

‘‘ஜனவரி 1-ம் தேதி ‘நேனு சைலஜா’ தெலுங்கு படம் வெளியானது. அதைத் தொடர்ந்து ‘ரஜினி முருகன்’, ‘தொடரி’, ‘ரெமோ’ ஆகிய படங்கள் வெளியாயின. என் வாழ்க்கையில் 2016-ம் ஆண்டை மிக முக்கியமானதாகப் பார்க்கிறேன். இப்போது 2017-ல் ‘பைரவா’ எனக்கு முதல் படம்’’ எனப் பேசத் தொடங்கினார் கீர்த்தி சுரேஷ்.
‘பைரவா’ படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்?
மலர்விழி என்ற கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். விஜய் சாரின் ரசிகையாக இருந்த நான் அவரோடு நடிப்பேன் என எதிர்பார்க்கவில்லை. குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரும் விஜய் சாரோடு நடித்த அனுபவத்தைப் பற்றிக் கேட்கும் போதுதான், அந்த மதிப்பை உணர்கிறேன். இந்த வாய்ப்பு அமைந்ததில் ரொம்ப சந்தோஷம். அவருடன் இன்னும் நிறையப் படங்கள் நடிக்க வேண்டும். விஜய் சாரோடு நடிக்கும்போது பயந்ததே கிடையாது. ‘பாப்பா… பாப்பா’ என்ற பாடலின் முதல் நாள் படப்பிடிப்பில் அவருக்கு அருகில் நின்று ஆடும்போது கை-கால் எல்லாம் நடுங்கியது. அது எனக்கே புதிது. ஏனென்றால் யாருடனும் நடிக்கும்போதும் எனக்கு அப்படி ஆனதில்லை.
பவன் கல்யாண், சூர்யா, விஷால் எனப் பெரிய நடிகர்களுக்கு ஜோடியாகிவிட்டதால் உங்கள் மீது பெரும் எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளதே?
இப்படிக் கேட்கும் போதுதான் எனக்குப் பயம் அதிகமாகிறது. பொறுப்புகள் அதிகரித்திருப்பதாகக் கருதுகிறேன். கதைகள் கேட்டு, ரொம்ப பிடித்திருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்கிறேன். நான்கு, ஐந்து படங்களை ஒரே சமயத்தில் செய்வதில் எனக்கு உடன்பாடில்லை. ஒரே சமயத்தில் இரண்டு படங்களில் எனது கவனம் இருந்தால் மட்டுமே சிறப்பாக நடிக்க முடியும் என நினைக்கிறேன்.
சூர்யா சாரோடு நடித்துக்கொண்டிருப்பதில் ரொம்ப சந்தோஷம். சிவகுமார் சாரோடு என் அம்மா நடித்துள்ளார். அந்தப் படங்கள் எல்லாம் பார்க்கும்போது அம்மாவிடம் ‘சூர்யா சாரோடு ஒரு படமாவது நடிக்கிறேன் பார்’ எனச் சொல்லியிருக்கிறேன். ஆனால், அது இவ்வளவு சீக்கிரம் நடக்கும் என எதிர்பார்க்கவில்லை.
உங்களுடைய நடிப்புக்கு வரும் விமர்சனத்தை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
விமர்சனம் மட்டுமே ஒருவரை முன்னுக்கு எடுத்துச் சொல்லும் விஷயமாக நினைக்கிறேன். அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ரொம்ப முக்கியம். அதை நமது அடுத்த படங்களில் திருத்திக்கொண்டு சிறப்பாகச் செய்ய முடியும். விமர்சனங்கள் நம்மை நிறைய யோசிக்கவைக்கும். அதை எப்போதுமே மிகவும் சந்தோஷமாக மட்டுமே அணுகுவேன். விமர்சனங்களைப் படித்து சோர்வடைவதில்லை.
சீக்கிரமே பெரிய நாயகியாகிவிட்டதைப் பற்றி வீட்டில் என்ன சொல்கிறார்கள்?
நம்ம பொண்ணு இவ்வளவு பெரிய நாயகியாக வருவாள் என அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. நிறையப் பேரிடம் என்னைப் பற்றி நல்ல வார்த்தைகள் கேட்கும்போது ரொம்ப சந்தோஷப்படுவார்கள். என் அம்மா ‘ரெமோ’ படத்தைத் திரையரங்கில் மூன்று முறை பார்த்தார்கள். முதல் முறை பார்த்துவிட்டு போன் செய்து “ரொம்ப நல்ல நடிச்சுருக்க” என்று படத்தில் நான் நடித்துள்ள பல இடங்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அந்த மாதிரி எங்கம்மா பேசியதில்லை. அந்த நாள் மறக்கவே முடியாது. பாராட்டினால் நம்ம பொண்ணுக்கு தலைக்கனம் வந்துவிடுமோ என்று நினைப்பார். தற்போது மனதுவிட்டு நிறைய பேசுகிறார்கள். ஒவ்வொரு படத்தைப் பற்றியும் சொல்வேன், அப்போது நிறைய விஷயங்கள் சொல்லிக் கொடுப்பார்கள்.
பள்ளி - கல்லூரி தோழிகளுக்கு நேரம் ஒதுக்க முடிகிறதா?
புத்தாண்டு எல்லாம் பள்ளி, கல்லூரி தோழிகளோடுதான் கழிந்தது. திரையுலக நண்பர்களை விட இவர்களோடுதான் அதிகமாகப் பேசுவேன். அனைவரும் ஒன்றுகூடும் போது, நானும் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவது கண்டிப்பாக அவர்களைச் சந்தித்து அரட்டை அடித்துவிட வேண்டும் என்று நினைத்துள்ளேன்