மொழி கடந்த ரசனை 34: என் இதயத்தின் வலிமை எடுபடவில்லை

மொழி கடந்த ரசனை 34: என் இதயத்தின் வலிமை எடுபடவில்லை
Updated on
2 min read

மக்களின் மனம் கவர்ந்த ஊடகமான திரைப்படங்களின் வெற்றியில் அதன் திரைக்கதைத் திருப்பங்கள் ஆற்றும் பங்கு மகத்தானது. அப்படிப்பட்ட திருப்பங்களுக்குக் கட்டியம் கூறுவது கருத்தாழம் மிக்க பாடல்கள்தான். ‘மிலன்’ படத்தின் ‘ஹம் தும் யுக் யுக் ஸே கீத் மிலன் கீ காத்தே ரஹே ஹைன்’ என்று தொடங்கும் பாடல் இதற்கு மிகச் சிறந்த உதாரணம்.

திருமணம் முடிந்து தேன் நிலவு கொண்டாடும் புதுமணத் தம்பதிகளின் மகிழ்வையும் உணர்வையும் சித்தரிக்கும் பாடல் இது. நாம் ஒவ்வொரு பிறவியிலும் கணவன் மனைவியாகவே வாழ்ந்திருக்கிறோம் என்று மகிழ்ச்சியுடன் ஆடிப் பாடுகிறார்கள். இப்பாடலின் முடிவில் ஏற்படும் திருப்பமே இப்படத்தின் குவிமையம். பாடிக்கொண்டு படகில் செல்லும்போது நிகழும் சூறாவளி அவர்களை ஒரு தீவுக்குள் இட்டுச் செல்கிறது. அங்கு நாயகனுக்கு அவனது முன் ஜென்ம நினைவுகள் வருகின்றன. அவற்றுடன் தொடர்புபடுத்தும்படி தன் இனிய குரலில் முகேஷ் பாடியுள்ள ஆனந்த பக்ஷியின் வரிகளின் பொருள்.

நானும் நீயும் யுகயுகமாக இந்தச் சங்கம சங்கீதத்தைப்

பாடிக்கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம்

நானும் நீயும் இவ்வுலகிற்கு வாழ்க்கைத் துணையாக

வந்துகொண்டிருக்கிறோம் வந்துகொண்டிருப்போம்.

எப்பொழுதெல்லாம் நான் காதலனாகப் பிறந்தேனோ

எப்பொழுதெல்லாம் நீ அழகிய காதலியாய் இருந்து

நெற்றித் திலகமிட்டு நீள் கையில் வளையல் அணிந்தாயோ

அப்பொழுதெல்லாம் நான்

பூவாகவோ புழுதியாகவோ ஆகியிருந்தேன்

எப்படி இருந்தாலும் நம் பந்தம் விட்டுப் போகவில்லை.

என் விழிகளின் ஏக்கமாய் எப்பொழுதும் இருந்தது நீயே

திருமணம் முடிந்த இத்தருணம்

உன்னை என்னுடையவள் என இப்போது நான் சொன்னாலும்

அன்னியமாக ஒரு நாள் இருந்தோம் என அகிலம் கூறினும்

கண்ணே, கட்டித் தழுவல் என்ற மாலையை

உன் கழுத்தில் அன்றே பல ஆண்டுகளுக்கு முன்பு

ஒரு நாள் அணிவித்திருந்தேன்

உலகம் நினைத்தது உறவு பிரிந்தது என -அங்கே

பலரும் பார்த்தது நமது காதல் பிரிவை அல்ல

உலர்ந்த மலராய் உடன் இருந்த நிழலை

நானும் நீயும் யுகயுகமாக இந்தச் சங்கம சங்கீதத்தை

பாடிக்கொண்டிருக்கிறோம், பாடிக்கொண்டிருப்போம்.

‘போல் கோரி போல் தேரா கோன் பியா’ (சொல் அழகியே சொல் உன் காதலன் யார்) என்று தொடங்கும் இப்படத்தின் இன்னொரு புகழ் பெற்ற பாடல், ஆழமான கருத்து கொண்ட பாடல் அல்ல. தெலுங்கு, இந்திப் படங்களில் துணை நாயகியாகக் கவர்ச்சியையும் உணர்வுபூர்வ நடிப்பையும் வெளிப்படுத்திய நம் ஜமுனாதேவி, சுனில் தத் ஆகியோர் இடம் பெற்ற பாடல் இது. வழக்கத்துக்கு மாறாகச் சுமார் 7 நிமிடங்கள் ஏராளமான துணை நடிகர்களுடன் கடற்கரையில் படமாக்கப்பட்ட கிராமிய இசைப்பாடல். பாடல் வரிகள் இறைவனுக்கும் காதலனுக்கும் பொருந்தும்படி எழுதப்பட்டுள்ளது இப்பாடலின் கூடுதல் சிறப்பு.

இந்தியில் எழுதப்பட்டு இசை அமைக்கப்பட்ட பின்னர் இந்திப் படத்தில் இடம் பெறாமல் சென்றுவிட்ட ‘ஆஜ் தில்பர் கோயி ஜோர் சல்த்தா நஹீன்’ என்று தொடங்கும் லதா மங்கேஷ்கரின் குரலில் உருவான இப்பாடல் சோக உணர்வின் ஒரு புதிய கோணத்தை இனிமையாகச் சொல்லும் பாடல். இது தெலுங்குப் படத்தில் இடம்பெற்றது.

பொருள்:

இன்று எடுபடவில்லை என் இதயத்தின் வலிமை

நின்று சிரிக்கத்தான் முயன்றேன் நிற்காமல் வந்தது அழுகை

வென்றிடவே முயன்றேன் என்றும்போல் வலியை

இன்று எடுபடவில்லை என் இதயத்தின் வலிமை

எனக்கு என்ன ஆயிற்று என என்ன சொல்ல இப்போழுது

உன்னைப் பற்றி ஒன்றும் தெரியாது என் நிலை அறியாமை

இத்தனை அறிந்துகொள் இங்கு ஏதேதோ நடந்துவிட்டது

அத்தனையும் மீறி உன் மீது அன்பு வைத்துள்ளேன்

நானும் ஒரு பெண்தானே, சிரிக்க வேணும் என முயன்றாலும்

நிற்காமல் வந்தது அழுகை.

இருக்கின்ற எல்லையில்லா இந்தப் பெரும் வானில்

ஒருவருக்கு ஒன்று எனக் கிட்டலாம் விண்மீன்கள்

சறுக்கும் நீர்ச் சுழலில் எல்லாப் படகிற்கும் கரை சாத்தியமா

இதைத்தான் எண்ணி மூழ்கியிருந்தேன் நான் ஆறுதலில்

ஆனால் இன்று எடுபடவில்லை என் இதயத்தின் வலிமை

நின்று சிரிக்கத்தான் முயன்றேன் நிற்காமல் வந்தது அழுகை.

ஆயுள் முழுவதும் ஒருவேளை அழுதுகொண்டே இருப்பேன்

ஓயாது சிரிப்பதால் ஒன்றும் பயன் இல்லை என அறிந்தேன்

பாயும் கண்ணீர் எனக்குப் பலத்தை தந்தது அதனால்

பொழியாது போகும் மேகம்போல் ஆனேன் நானும்

ஆனால் இன்று எடுபடவில்லை என் இதயத்தின் வலிமை

நின்று சிரிக்கத்தான் முயன்றேன் நிற்காமல் வந்தது அழுகை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in