

மூன்றாவது படம்
‘ஓகே கண்மணி' படத்துக்குப் பிறகு தமிழில் தலைகாட்டாமல் தாய்மொழியில் மட்டுமே நடித்து வந்தார் மம்முட்டியின் புதல்வரான துல்கர். தமிழில் நல்ல கதைகள் சிக்கவில்லை என்றார். தற்போது ரா.கார்த்திக் என்ற புதியவர் சொன்ன கதை பிடித்துவிட தனது மூன்றாவது தமிழ்ப் படத்துக்கு ஓகே சொல்லிவிட்டார். படத்தில் மொத்தம் மூன்று நாயகிகள். நிவேதா பெத்துராஜை இப்போதைக்கு உறுதிப்படுத்தி விட்டார்களாம்.
விரைவில் திருமணம்
வசூல் குயின், நடிப்புப் புயல் என்றெல்லாம் வருணிக்கப்படும் கங்கணாவுக்கு கடந்த ஆண்டு ஒரு படம்கூட வெளியாகவில்லை. என்றாலும் ஹ்ரித்திக் ரோஷனோடு இணைத்துக் கிசுகிசுக்கப்பட்டதில் தொடர்ந்து செய்திகளில் இடம்பிடித்து வந்தார். ஆனால், இந்த ஆண்டு இதுபோன்ற செய்திகளுக்கான தேவை எதுவும் அவருக்கு இருக்காது. இந்த ஆண்டு கங்கணாவின் நடிப்பில் ‘ரங்கூன்’,‘சிம்ரன்’ என இரண்டு படங்கள் வெளியாவதால் அவற்றைப் பற்றிய செய்திகள் வலம் ஆரம்பித்தன. ஆனால் கங்கணா தனது தனிப்பட்ட செய்திகளே அதிகம் வெளியாக வேண்டும் என்று எதிர்பார்ப்பதுபோல “நான் விரைவில் திருமணம் செய்துகொள்வேன். அது காதல் திருமணமாகவும் இருக்கலாம்!’’ என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார்.
சென்னையில் ஒரு ‘பருத்தி வீரன்’
“சினிமாவில் ஏதாவது வாய்ப்பு கிடைக்கும் என வீட்டுக்குத் தெரியாமல் சென்னையைச் சுற்றி வந்தேன். ‘சாட்டை’ பட இயக்குநர் அன்பழகன் எடுத்துச் சொல்லி அறிமுக இயக்குநர் ரத்தினலிங்காவைச் சந்தித்தேன். அவர் கூறிய 'அட்டு' கதையைக் கேட்டேன். சென்னையில் ஒரு ‘பருத்தி வீரன்' மாதிரி யதார்த்தமும் ஈரமுமாக அந்தக் கதை எனக்காவே எழுதப்பட்டதுபோல் இருந்தது. நடித்ததால் இப்படியொரு கதையில் முதலில் நடிக்க வேண்டும் என்று துள்ளிக் குதித்தேன். அப்படிப்பட்ட கதைக்கு நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்று அட்டு கதாபாத்திரத்துக்காக 30 கிலோ எடையைக் குறைத்தேன்.
வடசென்னையில் நடந்த உண்மையான சம்பவம்தான் கதை. என்னுடைய நடவடிக்கைகள் அனைத்துமே சாதுவாக இருந்ததைப் பார்த்து ‘இது போதாது’ என்றார் இயக்குநர். சென்னையில் சில நிஜ ரவுடி அண்ணன்களோடு நிஜமாகவே சில மாதங்கள் சுற்றுத் திரிந்து, அவர்களது உடல்மொழியைக் கற்றுக்கொண்ட பிறகே படப்பிடிப்புக்குக் கிளம்பினோம்” என அடக்கம் தொனிக்கும் குரலில் அடுக்கிக்கொண்டே செல்கிறார் ‘அட்டு’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகும் ரிஷி ரித்விக்.
கதை முழுவதும் தயார்
‘கபாலி’ படத்துக்குப் பிறகு சூர்யாவை இயக்க இருந்தார் ரஞ்சித். ஆனால், மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்க விரும்பியதை அடுத்து அவருக்கான கதையை தனது குழுவுடன் உருவாக்கிவந்தார் ரஞ்சித். தற்போது முழு திரைக்கதையும் தயார். ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவிதான் கதைக் களம். அங்கு வாழும் தமிழர்களின் வாழ்க்கையை வைத்து ஒரு அரசியல் கதையை எழுதியிருக்கிறாராம் ரஞ்சித். ஷங்கரின் ‘2.0' படத்தின் படப்பிடிப்புக்குப் பிறகு பா.ரஞ்சித்தின் படத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினி.
அனுஷ்கா நம்பும் 2
‘பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டார் ராஜமௌலி. சினிமா வழக்கப்படி பூசணிக்காய் உடைத்து கேக் வெட்டி கொண்டாடுவதற்கு பதிலாக ‘ஜெய் மகிழ்மதி’ என உரக்கக் கத்தி அதையே டீஸர் வீடியோவாக மாற்றி யூட்யூபில் வெளியிட்டுப் பரபரப்பு கிளப்பியிருக்கிறது படக்குழு. அனுஷ்கா கிட்டத்திட்ட வேறு எந்தப் படத்திலும் நடிக்காமல் இந்தப் படத்தில் மட்டுமே முழு கவனம் செலுத்தி நடித்திருக்கிறார். பாகுபலி 2 தனக்கான இரண்டாவது இன்னிங்ஸாக அமையும் என்று அனுஷ்கா எதிர்பார்க்கிறாராம். தமன்னாவுக்கு இதில் சில காட்சிகள் மட்டும்தான். ஏப்ரல் 28-ல் இந்தியா முழுவதும் பாகுபலி- 2ஐ நான்கு மொழிகளில் வெளியிடத் திட்டமிட்டுவருகிறார்கள். மூன்றாம் பாகம் கிடையாது என்பதை இயக்குநர் ஏற்கெனவே உறுதிபடக் கூறிவிட்டார்.