கலக்கல் ஹாலிவுட்: டீப்வாட்டர் ஹொரைசான்

கலக்கல் ஹாலிவுட்: டீப்வாட்டர் ஹொரைசான்
Updated on
1 min read

உண்மைச் சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்படும் திரைப்படங்கள் எப்போதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அந்த வகையில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துப் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள ‘டீப்வாட்டர் ஹொரைசான்’ படமும் உலகெங்கும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா அருகே மெக்சிகோ வளைகுடாவில் மனிதத் தவறால் கடலில் ஏற்பட்ட மிகப் பெரிய எண்ணெய் கசிவு விபத்து சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

2010 ஏப்ரல் 20 அன்று மெக்சிகோ வளைகுடாவில் எண்ணெய் துரப்பணப் பணி நடக்கும் இடத்துக்கு ஊழியர்கள் வேலைக்குப் போகிறார்கள். ஜாலியாகப் பேசிக்கொண்டும், குடும்பத்தினருடன் அரட்டை அடித்தபடியும் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். அப்போது திடீரென எண்ணெய்க் கசிவு ஏற்படுகிறது. எல்லா இடங்களிலும் எண்ணெய் மிக வேகமாகப் பீய்ச்சி அடிக்கிறது. ஊழியர்கள் அதில் சிக்கிச் சின்னாபின்னாகிறார்கள். அதோடு தீயும் பற்றி நடுக்கடலில் கொழுந்துவிட்டு எரிகிறது. இந்தச் செய்தி வெளியே தெரிந்ததும் ஊழியர்களின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கிறார்கள். ஒட்டுமொத்த எண்ணெய் துரப்பணக் கட்டமைப்பைத் தீ விழுங்கும் தருணத்தில், உயிர் பிழைக்க நாயகனும் பிற ஊழியர்களும் செய்யும் பரப்பரப்பான முயற்சிகளை, விறுவிறுப்புடன் படமாகச் சொல்லும் கதைதான் ‘டீப்வாட்டார் ஹொரைசான்’.

இந்தப் படத்தை பீட்டர் பெர்க் இயக்கியிருக்கிறார். காட்சிகளைத் தத்ரூபமாக உருவாக்கியிருப்பதில் இயக்குநருக்கு நிச்சயம் பெயர் கிடைக்கும் வகையில் அமைந்துள்ளது படத்தின் டிரெயிலர். நாயகனாக மார்க் வால்பெர்க் நடித்திருக்கிறார். மிகப் பெரிய விபத்தில் சிக்கிக்கொள்ளும்போது வலியுடன் நகரும் ஒவ்வொரு நிமிடத்தையும், அதிலிருந்து தப்பிக்க நாயகன் செய்யும் சாகசங்களையும் உள்வாங்கி பிரமிப்பு ஏற்படும் வகையில் நடித்திருக்கிறார். படத்துக்கு இசையின் மூலம் ஸ்டீவ் ஜப்லோன்ஸ்கை உயிரூட்டியிருக்கிறார். இந்தப் படம், சுமார் ஆயிரம் கோடி ரூபாய் பொருட் செலவில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகளில் இந்தப் படம் செப்டம்பர் 30 அன்று வெளியாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in