காஷ்மோரா சில ஆச்சரியங்கள்!

காஷ்மோரா சில ஆச்சரியங்கள்!
Updated on
3 min read

தமிழ்த் திரையுலகில் அவ்வப்போது வித்தியாசமான முயற்சிகள், பிரம்மாண்ட மான பொருட்செலவில் செய்யப்படுவது உண்டு. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் படம் ‘காஷ்மோரா’. நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் இருந்துவரும் இப்படத்தின் குழுவிடமிருந்து சேகரித்த சில தகவல்கள்…

# ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ வெளியாகும் முன்பே இயக்குநர் கோகுல் சொன்ன கதையைக் கேட்டு “சூப்பரா இருக்கு... பண்ணலாம்” என்று கூறியிருக்கிறார் கார்த்தி. அப்போதிலிருந்தே இந்தப் படத்தின் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

# கார்த்தி 3 கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ‘காஷ்மோரா’, ‘ராஜ்நாயக்’ மற்றும் ஒரு கதாபாத்திரம். அந்தக் கதாபாத்திரம் என்ன என்பதை படம் வெளியாகும் வரை சஸ்பென்ஸ் ஆக வைத்திருக்கப் படக்குழு திட்டமிட்டிருக்கிறது.

# செய்வினை வைப்பது, எடுப்பது போன்ற விஷயங்கள் அடங்கிய கதைதான் ‘காஷ்மோரா’. அவையெல்லாம் உண்மைதானா என்பதையும் சொல்லி யிருக்கிறார்கள். இதற்காக செய்வினை வைக்கும் ஆட்களிடம் பேசி, அவர்களுடைய பேச்சுமொழி, உடல்மொழி உள்ளிட்ட விஷயங்களையெல்லாம் வைத்துதான் இக்கதையை எழுதியிருக்கிறார் இயக்குநர் கோகுல்.

# கார்த்தியின் கெட்டப்பை முடிவுசெய்ய மட்டும் நீண்ட நாட்கள் ஆகியிருக்கின்றன. வெவ்வேறு விதமான தோற்றங்களுடன் போட்டோ ஷூட் எடுத்து, இறுதியாக 3 கெட்டப்களை இறுதி செய்திருக்கிறார்கள். ‘பாகுபலி’ சத்யராஜ் தோற்றத்துக்கும், ‘ராஜ்நாயக்’ கதாபாத்திரத்தின் தோற்றத்துக்கும் கொஞ்சம் ஒற்றுமை இருந்தாலும் ‘பாகுபலி’ வரலாற்றுக் காலப் பின்னணியில் உள்ள படம் என்பதால், ‘காஷ்மோரா’ படத்தோடு ஒப்பீடு செய்ய மாட்டார்கள் என்கிறது படக்குழு.

# காலையில் 7 மணிக்கு முதல் காட்சி எடுக்க வேண்டும் என்றால், அதிகாலை 2 மணிக்கே வந்து கார்த்தி மேக்கப் போட்டுக்கொண்டு தயாராவார். அவருக்கு மேக்கப் போடுவதற்கு 4 - 5 மணி நேரமாகும். 5 மணி நேரத்துக்கு மேல் மேக்கப் தாங்காது என்பதால் நிறைய கஷ்டப்பட்டு நடித்துக்கொடுத்திருக்கிறாராம்.

# இதுவரை 130 நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். இதுவரை நயன்தாரா நடித்த படங்களில் இவ்வளவு கஷ்டப்பட்டு அவர் நடித்திருக்க மாட்டார் என்கிறது படக்குழு. அரசி பாத்திரத்தில் நடிக்கும் அவருக்கான உடையை அனுவர்த்தன் வடிவமைத்திருக்கிறார். அந்தப் பாத்திரத்தை அவரால் மட்டுமே பண்ண முடியும், வேறு யாராலுமே பண்ணியிருக்க முடியாது என்கிறார்கள்.

# பத்திரிகையாளராக ஆவதற்காகப் படிக்கும் பெண்ணாக திவ்யா நடித்திருக்கிறார். இப்படம் முழுவதும் வருவது போன்று ஒரு முக்கியமான கதாபாத்திரம். கார்த்திக்கு அப்பாவாக விவேக் நடித்திருக்கிறார். ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் நடித்தவர்கள் பலரும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

# இப்படத்துக்காக 17 செட்கள் போட்டுப் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். தயாரிப்பாளரின் நண்பரின் இடம் ஒன்றை வாடகைக்கு எடுத்து அங்குதான் ஒவ்வொரு அரங்காக அமைத்துப் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். வழக்கமாகப் படப்பிடிப்பு நடத்தும் இடம் என்றால் புகைப்படங்கள் கசிந்துவிடும் என்பதால் முன்பே திட்டமிட்டு இப்படி நடத்தியிருக்கிறார்கள். தினமும் சுமார் 200 பணியாளர்கள் இதற்காகப் பணியாற்றியிருக்கிறார்கள்.

# இந்தப் படத்தில் 360 டிகிரி கேமரா கொண்டு சில காட்சிகளைக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

# ‘மாற்றான்’, ‘எந்திரன்’ படங்களுக்குப் பயன்படுத்திய Face Scanning Technology-ஐ இந்தப் படத்திலும் பயன்படுத்தியுள்ளார்கள். கார்த்தியின் 3-வது கதாபாத்திரத்தை இதன் மூலமாக வடிவமைத்திருக்கிறார்கள்.

# படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் மட்டும் சுமார் 90 நிமிடங்கள் வரும். படம் ஆரம்பிக்கும் போதே வரலாற்றுக் காட்சிகள் உள்ளிட்ட சில முக்கியமான காட்சிகளுக்கு கிராபிக்ஸ் பணிகளைத் தொடங்கியிருக்கிறார்கள். முழுமையான கிராபிக்ஸ் பணிகள் கடந்த ஓராண்டாக முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், மும்பை, புனே, சென்னை, ஹைதராபாத் உள்ளிட்ட 18 இடங்களில் இந்தப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

# படப்பிடிப்பு தொடங்கும் முன்பே, இந்தப் படத்தை எந்தவொரு விரயமுமில்லாமல் பண்ண வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால் காட்சியமைப்புகளுக்கு ஏற்றவாறு படப்பிடிப்புத் தளங்கள், உடைகள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையுமே திட்டமிட்டிருக்கிறார்கள்.

# வரலாற்றுக் காட்சிகள் படத்தில் அரை மணி நேரம்தான் வரும். ஆனால், அதற்குத்தான் அதிக நாட்கள் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறது படக்குழு.

# வரலாற்றுக் காட்சிகளின் படப்பிடிப்புக்கான உடைகள், ஆபரணங்கள், உபகரணங்கள் என அனைத்துமே மற்ற படங்களிலிருந்து வித்தியாசப்பட்டு இருக்க வேண்டும் என மெனக்கெட்டு வடிவமைத்திருக்கிறார்கள்.

# கார்த்தி இதுவரை நடித்து வெளிவந்த படங்களின் பட்ஜெட்டைவிட இந்தப் படத்துக்கு 2 மடங்கு பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது.

# பண்டிகை நாளன்று குடும்பத்துடன் வந்து சிரித்து, ரசித்துப் போவதற்கேற்ற விதத்தில் அனைத்து அம்சங்களுடனும் உருவாகும் படம் என்று ‘காஷ்மோரா’வைப் பற்றிச் சொல்கிறார்கள்.

- பிரபு

இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களின் ஒருவரான பிரபுவிடம் திருட்டு டிவிடியைக் கட்டுப்படுத்துவது பற்றியும் விளம்பர உத்தி பற்றியும் கேட்டபோது:

“தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் பெரிய அளவில் இந்தப் படத்தை வெளியிடவிருக்கிறோம். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குக்குப் பிறகு பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் நாம் டிவிடி மார்க்கெட்டை விட்டுவிட்டோம். அதை நாம் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், திருட்டு டிவிடி என்பது வந்திருக்காது. காலப்போக்கில் திருட்டுத்தனமாக விற்பவர்கள் பெருகிவிட்டார்கள், அவர்களோடு உண்மையான பொருட்களை விற்பவர்களால் போட்டியிட முடியவில்லை. வருங்காலத்தில் டிஜிட்டல் மார்க்கெட்டைச் சரியாகப் பயன்படுத்தினால், திருட்டு டிவிடி ஒழிக்கப்படலாம் என்பது என் கருத்து.

மக்களாகத்தான் திருந்த வேண்டும் என்றாலும் அரசாங்கம் நினைத்தால் மட்டும்தான் திருட்டு டிவிடியைத் தடுக்க முடியும். திருட்டு டிவிடி விற்பது தப்பு என்று சட்டம் இருப்பது போல, திருட்டு டிவிடியில் படம் பார்ப்பதும் தப்புதான் என்று என்றைக்குச் சட்டம் வருகிறதோ அன்றைக்குத்தான் முழுமையாகத் திருட்டு டிவிடி ஒழிக்கப்படும்.

விளம்பரப்படுத்துவது என்பதை நாங்கள் வெறும் பணம் சார்ந்த விஷயமாகப் பார்க்கவில்லை. ஒரு படத்தின் தனித்துவமே 50% விளம்பரத்தில் முழுமையடைந்துவிடும். மக்களிடம் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தால், அவர்களே அதனை மற்றவர்களிடம் விளம்பரப்படுத்துவார்கள். மக்கள் இருக்கும் இடத்தில் ‘காஷ்மோரா’ விளம்பரம் இருப்பது போன்று மட்டுமே பண்ணவிருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

- கோகுல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in