

பெரிய நடிகர்களின் படங்களுக் கிடையே சின்னப் படங்களை வெளியிடுவது எவ்வளவு கடினமென்பது சமீபத்தில் வெளியான ‘உறியடி’ படத்தின் இயக்குநரின் ஆதங்கம் வெளிப்படுத்தியது. நலன்குமாரசாமி தயாரிப்பில் அறிமுக இயக்குநர் விஜயகுமார் இயக்கத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது ‘உறியடி’. ஆனால் அந்தப் படத்தைத் திரையிடத் திரையரங்குகள் தயாராய் இல்லை.
உண்மையில் இந்தத் திரைப்படம் போல் எண்ணற்ற தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகாமலும் ஒரு சில திரை யரங்குகளில் காட்டப்பட்டும் விரைவிலேயே திரையரங்குகளை விட்டும் தூக்கப் படுகின்றன.
இதற்குக் காரணம் மாஸ் ஹீரோக்களின் படங்களை இருக்கின்ற பெரும்பாலான திரையரங்குகளில் திரையிட்டுவிடுகிறார்கள். இதனால் சின்னத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள்.
எத்தனையோ நல்ல இயக்குநர்கள் வளரத் தடைகள் இங்கு ஏராளம். மாஸ் ஹீரோக்கள் படங்களுக்காக நடக்கும் அரசியல் வெறுக்கத்தக்கது. தியேட்டர்காரர்கள் பெரிய நாயகர்களின் படங்களையே விரும்புகிறார்கள். நடிகர் சங்கம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வழி வகைகளைத் தீவிரமாய்ச் செய்ய வேண்டும். சிறு முதலீட்டாளர்களின் படங்களை வெளியிட ஒரு வரைமுறையை ஏற்படுத்த வேண்டும். நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதோடு சினிமாத் துறை வளரவும் சிறந்த வழிமுறைகளை நெறிப்படுத்த வேண்டும்.
‘உறியடி’ மிக நல்ல திரைப்படம். ஓரிரு தியேட்டர்களில் மட்டுமே ஓடுகிறது. பெரிய நாயகர்களின் ஆக்கிரமிப்பால் தமிழ்த் திரைப்பட வளர்ச்சி பாதிப்பட்டிருக்கிறது. கோடிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் படங்கள் தோல்விகளைத் தழுவாமல் இல்லை. ரசிகர்களால் வாழும் இந்த மாஸ் ஹீரோக்கள் தாங்கள் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தைக் கைவிட வேண்டும். திறமையானவர்களுக்கும் வழிவிட வேண்டும்.
பெரிய நடிகர்களை நம்பும் தயாரிப்பாளர்கள் சின்னச் சின்னப் படங்களையும் கண்டுகொண்டு திரைப்படத் துறை எல்லா வகையிலும் முன்னேற வழி வகுக்க வேண்டும். ரஜினி, அஜீத், விஜய், விஷால், தனுஷ், ஆர்யா, விஜய் சேதுபதி போன்றவர்கள் இது போன்ற பிரச்சினைகளை அறிந்தவர்களாகத்தான் இருப்பார்கள். நடிகர்களும் சாதாரண மனிதர்கள்தான் என்ற எண்ணம் மக்களிடையே உருவாக வேண்டும். நடிகர்களை இங்குக் கடவுளாய் வணங்கிப் பூஜிக்கிறார்கள். அரசியல் சாக்கடையென்றால் அதைவிடப் பெரிய சாக்கடையாகத் திரைப்படத் துறை இருக்கிறது. இதை மாற்ற பெரிய நடிகர்களே முன்வர வேண்டும்.
(எழுத்தாளர், கவிஞர், ஐய்யப்ப மாதவனின் முகநூல் பக்கத்திலிருந்து...)