

இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனியின் ‘அப்பா’ திரைப்படம் இன்று வெளியாகிறது. அந்தப் படத்தைப் பிரபலப்படுத்தும்விதமாகக் கடந்த இரண்டுமாத காலமாகப் பிரபல நடிகர்கள், இயக்குநர்கள், பிரபலங்கள் ஆகியோரிடம் அவர்களது அப்பாக்களைப் பற்றிய நினைவுகளை வீடியோ பேட்டிகளாக எடுத்து யூடியூபில் வெளியிட்டுவந்தார் சமுத்திரக்கனி.
இதற்கு இணையவாசிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது. சமுத்திரக்கனி மலையாளத் திரைப்படங்களிலும் நடித்துவருபவர் என்பதால் அங்கே மோகன்லால், மலையாள நகைச்சுவை நடிகர் சூரஜ் வெஞ்சராமூடு ஆகியோரின் அப்பா நினைவுகளும் இணையத்தில் வலம் வந்தன. ஆனால் தற்போது கேரளத்தைக் கலக்கிக்கொண்டிருக்கிறது மஞ்சு வாரியார் ‘அப்பா’ படக்குழுவுக்காக அளித்த வீடியோ பதிவு.
ஒரு மாணவியின் விசித்திர நோய்க்கான சிகிச்சைக்கு மஞ்சு பொருளாதார உதவிகள் செய்துவந்தார். மருத்துவ முயற்சிகள் பயனளிக்காமல் அந்த மாணவி இறந்து போகவே, இரங்கல் கடிதம் ஒன்றை மலையாளத்தில் மஞ்சு எழுத, பத்திரிகைகள் அதைப் பிரசுரித்திருந்தன.
இலக்கிய செறிவும், மொழி ஆளுமையும் கொண்டிருந்த அந்த இரங்கல் கடிதத்தை கடவுள் மட்டும் வாசித்திருந்தால் பறித்த உயிரை திரும்பக் கொடுத்திருப்பார் என்று அவரது ரசிகர்கள் சமூகவலைத்தளத்தில் உருகினார்கள். தற்போது தன் அப்பா’ குறித்த மஞ்சுவின் நினைவுகள் கேரளத்தைக் கண்ணீர் சிந்த வைத்துக்கொண்டிருக்கின்றன.
மஞ்சு வாரியார் நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தவர். அப்பாவுக்குச் சீட்டு நிறுவனம் ஒன்றில் வேலை. சொற்ப சம்பளம். சின்ன வாடகை வீடு. மாலை வேளைகளில் அப்பா வீடு திரும்புவதை எதிர்பார்த்து, கேட் கம்பிகளுக்கிடையே முகம் புதைத்து நின்ற தன் பால்யத்தின் எதிர்பார்ப்பை அப்படியே சலனச் சித்திரமாகத் தன் நினைவுகள் வழியே ஓட்டிக்காட்டினார். அப்போது க்ளிசரின் போடாமலேயே அவரது கண்களிலிருந்து துளிகள் விழுகின்றன. நினைவுகள் தொடர்கின்றன.
“கடவுள் கொடுத்த வரம் கிடைக்கவில்லை எனக்கு. கடவுளே கிடைத்தார் வரமாக... என் அப்பாவாக..” என்று பச்சைத் தமிழில் பகிரத் தொடங்கி... “எங்களைச் சிரிக்கவைப்பதற்காக அப்பா உள்ளுக்குள் பலமுறை அழுதிருக்கிறார். அப்பாவின் வியர்வைத் துளிகளால் கோக்கப்பட்டதுதான் எனது நடனக் கால் சலங்கை” என்று மலையாளத்தில் அவர் தழுதழுக்கும்போது கேட்பவர்கள் கண்களிலும் கண்ணீர் கோக்கும்.
சமுத்திரக்கனிக்கு மஞ்சுவிடமிருந்து இப்படி ஒரு அழுத்தமான ‘அப்பா’ பதிவு பெறத் தோன்றியது எப்படி என்று தெரியவில்லை. மஞ்சுவின் ஆழ்மனத் திறப்பு ஒரு அபூர்வமான நினைவுப் பதிவாக மாறியிருப்பதை மலையாளப் பத்திரிகைகளும் கொண்டாட ஆரம்பித்திருக்கின்றன. மஞ்சுவின் இந்தக் காணொளி சமுத்திரக்கனியின் ‘அப்பா’வை, மலையாள மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கக் கண்டிப் பாய்க் கைகொடுக்கும் என்று நம்பலாம்.