தாமிரபரணியும் தமிழ் சினிமாவும்

தாமிரபரணியும் தமிழ் சினிமாவும்
Updated on
2 min read

சைவமும், தமிழும் கமழும் திருநெல்வேலி ஊரைச் சுற்றிலும் திரையரங்குகள் உண்டு. நெல்லைவாழ் மக்கள் நெல்லையப்பர் கோயிலுக்குப் போகிறார்களோ, இல்லையோ, திரையரங்குகளுக்குச் சென்று தினமும் கையெழுத்துப் போடத் தவறுவதில்லை.

அடிப்படையில் கலாரசனையும், எள்ளலும், விமர்சனப் பார்வையும் கூடிய நெல்லைவாசிகளுக்குள் கடைசிவரைக்கும் வெளியே தெரியாமலேயே போன பல கலைஞர்கள் உண்டு. சுப்புடுவைத் தூக்கிச் சாப்பிடும் பல விமர்சகர்களும் உண்டு.

‘ராயல் டாக்கீஸ் சொவத்துல தண்டியா ஹரிதாசுன்னு தண்டியா செதுக்கியே வச்சிருந்தாம்லா! எங்க கனகு பெரியம்ம பாத்த ஒரே படம் அதான். அதும் ஏளெட்டு மட்டம் பாத்திருக்கா! டி.ஆர்.ராஜகுமாரிய என்னா ஏச்சு ஏசுவாங்கெ!’ வருடக்கணக்கில் ஓடிய தியாகராஜ பாகவதரின் ‘ஹரிதாஸ்’ திரைப்படத்தின் பெயரை ராயல் டாக்கீஸின் சுவற்றில் செதுக்கி வைத்திருந்ததை நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபத்தின் கல்படிக்கட்டுகளில் அமர்ந்தபடி, இன்றைக்கும் பெருமையாகச் சொல்லும் நரைத்த தலைக்காரர்கள் இருக்கிறார்கள்.

திருநெல்வேலி மண்ணிலிருந்து தமிழ் சினிமாவுக்குச் சென்று புகழ் பெற்ற கலைஞர்கள் பலர். பெருமையுடன் குறிப்பிட்டுச் சொல்ல ஒரே ஒரு கலைஞர் போதும். வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும், நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் நடிப்பது தெரியாமல் வாழ்ந்து காட்டிய திருநெல்வேலி எஸ்.பாலையாதான், அந்த மகா கலைஞர். பாலையாவைத் தமிழ் சினிமாவுக்குத் தந்தது தாமிரபரணி மண்தான்.

சொ. விருத்தாச்சலம் என்ற புதுமைப்பித்தன், திருநெல்வேலியைச் சேர்ந்தவர் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. ஜெமினி நிறுவனத்தின் படங்களில் பணிபுரிந்த புதுமைப்பித்தன், தியாகராஜ பாகவதரின் ‘ராஜமுக்தி’ திரைப்படத்தின் திரைக்கதைப் பணியின்போதுதான் காலமானார்.

இவர்கள் தவிர ஏராளமான இசைக்கலைஞர்கள் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள். எட்டுக் கட்டையும் அநாயசமாக எட்டிப் பிடிக்கும் அவரைப் போலப் பாட வேண்டும் என்று டி.ஆர். மகாலிங்கத்தைப் பிரயத்தனப்பட வைத்த எஸ்.ஜி. கிட்டப்பா, செங்கோட்டைக்காரர். ஆறாண்டு காலமே அவருடன் வாழ்ந்து, பின் காலமெல்லாம் நெற்றி நிறைய திருநீறும், வெள்ளுடையுமாகப் பாடிவந்த கே.பி. சுந்தராம்பாளை மயக்கியது, ‘எல்லோரையும் போலவே என்னை எண்ணலாகுமோடி’ என்று பாடிய செங்கோட்டை கங்காதரன் கிட்டப்பாவின் குரல்தான்.

தனது குருநாதர்களில் ஒருவராக இளையராஜாவால் போற்றப்படுபவரும், இன்றுவரை கர்நாடக சங்கீத மேடைகளில் தவறாமல் பாடப்பட்டுவரும் பாரதியின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலுக்குக் கலைவாணரின் ‘மணமகள்’ திரைப்படத்துக்காக மெட்டமைத்தவருமான சி.ஆர். சுப்பாராமன் மற்றொரு பெருமைமிகு திருநெல்வேலிக் கலைஞர். தமிழ்த் திரையிசைப் பாடல்களில் சாகாவரம் பெற்ற பாடலான ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்தின் ‘சிங்கார வேலனே தேவா’ பாடலில் எஸ். ஜானகியோடு மல்லுக்கு நின்ற நாதஸ்வர நாதத்துக்குச் சொந்தக்காரர் ‘காருகுறிச்சி’ அருணாசலம் என்னும் மாமேதை. அவரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் சின்னஞ்சிறு கிராமமான காருகுறிச்சி திருநெல்வேலியில்தான் உள்ளது.

திருநெல்வேலியுடன் இணைந்திருந்த தூத்துக்குடியில் பிறந்த அசலான கலைஞன் ஜே.பி. சந்திரபாபுவை நீக்கிவிட்டு தமிழ் சினிமாவின் வரலாற்றை எழுதிவிடவே முடியாது.

திருநெல்வேலிக்காரரான வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகத்துக்கும், தமிழ் சினிமாவுக்கும் கலைவாணர் காலத்திலிருந்தே தொடர்பிருக்கிறது. என்.எஸ். கிருஷ்ணனின் எண்ணற்ற படங்களுக்கு நகைச்சுவைப் பகுதிகள் எழுதிய சுப்பு ஆறுமுகம் அவர்களின் கதையைத்தான் இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் ‘சின்னஞ்சிறு உலகம்’ என்னும் திரைப்படமாக இயக்கினார். சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்படும் ‘டெல்லி’ கணேஷ், நியாயமாக ‘நெல்லை’ கணேஷ்தான். திருநெல்வேலி மாவட்டத்தில் ‘வல்லநாடு’ என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இசையமைப்பாளர்களில் ரவணசமுத்திரம் பரத்வாஜ், மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் கொள்ளுப் பேரனும், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியின் மாணவருமான விஜய் ஆண்டனி போன்றோரும் திருநெல்வேலிக்காரர்களே. ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் தொடர்ந்து பாடிவரும் பாடகர் ஸ்ரீநிவாஸ், அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர்.

திரைப்பட இயக்குநர்களையும் திருநெல்வேலி தந்திருக்கிறது. ’இதயம்’ திரைப்படத்தை இயக்கிய, அடிப்படையில் ஓவியரான இயக்குநர் கதிர், ‘தில்’, ‘தூள்’ போன்ற வணிக ரீதியான வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் தரணி, இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா போன்ற இயக்குனர்கள் தாமிரபரணி மண்ணிலிருந்து வந்தவர்கள். இப்போது திருமண மண்டபங்களாக மாறிவிட்ட பார்வதி, லட்சுமி திரையரங்குகளில் படங்கள் பார்த்து வளர்ந்த ஒருவரான இயக்குநர் விக்ரமன்தான் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராகப் பதவி வகிக்கிறார்.

இவர்கள் போக திருநெல்வேலிக் கலைஞர்களில் குறிப்பிட்டுச் சொல்ல ஒரு கவிஞன் உண்டு. காலமான பின்னும் அவனது கவிதைகளைத் தமிழ் சினிமா தொடர்ந்து பயன்படுத்திவருகிறது. ஏ.வி. மெய்யப்ப செட்டியாரிலிருந்து மலையாளத் திரையுலக இயக்குனர் ப்ளெஸ்ஸி வரைக்கும் அந்தக் கவிஞனின் பாடல்களை சினிமாவில் பயன்படுத்திவருகிறார்கள். தாமிரபரணியின் மேல் மாறாக் காதலும், திருநெல்வேலியின் மேல் தீரா மோகமும் கொண்ட அந்தக் கவிஞனின் பெயர் சுப்பையா. சுப்பிரமணிய பாரதி என்றும் கூறுவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in