

‘‘என்னுடைய தயாரிப்பில் வெளியான படங்கள் யாவுமே, பார்ப்பவர்களுக்குத் திருப்திகரமான அனுபவத்தைக் கொடுத்துள்ளது. அந்த வரிசையில் எனது இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘மாயவன்’ படமும் கண்டிப்பாக இருக்கும்’’என்று மென்மையாகப் பேசத் தொடங்கினார் முன்னணித் தயாரிப்பாளரும் தற்போது இயக்குநராக அறிமுகமாகவுள்ளவருமான சி.வி.குமார்.
படப்பிடிப்பு முடிந்து நீண்ட நாட்களாகிவிட்டன. ஏன் இவ்வளவு தாமதம்?
வித்தியாசமான கதைக்களம் என்பதால் படப்பிடிப்பு முடிந்து, எடிட்டிங்குக்கு மட்டும் 3 மாதங்கள் எடுத்துக்கொண்டோம். எடிட்டிங் பணிகளுக்கு இடையே அவ்வப்போது பின்னணி இசைப் பணிகளை முடித்துத்தான் கிராபிக்ஸ் பணிகளுக்காக அனுப்பினோம். அப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
‘மாயவன்’ கதையின் ஆரம்பப்புள்ளி என்ன?
சில வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தியைப் படித்தேன். அச்செய்தி புதுமையாகவும், நாம் எதை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறோம் என்பதை உணர்த்துவதாகவும் இருந்தது. அதுதான் இக்கதையை எழுதத் தூண்டுகோலாக இருந்தது. எப்போதுமே என் இயக்குநர்கள் நண்பர்களிடம், எனக்குத் தோன்றும் கதைகளை விவாதிப்பதுண்டு. அவர்களிடம் இக்கதையைக் சொன்ன போது புதுமையாக இருக்கிறது என்று ஊக்குவித்தார்கள்.படத்தில் தொடர்ச்சியாகக் கொலைகள் நடக்கும். அதை யார் செய்கிறார்கள், எதனால், அதை எப்படி ஒரு காவல்துறை அதிகாரி துப்பறிகிறார் என்பதுதான் திரைக்கதை.
இயக்குநராக மறக்க முடியாத சம்பவங்கள்?
கடலுக்குள் படப்பிடிப்பு நடத்த 2 படகுகளில் சென்றுவிட்டோம். அது மீன்பிடித் தடைக்காலம் என்பதை மறந்துவிட்டோம். மீன்பிடிப் படகுகள் வருகின்றன என்று நினைத்துக் கடலோரக் காவல்படையினர் சுற்றிவிட்டனர். ரப்பர் படகுகளில் 20 பேர் வந்து, எங்கள் 2 படகுகளிலும் ஏறித் துப்பாக்கி எடுத்துச் சிறைபிடித்த மாதிரி “யாரும் அசையக் கூடாது” என்றார்கள். படத்தில் பார்ப்பது உண்மையில் நடந்த மாதிரியே இருந்தது.
படப்பிடிப்புக்காக வந்துள்ளோம் என்றவுடன் இயக்குநர் யார் என்று கேட்டார்கள். பின்பு என்னிடம் என்ன படம், எத்தனை பேர் வந்துள்ளனர், பாதுகாப்புக் கவசங்கள் இருக்கின்றனவா, உரிமை வாங்கியுள்ளீர்களா என்று கேட்டார்கள். அனைத்தும் சரியாக இருந்தவுடன் “ஏதாவது தேவை என்றால் எங்களை அழையுங்கள். இது எங்களுடைய எண்” என்று மொபைல் நம்பர் கொடுத்துவிட்டுச் சென்றார்கள். இந்தச் சம்பவத்தை என்னால் மறக்க முடியாது.
முதல் படத்திலேயே ஜாக்கி ஷெராஃப்பை இயக்கிய அனுபவம் குறித்து...
இப்படத்துக்காக ஒரு அரங்கு அமைத்திருந்தோம். அடுத்த நாள் வேறொரு படப்பிடிப்புக்காக அந்த அரங்கைக் கொடுக்க வேண்டிய சூழல். அப்படிக் கொடுத்தால் மறுபடியும் செட் போட வேண்டும். அந்த அரங்கில் ஜாக்கி ஷெராஃப் சாரை வைத்துத் தொடர்ச்சியாக 36 மணி நேரம் படப்பிடிப்பு செய்து, அடுத்த நாள் அரங்கை ஒப்படைத்தோம். அன்றைய தினம் ஜாக்கி ஷெராஃப் சார் மிகவும் சோர்ந்துவிட்டார். அதையும் மீறி எங்களுடைய சூழலைப் புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்தது மட்டுமன்றிக் கிளம்பும்போது “எனது திரையுலக வாழ்வில் 12 மணி நேரம் தாண்டி எந்த ஒரு படத்துக்கும் நடித்ததில்லை. முதன் முதலாக உனக்காகச் செய்துள்ளேன்” என்றார். நெகிழ்ச்சியாக இருந்தது.
இயக்குநராகக் கற்றுக்கொண்ட பாடம் என்ன?
நாம் நினைக்கும் விஷயத்தை மற்றவரிடமிருந்து வாங்கும்வரை பொறுமையாக இருக்க வேண்டும் எனக் கற்றுக்கொண்டேன். நான் தயாரித்த படங்களில் இசைப் பணிகளில் அதிகமாக ஈடுபட மாட்டேன். இப்படத்தில் நானே இயக்குநர் என்பதால், இசையமைப்பாளரிடம் காட்சியை எப்படி விளக்கி வாங்க வேண்டும் என்று தெரிந்துகொண்டேன்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் ஜெயித்திருக்கும் பலர் உங்களுடைய நண்பர்கள். நீங்கள் ஏன் போட்டியிடவில்லை?
உடல்நிலை சரியில்லாமல் போனதால் நிற்கவில்லை. மனு தாக்கல் செய்திருந்தேன். வாக்கு சேகரிக்கப் போக முடியாது என்பதால் விலகிக்கொண்டேன். தற்போது வந்திருப்பது ஒரு அற்புதமான அணி. புதிய நிர்வாகிகள் அனைவருமே உயிரைக் கொடுத்துப் பணிபுரியக்கூடியவர்கள். கண்டிப்பாக முன் எப்போதும் இல்லாத அளவுக்குத் தமிழ் சினிமா உயரும் என்பதை உறுதியாகச் சொல்வேன். புதிய நிர்வாகிகளுடன் நானும் ஒருவனாகப் பணிபுரிந்துகொண்டிருக்கிறேன். கருத்து வேறுபாடின்றி ஒற்றுமையாக அனைத்துத் தயாரிப்பாளர்களும் இணைந்து பணிபுரிந்து வருகிறோம். இதை ஒரு ஆரோக்கியமான விஷயமாகப் பார்க்கிறேன்.
2017-ம் ஆண்டில் பெரிய பட்ஜெட் படங்களைத் தயாரிக்கவுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளதே..
முயற்சி செய்து பார்க்கலாமே என்ற எண்ணம் வந்துள்ளது. கலையரசன் - காளி வெங்கட் - ஆனந்தி ஆகியோரது நடிப்பில் ஒரு படம் முடித்துள்ளோம். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘4ஜி’ படப்பிடிப்பு முடிந்து இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ‘மாயவன்’ படத்துக்குப் பிறகு இவ்விரண்டு படங்களை மட்டுமே இந்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டே பெரிய நாயகர்களை வைத்து படம் தயாரிக்கப் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளோம். இந்த ஆண்டு தொடங்கி, அடுத்த ஆண்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.