

மனிதக் கதாபாத்திரங்களின் குரலை மட்டுமே ஒலித்துவந்த தமிழ் சினிமாவில் ஒரு ரோபோவின் உணர்வுகளைச் சித்தரித்த விதத்தில் ‘எந்திரன்’ படத்தைக் குறிப்பிடலாம். தற்போது மனிதர்களை அண்டிப் பிழைத்துவரும் ஒரு ஆட்டின் குரலை ஒலிக்க வைத்திருக்கிறார் ஓர் அறிமுக இயக்குநர்.
அவர் சுரேஷ் சங்கையா. ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தின் மூலம் அறிமுகமாகும் இவர் ‘ காக்கா முட்டை’ படத்தின் இயக்குநர் மணிகண்டனின் முதன்மை உதவியாளர். ஈராஸ் புரடக்ஷன் தயாரிப்பில் விதார்த், ரவீனா நடிப்பில் உருவாகியிருக்கிறது இந்தப் படம். தனது கன்னி முயற்சி பற்றி அவர் பேசியதிலிருந்து..
ஆட்டை மையமாகக் கொண்டு ஒரு கதை என்பதே மாறுபட்ட கற்பனையாக இருக்கிறதே?
நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். கிராமத்து வாழ்வில் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான பிணைப்பு உணர்வுபூர்வமானது. தங்கள் குழந்தைகளுக்கு எப்படிப் பெயர் வைத்து வளர்த்து அவர்களைப் பாராட்டிச் சீராட்டுகிறார்களோ அப்படித்தான் தங்கள் வீட்டு விலங்குகள் மீதும் அக்கறை காட்டுவார்கள்.
கால்நடைகளும் கூப்பிட்ட குரலுக்கு ஓடிவரும். கண்கள் வழியாகவும் உடல்மொழி அசைவுகள் வழியாகவும் தங்கள் பசியையும் வலியையும் கூறும். இந்தப் பிணைப்பு வாழ்க்கை, வழிபாடு என்று வருகிறபோது முரணாக மாறிவிடுகிறது. கோயில் திருவிழாக்களில் ஆடு, கோழி ஆகிவற்றை பலி கொடுப்பதும் வழக்கமானதாகவே இருக்கிறது.
கதையில் முதன்மைக் கதாபாத்திரம் ஆடுதானா?
ஆட்டை மையமாகக் கொண்ட மனிதர்களின் கதை இது. படம் முழுவதும் கதாநாயகனாக விதார்த், நாயகியாக ரவீனா இவர்களோடு 39 கதாபாத்திரங்கள் வந்துபோகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கிராமத்து மனிதர்கள்தான். இவர்கள் அனைவருமே தமிழ் கிராமங்களில் நாம் காணும் குணச்சித்திரங்களாகவே வருகிறார்கள். இவர்கள் அனைவருமே தங்கள் சொந்தக் குரலில் குரல் கொடுக்க இருக்கிறார்கள். அவர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வர இருக்கிறோம். படம் பார்த்து முடிக்கும்போது ஆடுதான் உண்மையான கதாநாயகன் என்பதை உணர முடியும்.
கதையைச் சுருக்கமாகக் கூற முடியுமா?
வேண்டுதலின் பேரில் பலியிடுவதற்காக நாயகன் விதார்த்தால் வளர்க்கப்படும் ஆட்டுக் கிடாயைச் சுற்றி நடக்கும் சம்பவங்கள்தான் திரைக்கதை. கிராமத்தில் யதார்த்தமாகத் தொடங்கும் ஒரு கதையில் பல திருப்புமுனைகள். எதிலும் ஒரு துளி சினிமாத்தனத்தை நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் படம் கலகலப்பாக நகரும். பல காட்சிகளில் நீங்கள் சிரித்துச் சிரித்து வலியில் வயிற்றைப் பிடித்துக்கொள்வீர்கள்.
கதையில் முக்கியமான இடம் என்றால் பலியிட வளர்க்கப்படும் ஆட்டுடன் விதார்த்துக்கு எவ்வாறு பிணைப்பு ஏற்படுகிறது என்பதுதான். அதன் பிறகு அந்த ஆட்டுக்கிடாயைக் காப்பாற்ற விதார்த் எடுக்கும் முயற்சிகள் எல்லாம் ரணகளமாக இருக்கும். ஆட்டுகிடாய் சாமி அரிவாளுக்குத் தப்பித்ததா இல்லையா என்பதை நான் கூற மாட்டேன். படம் ஒரு நல்ல அனுபமாக அமைய வேண்டும் என்று பார்த்துப் பார்த்து திரைக்கதையைச் செதுக்கிச் செதுக்கி அமைத்திருக்கிறோம். அதற்கான பலனை ரசிகர்களிடம் எதிர்பார்க்கிறேன்.
படத்தில் ஆடு பேசுமா?
இல்லை. ஆட்டை மையமாக வைத்து நகரும் கதைக்களம் என்பதால் அனைவரும் ஆடு பேசும் என்று நினைகிறார்கள். நாம் என்ன விட்டலாச்சார்யா காலத்திலா இருக்கிறோம். இந்தப் படத்தில் ஆடு பேசுவது போலவோ நடிப்பது போலவோ எந்தவொரு காட்சியும் இல்லை. சாதாரணமாக இருக்கும். அதன் பார்வைகள் அதன் உணர்வுகளைக் கூறும். கதாநாயகனுக்கும் அதற்குமான உறவே யதார்த்தமாக அமைந்திருக்கும் போது, ஆடு பேச வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. நாங்கள் அதைத் துன்புறுத்தவில்லை. படத்தில் ஒரு சில கிராஃபிக்ஸ் காட்சிகள் இடம் பெறவுள்ளன. பொதுவாக ஆட்டின் கண் பார்வைத் திறன் 360 டிகிரியில் இருக்கும் என்பதால் அதற்கேற்ற கேமரா கோணங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இதனால் ஆட்டின் பார்வைக் கோணத்தில் வரும் காட்சிகள் தத்ரூபமாக இருக்கும் விதத்தில் படம்பிடித்திருக்கிறோம்.
படம் எந்தக் கட்டத்தில் இருக்கிறது?
படப்பிடிப்பு முழுமையாக முடிந்து படத்தொகுப்பு பணிகளும் முடிந்துவிட்டன. விரைவில் டப்பிங் பணியைத் தொடங்கவிருக்கிறோம்.........