சினிமா எடுத்துப் பார் 77: ரஜினி பேசிய இங்கிலீஷ்!

சினிமா எடுத்துப் பார் 77: ரஜினி பேசிய இங்கிலீஷ்!
Updated on
3 min read

அமெரிக்காவில் இருந்து திரும்பிய கொள்ளபுடி மாருதி ராவ் ‘சம்சாரம் ஒக சதுரங்கம்’ படத்தை பார்த்தார். ‘ ‘பேட்ச் பேட்ச்சாக எடுத்ததே தெரியலை. நல்லா தொகுத்துட்டீங்க. உங்களுக்கும், எடிட்டர் விட்டலுக்கும் பாராட்டுகள்!’’ என்று சொல்லி என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். அந்தப் படத்தை பிரபல தயாரிப்பாளர் ராமா நாயுடு தெலுங்கில் விநியோகம் செய்தார். அந்தப் படம் ஆந்திராவில் பெரிய வெற்றி.

அடுத்து, கே.பாலசந்தர் சாரின் ‘கவிதாலயா’ தயாரிப்பில் நான் இயக் கிய படம் ‘வேலைக்காரன்’. இப்படத் தில் ரஜினியும், செந்திலும் சேர்ந்து நகைச்சுவை நடிப்பை கொட்டினார் கள். கே.ஆர்.விஜயா உணர்ச்சிபூர்வ மான காட்சிகளில் கண்ணீரை வர வழைத்துவிடுவார். கதாநாயகி அமலா அழகானவர், அமைதியானவர். நடிப்பில் திறமையை காட்டிவிடுவார். சரத்பாபு எல்லா விதமான பாத்திரங்களிலும் நடித்து புகழ்பெற்றவர். இவர் எங்கள் குழுவில் ஓர் உறுப்பினர். நாசரின் வளர்ச்சி அவர் திறமைக்கு கிடைத்தப் பரிசு. வி.கே.ராமசாமி போல் குணச்சித்திர நடிகர் கிடைப்பது ரொம்ப கஷ்டம். அதேபோல அவருக்கு நகைச்சுவையும் இயல்பாக வரும். இப்படி நல்ல கலைஞர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்துதான் இந்தப் படத்தை வெற்றிப்படமாக்கினோம்.

கதை முழுக்க ஒரு ஹோட்டலை மையமாக வைத்து நகரும். கதைப்படி, கிராமத்தில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வருவார் ரஜினி. ஒரு ஹோட்டலில் வேலை செய்யும் செந்தில், ஹோட்டல் நிர்வாகி நாசரிடம் ரஜினியை தன் ஊர்காரர் என அறிமுகம் செய்து வேலை கேட்பார். ரஜினியிடம் இண்டர்வியூ செய்யும் நாசர், ‘‘உனக்கு இங்கிலீஷ் பேசத் தெரியுமா?’’ என்று கேட்பார். அப்போது ரஜினி பேசும் இங்கிலீஷ் படத்தின் ஹைலைட்டாக அமைந்தது. அந்த அலட்டல் ஆங்கில வசனத்தை பாலசந்தர் சார் எழுதித் தந்தார். ரஜினியின் ஸ்டைலான ஆங்கிலம், தடாலடி உச்சரிப்பு, ஜெட் வேகம் இதெல்லாம் திரை யரங்கில் கைத்தட்டலை அறுவடை செய்தது.

படத்தின் 100-வது நாள் விழாவில் கேடயம் வழங்க வந்த ‘சிலம்புச் செல்வர்’ மா.பொ.சி அவர் கள், ‘‘ரஜினி படத்தில் இங்கிலீஷ் பேசு கிறாரே… அதற்கு என்ன அர்த்தம் என்று என் பேரனிடம் கேட்டேன். ‘அதெல்லாம் ரஜினி இங்கிலிஷ்… உனக்குப் புரியாது தாத்தா’ என்று கூறிவிட்டான். அது எனக் குப் புரியவில்லை என்றாலும், ரஜினியின் அந்த வேகமான நடிப்பு அற்புதம்!’’ என்று ரஜினியைப் பாராட்டினார்.

‘வேலைக்காரன்’ படம் ஒரு ஹோட் டல் பின்னணியைக் கொண்டதால், இந்தியாவில் உள்ள மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டல்களிலெல்லாம் ஷூட்டிங் செய்ய நினைத்தோம். சென்னை சோழா ஹோட்டல் தொடங்கி டெல்லி, ஆக்ரா, நகர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள ஹோட்டல்களில் படப்பிடிப்பை நடத்தினோம். இதற்கான ஏற்பாடுகளை ‘கவிதாலயா’ தயாரிப்பு நிர்வாகி நடராஜன் சிறப்பாக செய்து தந்தார். டெல்லி தமிழ்ச் சங்கத்தினரும் படப்பிடிப்புக்கு பல உதவிகளை செய்தது மட்டுமின்றி, சில காட்சிகளில் குடும்பத்தோடு வந்து நடித்தார்கள். அவர்களுக்கு நன்றி.

தொடர்ச்சியாக பல்வேறு இடங் களில் படப்பிடிப்பு நடந்ததால் பாடல் பதிவுக்கு எனக்கு நேரம் கிடைக்கவில்லை. அப்போது பாலசந்தர் சார் ‘‘முத்துராமன், நீங்க ஷூட்டிங்ல கவனம் செலுத்துங்க. எனக்குத்தான் பாட்டுக்கான சூழல் தெரியுமே. நான் கவிஞர் மு.மேத்தாவிடம் பாடல்கள் எழுதி வாங்கி, இளையராஜாவோடு அமர்ந்து பாடல் ஒலிப்பதிவை கவனித்து, உங்களுக்கு அதை அனுப்புகிறேன்’’ என்றார். மிகப் பெரிய இயக்குநரான அவர், என் பணிச் சுமையை சுமப்பதைப் போல பொறுப்பேற்றுக் கொண்டது எனக்குப் பெருமையாக இருந்தது. ‘வேலைக்காரன்’ பாடல்கள் சிறப்பாக அமைய மும்மூர்த்திகள் காரணம். கே.பி சார், இசைஞானி, கவிஞர் மு.மேத்தா.

கவிஞர் மு.மேத்தாவைப் பற்றி இங்கே சொல்ல வேண்டும். தமிழகத் தின் அற்புதமான கவிஞர்களில் ஒருவர். புதுக்கவிதை எழுதுவதில் சிகரம் தொட்டவர். இவரது ‘கண்ணீர்பூக்கள்’ 25-க்கும் மேலான பதிப்புகளைத் தாண்டி அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில், ‘வா வா கண்ணா வா’ பாடலில் ஒரு இடத்தை சுட்டிக்காட்ட விரும்புறேன்.

தாஜ்மஹாலின் காதிலே

ராம காதை கூறலாம்;

மாறும் இந்த பூமியில்

மதங்கள் ஒன்று சேரலாம்!’

- என்று எழுதியிருப்பார். மத நல்லிணக்கத்தை இதைவிட எப்படி அருமையாகச் சொல்ல முடியும்! இதை எழுதிய மு.மேத்தா ஓர் இஸ்லாமியர் என்பதே அவர் வீட்டுக் திருமணத்துக்குப் போனபொதுதான் எனக்குத் தெரியும். கலை உலகம் மதம், ஜாதிகளுக்கு எல்லாம் அப்பாற்பட்டது என்று நினைக்கும்போது ‘மகிழ்ச்சி!’

‘மாமனுக்கு மயிலாப்பூருதான்’ பாடலுக்கு நடனம் ஆட மாமாவும், மாமியும் அங்கே கிடைக்கவில்லை. கையில் வெண்ணெய்யை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன் என்று எங்களுடைய நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவையும், துணை இயக்குநர் எஸ்.எல்.நாராயணனையும் ஆட வைத்து படமாக்கினோம். புலியூர் சரோஜாவுடன் போட்டிப் போட்டு நடனம் ஆடி கைதட்டல் வாங்கினார் எஸ்.எல். நாராயணன்.

காஷ்மீர், நகருக்கு நாங்கள் படப்பிடிப்புக்குப் போன நேரத்தில் அங்கே கடும் குளிர். மலைகள் பனியில் மூடிக் கிடந்தன. அந்த அழகான சூழலில் ரஜினியையும் அமலாவையும் நடிக்க வைத்து ‘வா.. வா.. கண்ணா’ பாடலை படமாக்கினோம். ஒட்டுமொத்த படப்பிடிப்புக் குழுவே ஸ்வெட்டர், கம்பளி கோட், பூட்ஸ் அணிந்துகொண்டு பரபரப்பாக இயங்கிகொண்டிருக்க, அந்தப் பாடல் காட்சியில் அமலா பரத நாட்டிய உடையில் வெறும் காலுடன் நடனம் ஆட வேண்டும். அந்தக் குளிரை எப்படி சமாளித்து நடித்தார் அமலா என்பதை அடுத்து சொல்கிறேன்.

- இன்னும் படம் பார்ப்போம்… | படங்கள் உதவி: ஞானம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in