திரையிசை: உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி

திரையிசை: உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
Updated on
2 min read

திரைப்படங்கள் என்பது அடிப்படையில், ஒரு தனி நபர் அல்லது அவரைச் சார்ந்த சிறிய வட்டத்தை வெளிப்படுத்தும் கலை அம்சமாக மட்டுமே திகழ்கின்றன. ஒரு நாட்டின் வரலாறு, சாதனைகள், பண்பாடு மற்றும் விழாக்கள் ஆகிய அனைத்தும் கதாநாயகன் – நாயகி அல்லது வில்லன் ஈடுபடும் செயல்கள் என்ற ‘திரையின் முக்கிய நிகழ்வுகளின்’ பின்புலமாகவே காட்சியாக்கப்படும்.

இதன் பொருட்டே, தேசம் முழுவதும் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் தீபாவளி தொடர்பான பாடல்கள் நம் படங்களில் அதிகம் இடம்பெறவில்லை.

அரிதாக, இப்படி இடம்பெற்று, அதிகம் புகழடைந்த இரு, தமிழ்-ஹிந்தி பாடல்களைப் பார்ப்போம்.

வழக்கப்படி முதலில் ஹிந்திப் பாட்டு.

1950-ம் ஆண்டு வெளிவந்த சீஷ் மஹால் (கண்ணாடி மாளிகை) என்ற சமூகத் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடலை எழுதியவர் நாஜிம் பானிபட் என்ற இஸ்லாமியர். இசை வசந்த் தேசாய் என்ற இந்து பிராமணர். பாடலைப் பாடியவர்கள், பாடத் தொடங்கிய 14-ம் வயது முதல், இறுதி மூச்சுவரை, நகல் செய்ய முடியாத தன் வசீகரக் குரலால், ‘கஜல் உலகின் ராணி’ என்று புகழப்பட்டு, அண்மையில் இந்திய அரசு சிறப்பு நாணயம் வெளியிட்டு நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட பேகம் அக்தர் மற்றும் லதா மங்கேஷ்கர் என்னும் சந்திரனின் களங்கமாக, அவரின் செல்வாக்கால் நியாயமான வாய்ப்புகள் மறுக்கப்பட்ட கீதா தத் என்னும் பாடகி. படத்தின் கதாநாயகன் மற்றும் தயாரிப்பாளர் ஸ்வரூப் மோடி என்ற பார்சி இனத்தவர். இப்படி முழுவதுமான தேசியப் பாடலாக விளங்கும் அதன் வரிகள்.

ஆயீ ரே ஆயீ ரே ஆயீ ரே

சாயீ ரே சாயீ ரே சாயீ ரே

ஆயீ ஹை தீவாளி சகீ ஆயீ

ஆயீ ஹை தீவாளி

ஆஜ் சகீ ரே உஜ்ஜியாரோ னே

ஃகர் ஃகர் மே அங்காடியீ ரே

ஆயீ ஹை தீவாளி சகீ ஆயீ

சகீ ஆயீ ரே

ஆயீ ஹை தீவாளி

இதன் பொருள்.

வந்தது வந்தது வந்தது (வந்து நிழல்)

தந்தது தந்தது தந்தது

வந்தது தீபாவளி தோழி வந்தது

வந்தது தீபாவளி.

தோழி, இன்று இந்த ஒளி வெள்ளம்

ஒவ்வொரு வீட்டின் அங்கமாகியது.

வந்தது தீபாவளி தோழி

வந்தது தீபாவளி.

தீபங்கள் எரிகின்றன திரும்பிய பக்கமெங்கும்.

இரவு, வண்ணக் கோலம்

மனதிற்குப் பிடித்த பருவ காலம்

வீசும் தென்றலில் (இன்ப) பிரகாசம்

வந்தது தீபாவளி.

ஒளி வெள்ளத்தைப் பார்த்துப் பார்த்து

தொலைவில் ஓடி விட்டது இருள்

நடனமாடு நீ நடனமாடு நீ

வந்தது தீபாவளி (என்று)

தோழி, வந்தது தீபாவளி.

இதற்கு இணையான தமிழ்ப் பாடலும் பல சிறப்புகளை உடைய, மிகப் பிரபலமான பாடல்தான்.

புரட்சிக் கருத்துகள் மட்டுமே இவரது பாடல்களில் இருக்கும் என்ற முத்திரையை ஆழமாக இன்றும் கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் என்ற மக்கள் கவிஞர் எழுதிய தீபாவளிப் பாட்டு இது. இன்றும் பலருக்கு வியப்பளிக்கும் எளிய வரிகளில், ஏ.எம். ராஜாவின் ரம்யமான இசையமைப்பில் இனிமையான ஜிக்கியின் குரலில் கல்யாணப் பரிசு என்ற வெற்றிப் படத்தில் இடம்பெற்ற அந்தப் பாடல்.

படம்: கல்யாணப்பரிசு

பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

பாடியவர்: ஜிக்கி

இசை: ஏ.எம். ராஜா

உன்னைக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து

உறவாடும் நேரமடா…

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

எண்ணத்தில் உனக்காக இடம் நான் தருவேன்

எனக்கு இனி நீ என்னென்ன தருவாய்

வல்லமை சேர நல்லவனாக

வளர்ந்தாலே போதுமடா…

சித்திரப் பூப்போலே சிதறும் மத்தாப்பு

தீயேதும் இல்லாமல் வெடித்திடும் கேப்பு

முத்திரைப் பசும்பொன்னே ஏன் இந்தச் சிரிப்பு

முகமோ மலரோ இது என்ன ரசிப்பு

மின்னொளி வீசும் உன் எழில் கண்டால்

வேறென்ன வேணுமடா…

வேறென்ன வேணுமடா…

உன்னைக் கண்டு நானாட

என்னைக் கண்டு நீ ஆட

உல்லாசம் பொங்கும் இன்பத் தீபாவளி

ஊரெங்கும் மகிழ்ந்து ஒன்றாகக் கலந்து

உறவாடும் நேரமடா…

உறவாடும் நேரமடா…

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

கன்னத்தில் ஒண்ணே ஒண்ணு கடனாகத் தாடா

கண்ணுக்குள் விளையாடும் கலையே நீ வாடா

என்ற வரிகள் பின்பு நெடுங்காலம் பேச்சு வழக்கில் பல மாறுபட்ட தருணங்களில் வெகுவாகப் புழக்கத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in