

டார்லிங்’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமான இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு’. இந்தப் படத்தில் ஆக்ஷன் ஹீரோவாக நடித்திருக்கும் அவரிடம் பேசியதிலிருந்து…
‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' ட்ரெய்லரைப் பார்த்தால் சண்டைக் களத்தில் இறங்கிவிட்டீர்கள் போல இருக்கிறதே?
‘டார்லிங்' முடிந்தவுடன் அந்தப் படத்தின் இயக்குநர் சாம் உடன் மீண்டும் ஒரு படம் பண்ண வேண்டும் எனத் தீர்மானித்தேன். அப்படித்தான் இந்தப் படம் ஆரம்பித்தது. ஆனந்தி, சரவணன், மொட்டை ராஜேந்திரன், கருணாஸ் இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். முழுக்க காமெடி படம்தான், அதில் கொஞ்சம் ஆக்ஷன் இருக்கும். மக்கள் திரையரங்குக்கு வந்தார்கள் என்றால் கைதட்டி ரசிக்கும் வகையில் இருக்கும்.
காமெடிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களே பண்றீங்களே. எப்போது நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் பண்ண திட்டம்?
நான் கமர்ஷியல் படங்கள்தான் பண்ண வந்திருக்கிறேன். இங்கு நடிப்புத் திறமையைக் காண்பிக்க வரவில்லை. ‘இவன் படம் ஜாலியா இருக்கும்பா’ என்று நம்பி மக்கள் வர வேண்டும். அது மட்டும்தான் என் எண்ணம். நான் பெரிய நடிகன் எல்லாம் கிடையாது. என்னுடைய வரம்புகள் என்னவென்று எனக்குத் தெரியும். அதற்காக எனக்கு நடிப்பு தெரியாது என்றும் கிடையாது. மக்கள் ரசிக்கிற படங்கள் பண்ணினால் போதும். அவ்வளவுதான்.
ராஜேஷ், சசி, பாண்டிராஜ் என வரிசையாகப் படங்கள் ஒப்புக்கொண்டிருக்கிறீர்களே?
அடுத்து ‘ப்ரூஸ்லீ ' செப்டம்பரில் வரும். அது ஒரு அவல நகைச்சுவை ஆக்ஷன் படம். ‘சூது கவ்வும்' பாணியில் இருக்கும். அதைத் தொடர்ந்து ராஜேஷுடன் ‘கடவுள் இருக்கான் குமாரு' வெளியாகும். சந்தானம் இல்லாத இயக்குநர் ராஜேஷின் படம். நான், ஆர்.ஜே.பாலாஜி, சிங்கம்புலி, ரோபோ சங்கர் எனப் புதிய கூட்டணியோடு களம் இறங்கியிருக்கிறோம்.
இந்தப் படத்துக்காக ஆனந்தியை நான்தான் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தேன் என்று செய்திகள் வெளியாகியிருக்கின்றன. உண்மையில் ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா' பார்த்து இயக்குநர் சாம் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்துக்கு ஒப்பந்தம் செய்தார். இயக்குநர் ராஜேஷும் ஆனந்திதான் இந்த கேரக்டருக்கு கரெக்ட் என்று ஒப்பந்தம் செய்தார். கதாநாயகி விஷயத்தில் இப்போதும் எப்போதும் நான் தலையிட மாட்டேன். இயக்குநர் பாண்டிராஜ் படம் பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
ராஜீவ் மேனன் படத்தில் ஜி.வி. பிரகாஷ் என்று செய்திகள் வெளியானதில் பலருக்கும் ஆச்சரியம்!
திடீரென்று ஒரு நாள் போன் பண்ணினார் ராஜீவ் சார். கதையைச் சொன்னார். இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்று சொல்லலாம். மூன்று பாடல்களை முடித்துக் கொடுத்திருக்கிறார் ரஹ்மான் அங்கிள். எனக்கு லோக்கல் பையன் கதாபாத்திரம்.
வெளிப் படங்களுக்கு இசையமைப்பதைக் குறைத்துக்கொண்டுவிட்டீர்களா?
அப்படி எதுவும் இல்லயே. ‘தெறி' பண்ணினேன். எனக்கென்று ஒரு சில இயக்குநர்கள் இருக்கிறார்கள். ‘மீண்டும் ஒரு காதல் கதை' என்னுடைய இசையில் வெளிவர இருக்கிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளைத் தொடர்ந்து ‘காக்கா முட்டை' மராத்தி ரீமேக் மூலமாக அங்கும் இசையமைப்பாளராக அறிமுகமாகிறேன். இப்போது நான் நடிக்கும் படங்களில் ராஜீவ் மேனன் படம் தவிர மற்ற படங்களுக்கு நானேதான் இசையமைக்கிறேன். நடிப்பு - இசை என மாறி மாறிக் கவனம் செலுத்திவருவதால், வெளிப் படங்களைத் தேர்வு செய்து இசையமைக்கிறேன்.
திரையுலகில் உங்களுக்கு நெருக்கமான நண்பர்கள் என்று யாருமே இல்லையா?
இல்லை. பத்து வருடங்கள் இசையமைப்பாளராக இருந்துவிட்டேன். நெருங்கிய நண்பர்களாக இருந்தால் சண்டையில்தான் முடிகிறது. ஏதோ ஒரு இடத்தில் என்னுடைய எண்ணமும் அவர்களுடைய எண்ணமும் வித்தியாசப்படுகிறது. அதனால் எனக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாருமே கிடையாது.