

மூடப்படாத கல்லறைபோலச் சற்றே பெரிய செவ்வகக் குழி. கடும் குளிர், மழையென்றாலும் அதுதான் தங்கும் வீடு. அடிமை உடலை விட்டு உயிர் பிரிந்துவிடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கத்துடன் அமெரிக்கப் பண்ணை முதலாளிகள் அவ்வப்போது தரும் உணவு. தூங்கக்கூட நேரமில்லாமல் கடும் உழைப்பு. பெண்கள் என்றால் முதலாளிகள் எப்போது ‘அழைத்தாலும்’ மறுக்கக் கூடாது. விடுதலை என்றால் உடலை விட்டு உயிர் பிரிவது ஒன்றுதான் என்ற நிலை. இதுதான் அமெரிக்காவில் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பண்ணையடிமைகளாக உயிர் வழிய வேலைபார்த்து சிதைந்துபோன ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் அடிமை வரலாறு.
ஆபிரகாம் லிங்கனின் முயற்சியால் கறுப்பின அடிமைகள் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் தருணம் வரும்வரை பாவப்பட்ட அந்த மக்கள் பட்ட பாட்டை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. இன்று மனித உரிமை பற்றிக் குரல் எழுப்பும் அமெரிக்கா இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் சக மனிதனை நடத்திய விதம் அதுதான். அடிமை வாழ்விலிருந்து மீண்டு பல்வேறு இன்னல்களுக்குப் பின்னர் கல்வியறிவு பெற்ற சிலர் தங்கள் நரக வாழ்க்கை குறித்து எழுதிய புத்தகங்கள் உலக மக்களின் மனசாட்சியை உலுக்கின. அந்த வகையில் 12 வருடங்கள் அடிமை வாழ்க்கை வாழ நேர்ந்த சாலமன் நார்தப் எழுதிய சுயசரிதையான ‘ட்வெல்வ் இயர்ஸ் எ ஸ்லேவ்’ (Twelve years a slave) என்ற நூலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள படம் இது. ஓர் அடிமையின் சுயசரிதையில் உருவான இந்தப் படத்தை ஹாலிவுட்டின் பரதேசி என்று கூடச் சொல்லலாம்.
சாலமன் நார்தப் கதையின் முக்கியமான விஷயம் இவர் பிறக்கும்போது அடிமை இல்லை. இவரது தந்தை மின்டஸ் நார்தப், அமெரிக்க பண்ணை முதலாளியான கேப்டன் ஹென்றி நார்தப்பின் பண்ணையில் அடிமையாக வேலைபார்த்தவர். தனது எஜமானரின் குடும்பப் பெயரைத் தன் பெயருக்குப் பின்னால் சேர்த்துக்கொண்ட் விசுவாசமிக்க அந்த அடிமைக்கு எப்படியோ சுதந்திர வாழ்வு கிட்டியது. திருமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இரண்டு ஆண் குழந்தைகளுக்குத் தந்தையானார் மின்டஸ். மூத்தவனான சாலமன் ஒரு தொழில்முறை வயலின் கலைஞனாக உயர்ந்தான். சீஸன் இல்லாத சமயங்களில் தச்சுத் தொழிலும் செய்தான்.
சர்க்கஸில் இசைக் கலைஞர் வேலை வாய்ப்பு இருப்பதாக அறிமுகமில்லாத சிலர் சொல்வதை நம்பி அவர்களுடன் நியூயார்க் செல்கிறான் சாலமன். ஆனால் ஒரு பருத்திப் பண்ணையில் அடிமையாக விற்கப்படுகிறான். 12 வருட நரக வாழ்க்கை. வேறுவேறு முதலாளிகள் என்று பிழிந்தெடுக்கப்படும் சாலமனின் துயரக் கதை சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.
வரும் 31ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தில் சாலமன் நார்தப் பாத்திரத்தில் சிவிட்டல் எஜோஃபோர் நடித்திருக்கிறார். மைக்கேல் ஃபாஸ்பெண்டர், பிராட் பிட் போன்ற முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இப்படத்தை ஸ்டீவ் மெக்குயின் இயக்கியுள்ளார். மார்ச் 2ஆம் தேதி நடக்க உள்ள ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர் உட்பட மொத்தம் 9 பிரிவுகளில் இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.