

பிரமிக்க வைக்கும் கம்பீரமான அழகிய தென்னிந்திய நடிகை என்று ஒருவரை மட்டுமே தற்போது சொல்ல முடியும். அவர்தான் அனுஷ்கா ஷெட்டி. இன்று 33 வயதைத் தொடும் அனுஷ்காவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்துவரும் ‘ருத்ரமாதேவி’ படக்குழுவினர் அவருக்கு ஒரு பிரத்யேக வீடியோ ஒன்றைப் பரிசளிக்க உள்ளனர்.
2005-ல் தெலுங்கில் நாகார்ஜுனா நாயகனாக நடித்த ‘சூப்பர்’படத்தில் அறிமுகமான அனுஷ்கா, உடல் கவர்ச்சியைக் காட்டி மறைந்துபோகும் நடிகையாகவே ரசிகர்களுக்குத் தெரிந்தார். தமிழில் சுந்தர். சி-யின் இயக்கத்தில் மாதவனுடன் ஜோடி சேர்ந்து ‘ரெண்டு’ படத்தில் நடித்த போதும் அவர் தனித்துவமாகத் தமிழ் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
தெலுங்கில் அனுஷ்கா தன் முத்திரையைப் பதிக்க ஓராண்டு காலம் காத்திருக்க வேண்டியிருந்தது. தெலுங்கில் வித்தியாசமான கதையுடன் வணிகரீதியாகப் பெரும் வெற்றிப் படங்களைத் தொடர்ந்து தந்துகொண்டிருக்கும் இயக்குநர் ராஜமவுலியின் படமான ‘விக்ரமார்குடு’ அனுஷ்காவுக்குப் புகழைப் பெற்றுத்தந்தது.
அனுஷ்காவுக்குத் தெலுங்கிலும், தமிழிலும் தனித்துவமான பெயரைப் பெற்றுத்தந்த படம் என்றால் கதாநாயகியைப் பிரதானமாகக் கொண்டு எடுக்கப்பட்ட பழிவாங்கும் த்ரில்லரான ‘அருந்ததி’தான். 1920-ல் கட்வால் சமஸ்தானத்தில் கொல்லப்பட்ட ஒரு அரசகுலத்துப் பெண், மறுபிறவி எடுத்துப் பழிவாங்கும் கதை அது. ராணி உடையில், கொத்துக்கொத்தான ஆபரணங்களுடன் அரசியாகவே அப்படத்தில் அனுஷ்கா வாழ்ந்திருப்பார். கோடி ராமகிருஷ்ணா இயக்கிய இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அனுஷ்காவைத் தமிழகக் கிராமத்துக் குழந்தைகள்வரை கொண்டுசேர்த்தது. அதன் பிறகு விஜய், சூர்யா, விக்ரம் போன்ற ஹீரோக்களுடன் நடிக்க ஆரம்பித்தார்.
தெலுங்கில் ‘வேதம்’என்ற பெயரில் வெளிவந்து தமிழில் ‘வானம்’ஆக ரீமேக் செய்யப்பட்ட படத்தில் பாலியல் தொழிலாளியாக, முன்னணிக் கதாநாயகிகள் ஏற்கத் தயங்கும் கதாபாத்திரத்தில் நடித்தார் அனுஷ்கா. அடுத்து தெய்வத் திருமகள், சிங்கம் எனத் தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி இடத்தைப் பிடித்தார். செல்வராகவன் இயக்கிய இரண்டாம் உலகம், வணிகரீதியாகத் தோல்விப்படம் எனினும் வேற்றுக்கிரக மனுஷியாக அவர் ஏற்ற கதாபாத்திரம் சவாலானது. இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு நாயகியாகவும் லிங்காவில் நடித்து சரித்திரத்தில் இடம்பிடித்துவிட்டார்.
ரசிகர்களைக் கொள்ளைகொள்ளும் கவர்ச்சி பொம்மையாக, நாயகனோடு வெளிநாடுகளில் ஆடிப்பாடும் நடிகையாக அனுஷ்கா பல படங் களில் நடிக்கிறார். ஆனாலும் பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட காவிய அம்சமுள்ள வரலாற்றுக் கதைகள்தான் அனுஷ்காவின் தனி முத்திரை என்று சொல்லலாம். ஏனெனில், இயல்பான கதாபாத்திரத்திற்குள் ஒடுங்க இயலாத ஆகிருதி உடையவர் அனுஷ்கா.
தெலுங்கு சினிமா சரித்திரத்திலேயே அதிகமான பொருட்செலவில் தயாராகிவரும் வரலாற்றுக் காவியமான ‘பாகுபலி’யில் நாயகியாகத் தற்போது அனுஷ்கா நடித்துவருகிறார். இத்திரைப்படத்தில் இவரது கதாபாத்திரத்தின் பெயர் தேவசேனா. தமிழில் தேவசேனா என்ற பெயரில் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. ராஜமவுலியின் இயக்கத்தில் அனுஷ்கா நடித்த படங்கள் அனைத்தும் வெற்றிபெற்றவையே. ராஜமவுலியின் தேவசேனாவில் கம்பீர ராணியாக வலம்வரும் அனுஷ்காவைக் காணத் தமிழ் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.