

திருநீறு இட்ட அவ்வை சந்திரலேகா
சந்திரலேகா படத்தைப் போலவே ஜெமினி எஸ்.எஸ். வாசன், அவ்வையாரின் வாழ்க்கை வரலாற்றை பிரம்மாண்டமாகத் தயாரித்தார். அன்று அவ்வையாராக நடிக்க ஒரே சாய்ஸாக இருந்த கே.பி.எஸ்.ஸுக்கு இன்று 106-வது பிறந்ததினம்.
ஐந்து ஆண்டுகள் படப்பிடிப்பு நடத்தி உருவான அந்தப் படம் 1953-ல் வெளியாகி காவிய வெற்றியைப் பெற்றது. படத்தில் அவ்வையாராகவே வாழ்ந்து காட்டியிருந்தார் கே.பி.சுந்தராம்பாள். அவருடைய குரலும், பாடல்களும், நடிப்பும் ரசிகர்களின் இதயங்களில் நீங்கா இடம் பெற்றன.
1965-ல் வெளியான திருவிளையாடல் படத்தில் மீண்டும் அவ்வையாராகவும் நடித்து தமிழர்கள் மத்தியில் அவ்வையாகவே அடையாளம் பெற்றுவிட்ட கே.பி.எஸ். மறைந்தபோது அவரை ‘தேசிய நட்சத்திரம்’ என்று புகழ்ந்தார் எம்.ஜி.ஆர். ஒருமுறை கோவை கொடுமுடியில் உள்ள கே.பி.எஸ். வீட்டுக்குச் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர். தனது வீட்டின் பூஜையறைக்கு அழைத்துச் சென்று அவரது நெற்றியில் திருநீறும் குங்குமமும் இட்டார் கே.பி.எஸ். பிறகு கே.பி.எஸ்ஸுடன் தரையில் அமர்ந்து எம்.ஜி.ஆர் உரையாடியதை க்ளிக்கியவர் அந்நாளைய புகைப்படக்காரர் கதிரவன்.
செண்டை ஜெயராம்!
பல குரலில் மட்டுமல்ல கேரளாவின் பாரம்பரியத் தாள வாத்தியக் கலையான செண்டை மேளம் வாசிப்பதிலும் ஜெயராம் விற்பன்னர். கேரளாவின் பிரபல செண்டை மேளக் கலைஞரான மட்டனூர் சங்கரன் குட்டியிடம் பயிற்சி பெற்ற இவர், கடந்த சில வருடங்களாகவே கேரளாவின் முக்கியக் கோயில்களில் செண்டை மேளம் வாசித்துவருகிறார்.
கடந்தவாரம் நவராத்திரி விழாவை முன்னிட்டு சோட்டானிக்கரை பகவதி அம்மன் கோயிலில் சுமார் மூன்று மணி நேரம், நூறு கலைஞர்களுடன் இணைந்து ஜெயராம் செண்டை மேளம் வாசித்தார்.