுத்தியவனைத் தண் டிக்க அவனுடைய மனைவியைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்?
ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை படத் தின் ஆதார உணர்வுக்கு வலு சேர்க்கிறது. எந்த இடத்திலும் அதிராமல் அதே சமயம் பார்வையாளர்களிடத்தில் தேவையான உணர்ச்சிகளை ஏற்படுத்தும் வகையில் நுட்ப மாகச் செயல்பட்டிருக்கிறார் பிரகாஷ் குமார். எஸ்.ஆர். கதிரின் ஒளிப்பதிவு திரைக்கதைக்கு ஏற்ற வகையில் இருக்கிறது. பெரும்பாலான காட்சிகள் அரை இருட்டில் நடந்தாலும் காட்சிகள் தெளிவாக மனதில் பதியும் வகையில் படம்பிடிக்கப்பட்டிருக்கிறது.
அரவிந்தாக நடித்திருக்கும் ஜெயப்பிர காஷ், அவரைப் பொறிவைத்துப் பிடிப்பவ ராக வரும் ஆனந்த்சாமி இருவரும் தேவை யான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ஏஞ்சலாக வரும் அஸ்வதி லால் அவமானத் தின் வேதனையைத் தத்ரூபமாக வெளிப் படுத்துகிறார்.
துல்லியமான தகவல்களுடனும் பொறுப்பு உணர்வுடனும் எடுக்கப்படும் இதுபோன்ற படங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பெரும்பங்காற்றக்கூடியவை. இது ஒரு திரைப்படமாகவும் நேர்த்தியாக உருப்பெற்றி ருப்பது கூடுதலான பாராட்டுக்குரியது.