

சண்டை, த்ரில்லர், ஹாரர் வகைப்படங்கள்தான் இப்போது ஹாலிவுட்டைச் சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றன. சண்டையும் த்ரில்லரும் கலந்த கலவையில் உருவாகும் படங்களுக்கு ஹாலிவுட்டில் தனி மவுசு உண்டு. அப்படி ஒரு படமாக ஹாலிவுட்டில் உருவாகி, வெளியீட்டுக்குத் தயாராகிக்கொண்டிருக்கிறது ‘தி அக்கவுண்டன்ட்’ படம்.
நாயகன் கிறிஸ்டின் உல்ஃப் (பென் அஃப்லக்) மிகப் பெரிய கணித விஞ்ஞானி. இவர் சின்ன ஊரில் உள்ள ஒரு சார்டட் அக்கவுண்டட் அலுவலத்தின் பின்னணியில் தடயவியல் கணக்காளராக வேலை செய்கிறார். கருவூலத் துறையின் கணக்கு வேலை இவருக்கு வருகிறது. அந்த வேலையில், மில்லியன் கணக்கான டாலர்கள் கணக்கில் வராமல் வித்தியாசப்படுவதை நாயகன் மோப்பம் பிடிக்கிறார். அது தொடர்பாக ஏழு முரண்பாடுகளையும் கண்டுபிடிக்கிறார். ஆபத்து நிறைந்த அந்த முரண்பாடுகளை எப்படிக் கண்டுபிடித்து நாயகன் தீர்க்கிறார் என்பதைச் சொல்லும் படமே ‘தி அக்கவுண்டன்ட்’.
நாயகன் கிறிஸ்டின் உல்ஃப் ஒவ்வொரு புதிருக்கும் விடை கண்டுபிடிக்கும் காட்சிகள் விறுவிறுப்பாகப் படமாக்கப்பட்டுள்ளன. இந்தப் படத்தின் டிரெய்லரே ஹாலிவுட்டில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ‘மிராக்கிள்’, ‘வாரியர்’ போன்ற சில ஹாலிவுட் படங்களை மட்டுமே இயக்கி, பெயரெடுத்த கெவின் ஓ’கொன்னோர் கைவண்ணத்தில் இந்தப் படம் உருவாகியிருக்கிறது.
நாயகியாக அன்னா கென்ட்ரிக் நடித்திருக்கிறார். படத்துக்கு இசை மார்க் இஷாம். த்ரில்லர் படங்களுக்கே உரிய இசைக் கோவை படத்தை மேலும் வலுவாக்குகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2015-ம் ஆண்டு ஜனவரியில் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. 128 நிமிடங்கள் ஓடக்கூடிய இப்படம், உலகெங்கிலும் அக்டோபர் 14-ம் தேதி வெளியாகிறது.