

நான் கவியரசு கண்ணதாசன் அவர்களின் உடலை சுமந்து நகர்ந்த அந்த இறுதி ஊர்வலத்தில் எம்.ஜி.ஆர் அவர் களும் நடந்து வந்தார். சன் தியேட்ட ருக்கு அருகே இறுதி ஊர்வலம் வரும் போது எம்.ஜி.ஆரைப் பார்த்ததும் மக்களின் விசில் சத்தமும், கைத்தட்டலும் அதிகமானது. அதைக் கண்ட எம்.ஜி.ஆர் திடுக்கிட்டு போனார். கவியர சர் ஊர்வலத்தில் மக்கள் இப்படி நடந்து கொள்கிறார்களே என்று வருத்தப்பட் டார். கவியரசரை இழந்த சோகத்தில் இருந்த எம்.ஜி.ஆர் அவர்களின் முகத்தில் இன்னும் சோகம் படர்ந்தது. அருகில் இருந்தவர்களிடம், ‘‘இது கவிஞருக்கு மரியாதையாக இருக்காது. நான் காரிலேயே வந்து இறுதி நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன்’’ என்று சொல்லி விட்டு செயலாளரைக் கூப்பிட்டு காரை வரவழைத்து புறப்பட்டார்.
இந்த இடத்தில் நான் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். சாதனையாளர்களின் இறுதி ஊர்வலத்தில் நடிகர், நடிகைகள் கலந்துகொண்டால் விசில் அடிப்பதும், கை தட்டுவதும் மறைந்தவர்களுக்கு செய்யும் மரியாதையாக இருக்காது. அங்கே வந்து கை தட்டி, ஆரவாரம் செய் யும்போது அந்தத் துக்க நிகழ்ச்சி கேள்விக் குறியாகிவிடுகிறது. இதுவரை அப்படி நடந்திருந்தாலும், இனிமேலாவது அப் படி செய்யவேண்டாம் என்பதை இங்கே நான் வேண்டுகோளாக வைக்கிறேன்.
கண்ணதாசன் அவர்களின் இரங்கல் கூட்டத்துக்கு வந்திருந்த எம்.ஜி.ஆர் பேசும்போது, ‘‘காரைக்குடியில் கண்ண தாசனுக்கு மணிமண்டபம் உருவாக்கப் படும்’’ என்ற செய்தியை பதிவுசெய்தார். அவருக்குப் பிறகு முதல்வராக வந்த கலைஞர் அவர்களால் கண்ணதாசன் மணிமண்டபம் அங்கே கட்டப்பட்டது. அவரது ஆட்சிக்கு அடுத்து முதல்வ ராக வந்த செல்வி ஜெயலலிதா அவர் களால் அந்த மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. கவியரசரின் மணி மண்டபம் உருவாவதில் மூன்று முத லமைச்சர்கள் பங்களிப்பும் இருந்தது. எல்லாவற்றிலும் இப்படி நடந்தால் எப்படி இருக்கும்? அரசியலில் ஒற்றுமை இருக்கும். இருக்க வேண்டும் என்பது நம் ஆசை!
அடுத்து, கவிதாலயா தயாரித்த ‘புதுக்கவிதை’ படத்தை இயக்கும் வேலைகளில் இறங்கினோம். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம். ஒரு பணக்கார பெண்ணுக்கும், ஏழைப் பையனுக்கும் இடையே நடக்கும் காதல் கதை. நாயகன் ரஜினிகாந்த், நாயகி ஜோதி. படத்தில் முதலாளியம்மாவாக சுகுமாரி நடித்தார். எந்த மாதிரி கதா பாத்திரம் என்றாலும் மிரட்டலாக நடிக்கக் கூடியவர் சுகுமாரி. படத்தில் அவரும் ரஜினியும் முரட்டுத்தனமாக மோதும் காட்சிகள் சிறப்பாக அமைந்தன. அந்தக் கதைக்கு ஏற்ற மாதிரி இசைஞானி இளையராஜா அவர்களின் இசையும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் ‘வா வா வசந்தமே’, ‘வெள்ளைப்புறா ஒன்று’ ஆகிய பாடல்கள் படத்துக்கு மேலும் மெருகூட்டின.
மூணாறு பகுதியில் மிகப் பெரிய ஏரி ஒன்று இருந்தது. காலையில் சூரியன் உதயமாகும்போது தண்ணீரின் மேற்புறம் முழுவதும் பனிப் புகை மூட்டம் படர்ந்து இருக்கும். சூரியன் மேலே வரவர கொஞ்சம் கொஞ்சமாக அந்த புகை மூட்டம் தண்ணீரின் மேல் கலைந்துபோகும். இந்த கண்கொள்ளாக் காட்சியைப் படமாக்க அதிகாலை 4 மணிக்கெல்லாம் அங்கே இருந்தால்தான் அதனை படமாக்க முடியும். ரஜினியிடம் இரவு சாப்பிடும்போது விஷயத்தை சொன்னேன். ‘‘காட்சி சிறப்பா இருக் கும்னா.. வாங்க சார் இப்பவே அங்கு போய் படுத்துக்குவோம்’’ என்று ஆர்வத் தோடு சொன்னார். உழைப்பதற்கு எப்போதும் தயக்கமே காட்டாதவர். திட்டமிட்டபடி அதிகாலை 4 மணிக்கு அங்கே யூனிட்டோடு போய் சேர்ந்தோம். அங்கே அப்படி ஒரு கடுங்குளிர். அதை தாங்கிக்கொண்டு ஒட்டுமொத்த யூனிட்டும் படப்பிடிப்பில் ஈடுபட்டோம்.
அந்த அதிகாலை நேரத்தில் திடீரென ஒரு பரபரப்பான சத்தம் கேட்டது. குளிர் தாங்கமுடியாமல் அங்கே வேலை செய்துகொண்டிருந்த உதவி இயக்குநர் வி.ஏ.துரை மயக்கம் போட்டு விழுந்து விட்டார். அவரை அருகில் இருந்த ஜென ரேட்டர் வேனுக்கு தூக்கிக்கொண்டு போய் வெப்ப கதகதப்பில் வைத்து கை, கால்களை தேய்த்துவிட்டு இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தோம். அந்த உதவி இயக்குநர் வி.ஏ.துரைதான் பின்னாளில் ‘பிதாமகன்’, ‘கஜேந்திரா’ போன்ற படங்களைத் தயாரித்தவர்.
‘புதுக்கவிதை’ படத்தில் ரஜினி மோட்டார் சைக்கிளில் ரயிலை துரத்து வதுபோல ஒரு காட்சி. அந்தக் காட்சிக்கு ரயில் டிராக்கும், சாலையும் அருகருகே இருக்கும் இடம் தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் காஞ்சிபுரத்தில் இருந்து அரக் கோணம் செல்லும் வழியில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையையொட்டி ஒரு ரயில் டிராக் செல்வது தெரிய வந்தது. அங்கு படப்பிடிப்பை ஆரம் பித்தோம். ரயிலில் கேமராவை வைத்து ரஜினி ரயிலை துரத்துவதை படமாக்கினோம். கேமராவுக்கு நேராக ரஜினி இருந்தால்தான் காட்சி சரியாக அமையும். ரயில் போகும் வேகத்துக்கு இணையாக, கொஞ்சமும் பிசகாமல் ரஜினி மோட்டார் சைக்கிளை ஓட்டி னார்.. காட்சி ரொம்ப சிறப்பாக அமைந்தது.
ரயிலில் ஒரு புதுமணத் தம்பதி ஒருவரையொருவர் செல்லமாக கொஞ் சிக்கொண்டே வருவதுபோல காட்சி. இளம் தம்பதி வேடத்துக்கு ஜோடியை தேடிக்கொண்டிருந்தோம். அப்போது தான் மூர்த்தி என்ற இளைஞனின் ஞாபகம் எனக்கு வந்தது. அவர் ரொம்ப நாட்களாகவே என்னிடம், ‘‘உங்க படத்துல வேலை பார்க்கணும். அவுட் டோர் ஷூட்டிங்னாலும் என்னை அழைச்சுட்டுப் போங்க சார்’’ என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அவ ருக்கு அந்த ரோலை கொடுக்கலாம் என்ற யோசனை அப்போது எனக்கு வந்தது. அவரிடம் விஷயத்தை சொன்னதும், மகிழ்ச்சியோடு அந்த சிறிய கதா பாத்திரத்தை ஏற்று நடித்தார். அந்த மூர்த்திதான் இன்றைக்கு மிகவும் பாப்புலராக இருக்கும் நடிகர், இயக்கு நர் பார்த்திபன் அவர்கள். பின்னர் அவர் உதவி இயக்குநராகி ‘புதியபாதை’ போன்ற புதுமையான படங்களை இயக்கினார். என் இயக்கத்தில், தாணு அவர்கள் தயாரித்த ‘தையல்காரன்’ படத்தில் நாயகனாகவும் நடித்தார்.. ஒரு விழாவில் பரிசு கொடுப்பதாக இருந்தாலும், ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதாக இருந்தாலும் தனக்கென ஒரு பாணி, பேச்சு மொழி என்று வித்தியாசமாக செய்து அசத்துவார். புதுமை விரும்பி பார்த் திபன் அவர்களுக்கு என் வாழ்த்துகள்!
காமெடி, கமர்ஷியல் என்று கலக்கும் பஞ்சு அருணாசலம் அவர்களுக்கு ‘ஆறிலிருந்து அறுபதுவரை’ போன்ற சென்டிமென்ட் கதைகளைக் கொடுப் பதில் தனி ஈடுபாடு. அந்த வரிசையில் நாங்கள் எடுத்தப் படம், ‘எங்கேயோ கேட்ட குரல்’.
கிராமத்துப் பின்னணி. ரஜினி, அம்பிகா, ராதா, டெல்லிகணேஷ், கமலா காமேஷ், குழந்தை மீனா ஆகியோர் நடித்தனர். கிராமத்து விவசாயியாக வித்தியாசமான ரோலில் நடித்தார் ரஜினி. அவரை எப்போதும் வெறுக்கும் மனைவியாக அம்பிகா நடித்தார். திருமணத்துக்குப் பிறகு மனைவி கணவனை மதித்து வாழ வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்திய படம். மன்னிப்பதுதான் மனித இயல்பில் மிகப் பெரிய குணம் என்பதையும் அந்தப் படம் வழியே சொன்னோம். வித்தியாசமான முறையில் அந்தப் படத்தை எடுத்து ரிலீஸ் செய்தோம்.
இந்தப் படம் ரிலீஸான அதே நாளில் என் இயக்கத்தில் இன்னொரு படமும் ரிலீஸானது. அந்தப் படத்தைப் பற்றிய சுவையான தகவலை அடுத்த வாராம் சொல்கிறேன்.
- இன்னும் படம் பார்ப்போம்...
படங்கள் உதவி: ஞானம்