சமந்தா எனக்கு சீனியர்!- நடிகை லாவண்யா பேட்டி

சமந்தா எனக்கு சீனியர்!- நடிகை லாவண்யா பேட்டி
Updated on
2 min read

பிரம்மன்' படத்தைத் தொடர்ந்து தெலுங்கில் மிகவும் பிஸியான நடிகையாக வலம்வருபவர் லாவண்யா. தற்போது சி.வி.குமார் இயக்கிவரும் 'மாயவன்' படத்தின் மூலம் மீண்டும் தமிழ்த் திரையுலகுக்குத் திரும்பியிருக்கும் அவரிடம் பேசியபோது..

‘மாயவன்’ படத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?

இது ஒரு அறிவியல் புனைவு படம். நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்ப் படத்தில் நடிப்பதால் மிகுந்த சிரத்தையுடன் இந்தக் கதாபாத்திரத்தைத் தேர்வு செய்தேன். இதில் எனக்கு மிகவும் முக்கியமான பாத்திரம். படத்தில் எதிர்பாராத திருப்பங்கள் இருப்பதால் படம் ரொம்பவும் சுவாரஸ்யமாக இருக்கும்.

தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குநராக மாறியிருக்கும் படத்தில் நடிப்பது பற்றி?

சி.வி. குமார் சார் பற்றி ஏற்கெனவே நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் தயாரிப்பில் வெளியான ‘பீட்சா', ‘சூது கவ்வும்' படங்களைப் பார்த்திருக்கிறேன். சிவி குமார் தமிழில் வெற்றித் தயாரிப்பாளர். ‘மாயவன்' படத்தை நான் ஒப்புக்கொண்டதற்கு முக்கிய காரணமே சி.வி. குமார். தெலுங்கில் நான் ரொம்ப பிஸியாக இருந்ததால் மற்ற மொழிப் படங்களுக்கான தேதி ஒதுக்க முடியாத நிலையில் இருந்தேன். தமிழில் ஒரு நல்ல படத்தைத் தேர்வு செய்ய வேண்டும் என நிதானித்திருந்த நேரத்தில் சி.வி. குமார் இக்கதையை எனக்குக் கூறினார். கதை மிகவும் பிடித்துப்போனதால் உடனடியாக ஒப்புக்கொண்டேன். படம் மிக நேர்த்தியாக உருவாகியுள்ளது.

தெலுங்கு மற்றும் தமிழ்த் திரையுலகில் ஏதேனும் வேறுபாடு உணர்கிறீர்களா?

எந்த வேறுபாடும் இல்லை. சினிமா ஒரு கலை. அதற்கு மொழி தடையில்லை. இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் என எந்த மொழியாக இருந்தாலும் அது இந்திய சினிமாவே.

தெலுங்கில் நீங்கள் நடித்த 'பலே பலே மகடிவோய்' படத்தைத் தமிழில் ரீமேக் பண்ண கடும் போட்டி நிலவுகிறதே.

உண்மைதான். அப்படத்தின் படப்பிடிப்பின்போதே நாங்கள் ரொம்பவும் அனுபவித்துப் பண்ணினோம். அப்போதே எனக்குத் தெரியும், இப்படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்று. தமிழில் ரீமேக் பண்ணினால் ரொம்ப சந்தோஷம். அதில் என்னுடைய பாத்திரத்தில் யார் நடிக்க இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.

கமர்ஷியல் படங்களைத் தாண்டித் தற்போது பல்வேறு கதையம்சம் உள்ள படங்கள் அதிகமாக வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தெலுங்கு சினிமாவில் முற்றிலும் ஆக்‌ஷன் என்ற தொனியிலிருந்து நிச்சயமாக மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தெலுங்கில் நான் நடித்த முதல் படமே வித்தியாசமான கதைக் களம் கொண்டதே. சரியான நேரத்தில் நான் தெலுங்கு திரையுலகில் கால் பதித்திருக்கிறேன் என்றே கருதுகிறேன். இயல்பானது அல்லாத கதை எப்போதும் ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதில்லை. அதேவேளையில் ஒரு நடிகரோ நடிகையோ எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஏற்கத் தயாராக இருக்க வேண்டும்.

தெலுங்கில் புதுமுக நடிகைகள் பலரும் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருகிறார்கள். உங்களுக்கு யார் போட்டி?

நான் போட்டியாக யாரையுமே கருதவில்லை. சமந்தா என்னுடைய சீனியர். சமந்தா, அனுஷ்கா ஷெட்டி, நித்யா மேனன் ஆகியோர் என்னை மிகவும் கவர்ந்த நடிகைகள். நான் அவர்களுக்கு அடுத்த தலைமுறை என்று கருதுகிறேன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in