அந்த ஹீரோ வருத்தப்படுவார்: இயக்குநர் கிருஷ்ணா

அந்த ஹீரோ வருத்தப்படுவார்: இயக்குநர் கிருஷ்ணா
Updated on
2 min read

'ஜில்லுன்னு ஒரு காதல் படத்திற்குப் பிறகு ‘நெடுஞ்சாலை' மூலம் திரும்ப வந்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா. படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் வெளியிடுவதால் படத்துக்குக் கூடுதல் கவனம் கிடைத்திருக்கும் நிலையில் இயக்குநரைச் சந்தித்தபோது...

நெடுஞ்சாலை என்ன மாதிரியான படம்?

இது சினிமாவுக்காகக் கற்பனை செய்யப்பட்ட கதை அல்ல. நிஜத்துல நடந்த சம்பவங்கள் கதையாகியிருக்கு. எந்தக் கதாபாத்திரமும் பொய்யாகச் சித்திரிக்கப்பட்டது போல் இருக்காது. நினைச்சதை அப்படியே ஸ்க்ரீன்ல கொண்டுவந்திருக்கேன்

ஏன் இத்தனை பெரிய இடைவெளி?

ஏன்னு எனக்கே தெரியலை. எல்லார் வாழ்க்கையிலயும் ‘சில்லுனு ஒரு காதல்' மாதிரி கண்டிப்பா ஒரு பக்கம், இல்லேன்னா ஒரு தருணம் இருக்கும். அந்தப் படத்தைப் பத்தி இப்பவும் பேசிட்டுதான் இருக்காங்க. அதை மிஞ்சுற அளவுக்கு ‘நெடுஞ்சாலை' படத்தைக் கொண்டு வந்திருக்கேன். படம் நிச்சயம் உங்களை ஒரு உலுக்கு உலுக்கிடும்.

முதல் படத்தில சூர்யா. இந்தப் படத்துல ஆரி. என்ன வித்தியாசம்?

‘சில்லுனு ஒரு காதல்' கதையை நிறைய பேர்கிட்ட சொன்னேன். நிறைய பேர் வேண்டாம்னு ஒதுக்கின கதை அது. சூர்யா மட்டுமே அந்தக் கதையைப் பண்ண முன்வந்தார்.

‘நெடுஞ்சாலை' கதை தயாரான உடனே, ஒரே ஒரு பெரிய நடிகரை மட்டுமே அணுகினேன். நான் பெயர் சொல்ல விரும்பல. என்னோட கதையைக் கேட்கக்கூட அவர் தயாரா இல்ல. அதுக்கு அப்புறம் இந்தக் கதையை வேறு யாரிடமும் சொல்ல விரும்பவில்லை. நமக்குக் கதை மேல நம்பிக்கை இருக்கு, நம்மதான் படத்தைப் பண்ணப் போறோம்னு யோசிச்சேன். இந்த கதைக்கு என்ன தேவையோ அதை பண்ணலாம்னு முடிவு பண்ணி, கதாநாயகனா ஆரியை களம் இறக்கினேன். கலக்கி இருக்கார். இப்போ சொல்றேன், படம் வெளியான உடனே நான் பெயர் சொல்ல விரும்பாத நடிகர் கண்டிப்பா ரொம்பவே வருத்தப்படுவார்.

படத்தோட ட்ரைய்லர் மைனா படம் மாதிரி சாயல் காட்டுதே?

அப்படியிருக்காது. படம் பார்க்கும் போது உங்களுக்கே புரியும். அன்றைக்கு இருந்த சாலைகள் இன்றைக்குக் கிடையாது. எல்லாமே மாறிடுச்சு. படத்தோட லோக்கேஷனுக்காக நிறைய அலைஞ்சோம். இந்தியா முழுசும் 6 மாதங்கள் அலைந்து படப்பிடிப்பு இடங்களை முடிவு பண்ணினேன். பல ஊர்கள், பல சாலைகள். ஆனா காட்சிகள் ஒரே சாலையில் நடக்கிற மாதிரி ரியலா இருக்கும்.

வில்லன் பாத்திரத்துக்கான முக்கியத்துவம் பெரிசா பேசப்படுதுதே?

பிரசாத் நாராயணன் அப்படின்னு ஒரு வில்லனை அறிமுகப்படுத்தி இருக்கேன். இந்தி, மராட்டி படங்கள் எல்லாம் பண்ணியிருக்கார். இந்தக் கதைக்கு போலீஸ் அதிகாரி கேரக்டர் ரொம்ப முக்கியமானது. அதுக்காக தேர்வு எல்லாம் வைச்சு, நிறைய பேரைப் பார்த்தேன். எனக்கு யாரையுமே பிடிக்கல. பிரசாந்தோட ஒரு புகைப்படத்தைப் பார்த்தேன். சரியா இருப்பார்னு நினைச்சு பேசினேன். கண்டிப்பா நான் பண்றேன்னு சொன்னார்.

மறைந்த நடிகர் ரகுவரனோட இடத்தை இதுவரைக்கும் யாருமே நிரப்பல. அந்த இடத்தை இவர் கண்டிப்ப நிரப்புவார். நான் நம்புறேன். அதேமாதிரி ஹீரோயினா பண்ற ஷிவதாவோட பங்களிப்பையும் குறிப்பிட்டு சொல்லணும். கேரளா பொண்ணு எதுக்கும் முகம் சுளிக்காத பொண்ணு.

உதயநிதி கைக்கு படம் எப்படி போச்சு?

நல்ல ஆர்கானிக் கேரட் எங்க விளைஞ்சிருந்தாலும் தேடி வர்ற முயல் மாதிரி அவர். அவரோட வேகத்தை வெச்சும்தான் இப்படி சொல்றேன். அவர் படத்தைப் பாத்துட்டு ச்சும்மா கைகுலுக்கிட்டு போயிட்டார். எனக்கு ஒண்ணுமே புரியல. அப்புறம் அவரோட ட்விட்டர் தளத்துல அற்புதமான படம்னு ஸ்டேட்டஸ் போட்டு என்னை நெகிழ வைச்சுட்டார். அடுத்த இன்ப அதிர்ச்சியா படத்தை அவரே ரிலீஸ் பண்றதாகவும் சொல்லிட்டார். படத்தை எடுக்கிறப்ப பட்ட அத்தனை அவஸ்தையும் அவரோட வார்த்தையில சுகப்பிரசவம் ஆன மாதிரி வலி அத்தனையும் மொத்தமா மறைஞ்சு போச்சு. இயக்குநர்கள் சீனு ராமசாமி, பிரபு சாலமன் இருவருக்குமே படம் போட்டுக் காட்டினேன். பிரபு சாலமன் ரொம்ப பாராட்டினார். புது ஏரியாவைத் தொட்டுருக்கீங்கனு சொன்னார். சீனு ராமசாமி கிரேட்டுன்னார். இவங்களோட பாராட்டுகளை காப்பாத்திக்கிற ஆளா அடுத்தடுத்த படங்களை நான் பண்ணணும்.

நெடுஞ்சாலை வழியாகத் தெளிவான இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கிறார் ஜில்லென்று சிரிக்கும் கிருஷ்ணா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in