

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் எம். ஏ . ராமகிருஷ்ணன். இயக்குநர் சேரனின் உதவியாளரான இவர், இப்போது ‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ படத்தின் மூலம் இயக்குனராக முகம் காட்ட வருகிறார். அவருடன் ஒரு சந்திப்பு.
உதவி இயக்குனர்கள் சாதாரணமாக, இயக்குனராக அறிமுகம் ஆவதைத்தான் விரும்புவார்கள். ஆனால் நீங்கள் முதலில் நடிக்க வந்துவிட்டீர்களே?
இயக்குனர் கனவோடும், கதைகளோடும்தான் நானும் சுற்றித் திரிந்தேன். கேபிடல் சினிமா நிறுவனத்தின் தயாரிப்பாளர் எஸ்.பி.பி. சரண் என்னிடம் கதை கேட்க ஒப்புக்கொண்டிருந்தார். கதை சொல்வதற்காக அவர் அலுவலகத்துக்குப் போனேன். அப்போது அதேநிறுவனத்தில் கதை சொல்லி, படம் இயக்கத் தயாராக இருந்தார் ராஜ்மோகன். அவரும், சரணும் என்னைப் பார்த்துவிட்டு, “முதலில் நீங்கள் ஹீரோவாக நடியுங்கள். பிறகு இயக்கலாம்” என்று என்னை நடிகனாக்கி விட்டார்கள்.
இந்த 6 ஆண்டுகளில் நடிப்பதற்கு எனக்கு வந்த வாய்ப்புகள் அதிகம். ஆனால் எல்லாவற்றையும் நான் ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் வந்தது நடிக்க அல்ல, இயக்க என்பதை உணர்ந்தே மீண்டும் இயக்குனர் ஆகும் முயற்சிகளில் இறங்கினேன். என் கதைக்கு தயாரிப்பாளர் கிடைத்தபோது, ‘இந்தக் கதையில் நீங்களே நடியுங்கள் சரியாக இருக்கும்’ என்றார். நம் மீது நாம் வைக்கும் நம்பிக்கை எத்தனை முக்கியமோ, அதேபோல நம் மீது மற்றவர்கள் வைக்கும் நம்பிக்கையும் நம்மை வழிநடத்தும் அல்லவா. அதனால்தான் இந்தப் படத்தை இயக்கி நடிக்கிறேன்.
‘போங்கடி நீங்களும் உங்க காதலும்’ என்ற இந்தப் படத்தின் தலைப்பு சர்ச்சையைக் கிளப்புவதாக உள்ளதே?
என் படத்துக்குக் கவனம் கிடைக்க வேண்டும் என்ற உந்துதலில் வைத்த தலைப்புதான் இது. அதை நான் மறுக்கவில்லை. தலைப்பு இப்படி இருந்தாலும் பெண்களின் மீது நாம் காட்ட வேண்டிய அக்கறையைப் பேசும் படம் இது. தமிழ்த்திரையில் பாலச்சந்தர் அளவுக்குப் பெண்களின் உலகைப் பேசிய இயக்குனர் இங்கே இல்லை. பெண்களின் பிரச்சினைகளைப் பேசுவதற்குப் பதிலாக, அவர்களை ஆடை அவிழ்ப்பு செய்வதிலேயே இந்தியச் சினிமா குறியாக இருந்து வந்ததிருக்கிறது.
இன்று 35 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் உலகிலேயே இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. ஜாதி, மத வேறுபாடின்றி அனைத்துப் பிரிவு பெண்களையும் பாதிக்கும் விதமாகப் பாலியல் வன்கொடுமை இந்தியாவில் தேசியப் பிரச்சினையாக மாறிவிட்டது என்று ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை கமிஷனர் நவநீதம்பிள்ளை தெரிவித்திருக்கிறார். ஐ.நா. அவையே சுட்டிக்காட்டும் அளவுக்கு இந்தியாவில் நிலைமை மோசமாக இருக்கிறது என்றால், சினிமாவும், பெண்களைக் காட்சிப்பொருள் ஆக்குவதிலேயே குறியாக இருக்கும் ஊடகங்களுக்கும் இதில் முக்கியப் பங்கு இருக்கிறது.
இந்த நிலையை நாம் மரணதண்டனை மூலம் மாற்ற முடியாது. மனதளவில் ஆண் - பெண் உறவு நிலைகளில் மாற்றங்கள் வரவேண்டும். பெண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் திரைப்படங்களில் விவாதிக்க வேண்டும். அப்படி விவாதிப்பதன் மூலம் ரசிகர்களிடம் மனமாற்றத்தை உருவாக்க முடியும். இந்தப் படத்தின் மூலம் அதைத்தான் செய்திருக்கிறேன்.
பெண்கள்தான் இந்தப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரங்கள். கதையின் நாயகியாக ஆத்மியா நடித்திருக்கிறார். கதை நாயகனுக்கான இடத்தை இவரது கதாபாத்திரமே நிரப்பியிருக்கிறது. அவரது தோழியாகக் காருண்யா நடித்திருக்கிறார். ரசிகர்களின் பார்வையில் தோன்றும் எல்லாக் கேள்விகளையும் இந்தக் கதாபாத்திரம் கேட்டுக் கொண்டே இருக்கும். நான் ஒரு கதாபாத்திரம் ஏற்றிருக்கிறேன்.
மாநகரக் காவல்துறை ஆணையாளராக ஜெயப்பிரகாஷ் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கிறார். மூடர்கூடம் சென்ராயன் மற்றொரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.