

நடிகர்கள், நடிகைகள், இசையமைப் பாளர்கள் எல்லாருக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. பொதுவாக ரசிகர் மன்றங்களின் பணிகள் என்னவாக இருக்கும்? தங்களின் ஆதர்சமானவர்களின் திரைப்படங்கள் வெளிவரும்போது இனிப்புகள் கொடுப்பது, பட்டாசு கொளுத்துவது, பாலாபிஷேகம் செய்வது, இன்னும் ஒரு படி மேலே சென்று, பள்ளி மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகங்கள் வழங்குவது போன்ற சமூகத் தொண்டுகளில் ஈடுபடுவது என நீளும்.
இத்தனை விஷயங்களையும் செய்வதோடு, இசையாகவே வாழ்ந்த மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் ரசிகர்கள் அறக்கட்டளை ஒன்றை நிறுவி, அவரைப் பற்றிய இணைய தளத்தைப் பராமரிக்கிறார்கள். எம்.எஸ்.வி. இசையமைத்த படங்களின் டைட்டில் இசை, திரைப்படத்தின் முக்கியமான சூழல்களில் இசைக்கப்படும் பிரபலமான பின்னணி இசைத் துணுக்குகள், ஒரு பாடலின் பல்லவி, சரணத்துக்கு இடையிலான இசைக் கோவை நேர்த்திகள், அவற்றில் வெளிப்பட்டிருக்கும் இசை சார்ந்த நுணுக்கங்கள் ஆகியவற்றைக் குறித்து ஆராய்ந்து பெற்ற இசையின்பத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக மாதாமாதம் ஒரு நிகழ்ச்சியாகவே இதை நடத்துகின்றனர்.
இந்த நிகழ்ச்சிகள், எம்.எஸ்.வி.யின் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் இசையை நேசிக்கும் இந்தக் கால இளைஞர்களை யும் ஈர்க்கின்றன என்பதுதான் விசேஷம். சமீபத்தில் சென்னை பி.எஸ். பள்ளி வளாக அரங்கில் நடந்த நிகழ்ச்சியில் மூத்த திரைப்பட இயக்குநர் சி.வி.ராஜேந்திரன் கலந்து கொண்டு, எம்.எஸ்.வி. உடன் அவர் பணிபுரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சவாலான தருணங்கள்
“எனக்குத் தொழிலைக் கற்றுக் கொடுத்த குரு இயக்குநர் ஸ்ரீதர். தொழிலில் நான் ஜெயிப்பதற்குக் காரணமாக இருந்தவர் சிவாஜி கணேசன். என்னுடைய திரைப்படங்களின் வெற்றிக்கு அச்சாணியாய் இருந்தவர் எம்.எஸ்.வி. அண்ணன். நான் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணிபுரிந்திருந்தாலும், பெரும்பாலான படங்களுக்கு (30 படங்களுக்கு மேல்) இசையமைத்தவர் எம்.எஸ்.வி. அண்ணன்.
இயக்குநர் யார், சிறந்த பாடலுக்கான சூழ்நிலையைச் சொல்பவரா என்றெல்லாம் அவர் பார்க்க மாட்டார். டியூன் என்று கேட்டதும் கொடுக்க ஆரம்பித்துவிடுவார். ‘அண்ணே… இதவிட பெட்டரா…’ என்று இழுத்தால் சில இசையமைப்பாளர்கள் தருகிறேன் என்பார்கள். ஆனால் உடனடியாகத் தர மாட்டார்கள். எம்.எஸ்.வி. அப்படிப்பட்டவர் இல்லை. ஒருமுறை அவரை சோதித்துப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது.
முதலில் ஒரு டியூன் கொடுத்தார். இல்லைண்ணே வேற கொடுங்க என்றேன். வேறு கொடுத்தார். அதுவும் சரியில்லை என்றேன். இன்னொன்று கொடுத்தார். இப்படியாக, ஒருமணி நேரத்தில் 20 டியூன்களைப் பொழிந்தார். இத்தனைக்கும் ஒரு டியூனுக்கும் இன்னொரு டியூனுக்கும் கொஞ்சமும் தொடர்பு இல்லை. என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு டியூன் மெஷின்.
ரிகர்சல் வரை ஒரு விதமாக இருக்கும். பாடலின் ஒலிப்பதிவு நடக்கும்போது ஏதாவது ஒரு மாற்றத்தை ஏற்படுத்துவார். அதுவும் ரசிக்கும்படியாகத்தான் இருக்கும். ஆனால் பாடகர்களுக்கும், வாத்தியக் கலைஞர்களுக்கும் அவருடைய இசை சவாலான தருணங்களாகவே இருக்கும். இப்படிப்பட்ட ஒரு இசையமைப்பாளரோடு பணிபுரிந்ததை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்.” என்று நெகிழ்ந்தார் இயக்குநர் சி.வி.ராஜேந்திரன்.
முதல் படமே புதுமை
இயக்குநர் சி.வி.ராஜேந்திரனிடம் எம்.எஸ்.வி. ரசிகர்கள் பல சுவாரஸ்யமான கேள்விகளையும் கேட்டனர். எல்லாவற்றுக்கும் மிகவும் பொறுமையுடனும் சுவாரஸ்யத்துடனும் தன்னுடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் சி.வி.ஆர். `அனுபவம் புதுமை’படத்தில் இடம்பெற்ற `கனவில் நடந்ததோ’ என்ற கனவுப் பாடலை நீங்கள் படம்பிடித்த விதம், நிறுத்தி நிறுத்தி அந்தப் பாடல் ஒலிக்கும். இது யாருடைய யோசனை என்ற ஒரு கேள்விக்கு…
“என்னுடைய முதல் படமே அதுதான். பெரிதாக வசதியோ, பட்ஜெட்டோ இல்லாத அந்தக் காலத்தில் அந்தக் கனவுப் பாடலை வெறும் லைட்டிங், திரைச்சீலை போன்றவற்றைப் பயன்படுத்தி மட்டுமே எடுத்தோம். `கனவில் நடந்ததோ கல்யாண ஊர்வலம்’ என்னும் அந்தப் பாடலில் நாயகனும் நாயகியும் சில காட்சிகளில் ஃப்ரீஸ் ஆவதுபோல் எடுக்க திட்டமிட்டோம். இதற்குத் தோதாக பாடலும் ஆங்காங்கே நிறுத்தி நிறுத்தி ஒலிக்கும். இந்த யோசனையை எம்.எஸ்.வி அண்ணனிடம் தெரிவித்தபோது, சந்தோஷமாக அதற்கேற்ப ஒலிப்பதிவு செய்து கொடுத்தார்.
இந்தியில் எடுக்கப்பட்ட `ஆராதனா’ திரைப்படம் தமிழ்நாட்டிலும் வெற்றிகரமாக ஓடிய படம். அந்தப் படத்தை `சிவகாமியின் செல்வன்’ என்னும் பெயரில் இயக்கும் வாய்ப்பை சிவாஜி எனக்குக் கொடுத்தார். இந்திப் படப் பாடலின் சாயலே இல்லாமல் எல்லாப் பாடல்களையும் கம்போஸ் செய்தார் அண்ணன் எம்.எஸ்.வி. என்னுடைய கணிப்பில் `ஆராதனா’ படத்தை விடவும் `சிவகாமியின் செல்வன்’ மிகவும் நேர்த்தியான படம்.” என்று பதிலளித்து திரைக்குப் பின்னால் நிகழ்ந்தவற்றைப் பகிர்ந்தபோது அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.