

“பெங்களூருவை விட்டு ஓட வேண்டும் என நினைத்தேன். அதற்கான காரணங்களை இப்போது சொல்ல முடியாது. அந்தச் சமயத்தில் சரியாக அமைந்த வாய்ப்புதான் 'புரூஸ்லீ' “ என்று சிரித்தபடியே தொடங்கினார் கீர்த்தி கர்பந்தா.
தமிழ் சினிமாவில் முதல் படத்தில் நடித்த அனுபவம் எப்படி?
ஜிவி பிரகாஷுடன் நடித்ததில் எந்தச் சிக்கலும் இல்லை. மிகவும் வேடிக்கையான மனிதர். படத்தில் நான் கல்லூரி மாணவியாக, ஆண் பிள்ளைகளைப் போல துடிக்காக வளர்ந்த பெண்ணாக நடிக்கிறேன். நிஜத்திலும் நான் அப்படித்தான். எனக்கு இருக்கும் நண்பர்களில் பலர் ஆண்களே. ஆண் பெண் இருவரிடமும் நட்பாக இருக்க வேண்டும் என்று சொல்லித்தான் வளர்த்தார்கள். அடுத்தது நான் கடந்த ஆறு வருடங்களாக விருப்பத்துடன் டென்னிஸ் விளையாடி வந்தேன். அப்போது என்னைத் தவிர அங்கு விளையாடியவர்கள் அனைவரும் ஆண்களே. அதனால் இந்த வேடத்தில் நடிப்பது சிரமமாக இருக்கவில்லை. கோலிவுட் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியது நன்றாக இருந்தது.
பெண்களுக்கு எதிராக பெங்களூருவில் பாலியல் வன்முறைகள் அதிகம் நடப்பதாகக் கூறப்படுகிறதே?
பெங்களூரில் மட்டுமல்ல நிறைய மெட்ரோ நகரங்களில் இது போன்ற சம்பவங்கள் நடந்து அவை கண்டுகொள்ளப்படாமல் போகின்றன. இது போன்ற சம்பவங்களைத் தீவிரமாக விசாரிக்க வேண்டும். பாதுகாப்புக்கான முழு உரிமை பெண்களுக்கு இருக்கிறது. என்ன செய்ய வேண்டும், என்ன அணிய வேண்டும் என யாரும் பெண்களுக்கு சொல்லத் தேவையில்லை. ஆண்களைப் போல நாங்களும் மனிதர்களே.
இந்தியில் ‘ராஸ்' படத்தின் மூலம் அறிமுகமாகி இருப்பது குறித்து…
‘ராஸ்', ‘புரூஸ்லீ' இரண்டும் ஒரே நேரத்தில் நான் ஒப்புக்கொண்ட படங்கள். ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கிறோமே என நினைத்தபோது ‘ராஸ்' வாய்ப்பு வந்தது. அது ஒரு த்ரில்லர் படம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு ரொமேனியாவில் நடந்தபோது 18 டிகிரியில் குளிர் இருந்தது. அனைத்து சண்டைக் காட்சிகளையும் டூப் இன்றி நானே செய்துள்ளேன். இப்போது நினைத்துப் பார்க்கும்போது திருப்திகரமாக இருக்கிறது. உடலளவில் அதிக வேலை வாங்கிய படம்.
தமிழ் திரையுலகில் உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?
சூர்யா. ‘காக்க காக்க' நான் பார்த்த முதல் தமிழ் படம். அந்தப் படத்தின் இயக்குநர் யார் எனத் தெரிந்து கொண் டேன். பிறகு ஒருநாள் ‘யே மாய சேஸாவே' பார்த்து அந்த இயக்குநரை இன்னும் பிடித்துப் போனது. அவர் திரையில் மாயம் செய்வதாகத் தோன்றியது.
‘ராஸ்' படத்தில் முத்தக்காட்சிகளில் நடித்துள்ளீர்களே?
முத்தக் காட்சியில் நடிப்பதற்கு முன் யோசனையாகத்தான் இருந்தது. அந்தக் காட்சி முடிந்து திரையில் பார்க்கும்போது அது பெரிய விஷயமாகத் தெரியவில்லை. முத்தமும் ஒரு உணர்வுதான். ஒரு காதல் படத்தில் நெருக்கம் காட்ட வேண்டும் என்றால் அப்படி நடித்தாக வேண்டும். அதில் எந்தத் தவறும் இல்லை.
உங்களுடைய படங்களுக்கு வரும் விமர்சனங்களை எப்படி எடுத்துக் கொள்வீர்கள்?
மற்றவர்கள் சொல்லும் முன் நானே என்னை விமர்சனம் செய்து கொள்வேன். யாராவது என்னைப் பாராட்டினால் அதை அப்படியே நூறு சதவீதம் சீரியஸாக எடுத்துக்கொள்ள மாட்டேன். எனது உள்ளுணர்வை வைத்தே மதிப்பிட்டுக் கொள்வேன். எனது தவறுகளை நானே பார்த்து திருத்திக் கொள்வேன்.