

வித்தியாசமான ஆள்மாறாட்டத்தின் மூலம் கெட்ட ஆட்டம் போடும் ஒரு சுகவாசியின் கதைதான் ‘போகன்’.
நகைக் கடை, வங்கி என்று அடுத்தடுத்து பெரிய அளவில் இரண்டு பணக் கொள்ளைகள் நடக்கின்றன. இரண்டு கொள்ளைகளையும் அதே நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் செய்த தாக அங்கே உள்ள சிசிடிவி கேமராக் களில் பதிவாகிறது. அப்படிச் சிக்குபவர்களில் ஒருவர் நரேன். அவரது மகன் உதவி ஆணையர் விக்ரம் (ஜெயம் ரவி). தன் அப்பாவின் மீது படிந்த கறையைப் போக்க அவர் களம் இறங்குகிறார். ரவி மேற்கொள்ளும் துப்பறியும் முயற்சியில் ஆதித்யா (அரவிந்த் சாமி) சிக்குகிறார்.
கொள்ளைகளின் சூத்திரதாரி அரவிந்த் சாமிதான் என்று தெரிந்தாலும் அவர் அதை எப்படிச் செய்தார் என்பது மர்மமாகவே இருக்கிறது. அதைக் கண்டுபிடிக்க முனையும் ரவியிடம் தன் ரகசிய சக்தியைப் பிரயோகிக்கிறார் அரவிந்த் சாமி. இதனால் ரவியின் வாழ்க்கை அடியோடு மாற, அடுத்தடுத்துப் பல விபரீதங்கள் அரங்கேறுகின்றன. இந்த விபரீதங்களுக்குப் பின்னணி என்ன, அரவிந்த் சாமி என்ன செய்கிறார், எப்படிச் செய்கிறார், அதை ரவி எப்படி எதிர்கொள்கிறார் என்பவற்றுக்கான பதில்தான் போகனின் கதை.
மன்னர் பரம்பரையில் வந்த அரவிந்த் சாமிக்கு வாழ்க்கையில் எப்போதும் ஆனந்தமாகக் களித்திருக்க வேண்டும் என்பது லட்சியம். போகத்தின் மீது மித மிஞ்சிய ஆசை கொண்ட இந்தச் சுக வாசிக்குக் கிடைக்கும் வித்தியாசமான சக்தியால் அவர் பெரும் பணத்தைச் சுருட்டுகிறார். அரவிந்த் சாமியின் பாத் திரத்தையும் அவரது வித்தியாசமான சக்தியையும் கச்சிதமாகச் சித்தரிக்கும் இயக்குநர் லஷ்மண், அந்த சக்தியின் பின்னணியின் மீது சாமர்த்திய மாக மர்மத் திரையைப் போர்த்திவிடு கிறார். இதனால், படத்திலுள்ள மற்றவர்களைப் போலவே பார்வை யாளர்களும் குழம்புகிறார்கள்.
அந்த மர்மத் திரை விலகிய பிறகும் அந்த சக்தியின் தாக்கம் திரைக் கதையைத் தாங்கிப் பிடிக்கிறது. அரவிந்த் சாமியின் சித்து விளை யாட்டுக்கள் திரைக்கதையின் விறு விறுப்பைக் கூட்டுகின்றன. நாயகனின் ஒவ்வொரு நகர்வுக்கும் செக் வைக் கும் எதிர்நாயகனின் செயல்கள் பரபரப்பூட்டுகின்றன. அடுத்து என்ன நடக்குமோ என்னும் பதற்றத்தை உரு வாக்குவதில் இயக்குநர் வெற்றி பெறுகிறார்.
கொள்ளைகளை அரவிந்த் சாமிதான் செய்தார் என்பதைக் கண்டுபிடித்து அவரைப் பொறிவைத்துப் பிடிக்கும் காட்சிகள் விரைவாக நகருகின்றன. இரண்டாம் பாதியில் வேகம் இருந்தா லும், காட்சிகள் முழுக்க ஜெயம் ரவி, அரவிந்த் சாமி ஆள் மாறாட்டக் களத்திலேயே பயணிப்பது கொஞ்சம் இழுவைதான்.
சுவாரஸ்யமான விஷயத்தைக் கொண்டிருந்தாலும் திரைக்கதையி லுள்ள ஓட்டைகள் அதைப் பலவீனப் படுத்துகின்றன. ஆள்மாற்றாட்டத்தில் ஈடுபடும் அரவிந்த் சாமியைப் பற்றித் தன் ஆட்களுக்கு எச்சரிக்க செல்போன் மூலமே முயற்சி செய்கிறார் ரவி. இவரால் எச்சரிக்கப்படுபவர்கள் அடுத் தடுத்துக் கொல்லப்படும்போதும் இவர் தொடர்ந்து அதையே செய்து கொண்டிருக்கிறார். கமிஷனர் அலுவல கத்துக்குள் நாசர் அவ்வளவு எளிதாக நுழைவது நம்பும்படியாக இல்லை. கடைசிக் காட்சியில் ஹன்ஸிகா எப்படி கமிஷனர் அலுவல கத்துக்கு வந்தார் என்பது தெரிய வில்லை. அந்தக் காட்சியில் மற்ற போலீஸ்காரர்கள் எல்லாம் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்ப தும் தெரியவில்லை.
வில்லன், நாயகனின் குணாதிசயங் கள் இடம் மாறி வெளிப்படும் இடங்களில் இருவருமே சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். அதில் அரவிந்த் சாமியின் வசீகரமான நக்கல் சிரிப்பு மட்டும் ஜெயம் ரவியிடம் இல்லை. வில்லத்தனம் செய்யும்போது ஜெயம் ரவியின் உடல்மொழியில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அதே ‘அழகான அசட்டுப் பெண்’ கதாபாத்திரம்தான் ஹன்சிகாவுக்கு. உற்சாகமும் துள்ளலுமாய் அவர் நடிப்பு வசீகரிக்கிறது. பேராசிரியராக வரும் நாசர், ஆணையராக வரும் பொன்வண்ணன் கதாபாத்திரங்களும் வலு சேர்க்கின்றன. பணிவாகத் தோற்றமளிக்கும் நாசர் திடீரென்று தீவிர முகம் காட்டும்போது அசரவைக்கிறார்.
டி.இமானின் இசையில் ‘டமாலு டுமீலு’ அதிரடிக் குத்து. தாமரையின் வரிகளில் மிளிரும் ‘செந்தூரா’ வித்தி யாசமான தொனியில் வசீகரிக் கிறது. சவுந்தரராஜனின் ஒளிப்பதிவு படத்துக்கு வளமையான தோற்றத்தைத் தருகிறது.
சில பல ஓட்டைகள், ஆங்காங்கே இழுவை ஆகியவை இருந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையாலும் நடிப்பாலும் கவர்கிறான் ‘போகன்’.