Published : 18 Jan 2017 10:33 AM
Last Updated : 18 Jan 2017 10:33 AM

சினிமா எடுத்துப் பார் 92: எம்.ஜி.ஆர் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பவர்கள்!

நேற்று ஜனவரி 17. புரட்சித் தலை வர் எம்.ஜி.ஆர் அவர்களின் 100-வது பிறந்த நாள். இந்த ஆண்டு முழுவதும் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் நடக்கவுள்ளன. எம்.ஜி.ஆர் அவர்கள் ‘சதிலீலாவதி’ படத்தில் துணை நடிகராக நடிக்க ஆரம் பித்து பட்டினியோடும், வறுமையோடும் வளர்ந்து புரட்சித் தலைவராக, தமிழக முதலமைச்சராக, சிறந்த அரசியல் வாதியாக, மக்கள் தொண்டராக, வள்ளலாக மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்தவர்.

அவர் இறந்து 29 ஆண்டுகள் ஆன பிறகும், அவர் பெயரை பயன் படுத்தித்தான் ஓட்டு கேட்க வேண்டிய நிலை சிலருக்கு. அவர் நடித்து ஏவி.எம். தயாரித்த ‘அன்பே வா’ படத்தை இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர் அவர்கள் இயக் கும்போது, அதில் நான் உதவி இயக்கு நர். அந்நினைவுகள் என்றும் மறக்கவே முடியாதவை. ஏவி.எம்.சரவணன் சாருக்கு இரண்டு முறை ‘செரீஃப்’ பதவி கொடுத்து பெருமைப்படுத்தியவர் எம்.ஜி.ஆர். எனக்கு நிறைவேறாத ஆசை ஒன்று உண்டு. அது, புரட்சித் தலைவரை வைத்து என்னால் படம் இயக்க முடிய வில்லை என்பதுதான். அதற்குக் காரணம், நான் இயக்குநராக ஆனபோது அவர் முதலமைச்சர் ஆகிவிட்டார்.

கவியரசு கண்ணதாசன் அவர்கள், ‘‘நான் நிரந்தரமானவன்; எந்த நிலையிலும் அழிவில்லை!’’ என்று சொல்லியதைப் போல், எம்.ஜி.ஆர் அவர்களுக்கு என் றைக்கும் மரணமில்லை. அவரது 100-வது பிறந்த நாளில் அவரை வணங்குவோம். அவரைப் பின்பற்றுவோம்!

இதே நாளில், இன்னொருவரைப் பற்றியும் சொல்ல ஆசைப்படுகிறேன். இதே 17-ம் தேதி பிறந்தவர்தான் இந்தியாவிலேயே சிறந்த தயாரிப் பாளர்களில், இயக்குநர்களில் ஒருவ ரான எல்.வி.பிரசாத்.

சினிமாவில் சேர ஆசைப்பட்டு தன்னுடைய 20-வது வயதில் மும்பைக் குச் சென்ற எல்.வி.பிரசாத், தையற்கடை உதவியாளராக, வாட்ச் மேனாக, தியேட்டரில் டிக்கெட் கிழிப்ப வராக உழைத்து முன்னேறியவர். இந் தியாவின் முதல் பேசும் படமான ‘அலெம் அரா’-வில் நடித்தார். அதன் பிறகு இயக்குநராக பல வெற்றிப் படங்களை இயக்கினார். தயாரிப்பாளர் ஆனார்.

சென்னையில் பிரசாத் ஸ்டுடியோ வைத் தொடங்கினார். அது பிரபலமாக வளர்ந்தது. நான்கு மாநிலங்களில் கலர் லேபரெட்டரி ஆரம்பித்த பெருமை அவருக்கு உண்டு. இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் இயக்கி, உலக நாயகன் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற ‘ஏக் துஜே கேலியே’ ஹிந்தி படத்தை தயாரித்தார். அப்படத்தின் வெற்றி விழா மும்பை மராத்தா மந்தீர் தியேட்டரில் நடந்தபோது, பிரசாத் அவர்கள் திடீரென்று அழ ஆரம்பித்துவிட்டார். அதைப் பார்த்த எல்லோரும் பதறிவிட்டார்கள். அப்போது பிரசாத் அவர்கள் சொன்னார்: ‘‘இந்த தியேட்டரில்தான் ஒரு காலத்தில் நான் வாட்ச்மேனாகவும், டிக்கெட் கிழித்துக் கொடுப்பவனாகவும் வேலை செய்தேன். அதே தியேட்டருக்கு ஒரு வெற்றிப் படத் தயாரிப்பாளராக வந்தபோது பழைய நினைவுகளெல்லாம் வந்து என்னை நெகிழ வைத்துவிட்டது’’ என்றார்.

இதை இந்த இடத்தில் நான் சொல்லக் காரணம் - பிரசாத் அவர்களின் ஆரம்பத்தையும், அவர் பெற்ற வெற்றிகளையும் அவருடைய பிறந்த நாளில் நாம் நினைவில் கொள்ளத்தான். சினிமாவுக்கு வரும் இளைஞர்களுக்கு பிரசாத் அவர்கள் ஒரு பாடம். தமிழில் ‘விஜயா புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பில் பிரசாத் அவர்கள் இயக்கிய ‘மிஸ்ஸியம்மா’ படத்தை ஹிந்தியில் ‘மிஸ் மேரி’ என்ற பெயரில் ஏவி.எம். தயாரித்தது. ஹிந்திப் படத்தையும் எல்.வி.பிரசாத் அவர்களே இயக்கினார். அந்தப் படத்துக்கு கே.சங்கர் எடிட்டர். நான் உதவி எடிட்டர். இதனால் பிரசாத் அவர்களின் திறமையை நேரில் பார்த்து, கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மேன்மக்கள் மேன்மக்களே!

‘அதிசய பிறவி’ படத்தில் இரண் டாவது நாயகி கனகா. இவர், நல்ல குணச்சித்திர நடிகையான தேவிகாவின் மகள். தாயைப் போலவே கனகா வும் திறமையானவர். ரஜினி போன்ற முன்னணி நடிகர்களோடு நடித்தும்கூட அவருக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்பு அமையவில்லை. வாழ்க்கை யில் குழப்பம் ஏற்பட்டால் வளர்ச்சியிலும் பாதிப்பு இருக்கத்தானே செய்யும். அவர் மன அமைதியோடு வாழ, வாழ்த்து வோம்!

இப்படத்தில் அனைத்து பாடல் களுமே சூப்பர் ஹிட். நல்ல இசை. அப்படி யென்றால் இசையமைப்பாளர் யாராக இருக்க முடியும்? ‘நம்ம இசைஞானி’ இளையராஜாதான்! ‘தானந்தன கும்மிக் கொட்டி.. கும்மிக் கொட்டி’, ‘உன்னைப் பார்த்த நேரம்… ஒரு பாட்டெழுதிப் பாடத் தோணும்’ போன்ற பாடல்களில் ரஜினி, கனகாவின் நடிப்பும், நடனமும் சிறப்பாக அமைந்தது. அதேபோல மும்பை நாயகி ஷீபா ஆகாஷ்தீக்கோடு, ரஜினி இணைந்து டூயட் பாடும் ‘சிங்காரி பியாரி’ பாடலும் கவனம் பெற்றது. ‘அன்னக் கிளியே சொர்ணக் கிளியே சந்தேகம் உனக்கு ஏனடி?’ பாடலில் ரஜினி ஒரு நாயகிக்குத் தெரியாமல் இன்னொரு நாயகியோடு மாறி மாறி ஆடும் பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனதோடு, மக்களாலும் வெகுவாக ரசிக்கப்பட்டது. இவ்வளவு அம்சங்கள் இருந்தும் தெலுங்கில் வெற்றியடைந்த அளவுக்கு இப்படம் தமிழில் வெற்றிபெறவில்லை. ‘ஆவி’ மாற்றத்தை ‘காதுல பூ சுத்துறாங் கப்பா’ன்னு படம் பார்த்தவர்கள் கமென்ட் அடித்தார்கள். பக்கத்துக்கு பக்கத்து மாநிலம்தான்; ரசனையில்தான் எவ்வளவு வித்தியாசம்!

இந்தக் காலகட்டத்தில்தான் தொலைக்காட்சியில் சின்னத்திரை தொடர்கள் வரத் தொடங்கின. ஏவி.எம். சரவணன் சாரை சந்தித்து, ‘‘நாமும் தொலைக்காட்சித் தொடர்கள் எடுக்க லாம் சார்!’’ என்று என் யோசனையை சொன்னேன். அவரும் அதற்கு, ‘‘ஓ! தாராளமா எடுப்போமே!’’ என்று சம்மதம் சொன்னார். உடனே சின்னத்திரை தொடர் களுக்காக கதைகள் தேட ஆரம் பித்தோம்.

ஒருமுறை ஹோட்டலில் எதேச்சை யாக நாடக எழுத்தாளர் வெங்கட் அவர் களை சந்தித்தபோது அவர், ‘‘முன்னே மாதிரி இப்போ வேலை இல்லை சார். ஏதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுங்க’’ என்று என்னிடம் சொல்லியிருந்தார். அது நினைவுக்கு வந்தது. வெங்கட் எழுதிய பல மேடை நாடகங்கள் பெரிய அளவில் வெற்றிப் பெற்றிருந்ததும் என் நினைவுக்கு பலம் சேர்க்க, அவரை அழைத்து தொலைக்காட்சி தொடர் இயக்கும் ஐடியாவை சொல்லி, கதை சொல்ல ஏவி.எம்.சரவணன் சாரிடம் அழைத்துச் சென்றேன்.

மூன்று, நான்கு கதைகள் சொன்னார். அக்கதைகள் சரவணன் சாருக்கு திருப்தி தரவில்லை. உடனே நான் வெங்கட்டிடம், நான் பார்த்து ரசித்த அவரது வேறொரு நாடகத்தின் கதையைச் சொல்லச் சொன்னேன். அந்தக் கதை சரவணன் சாருக்கு ரொம் பவும் பிடித்துப் போனது. அமிர்தம் கோபால் தயாரித்து வெங்கட் கதை - வசனம் எழுதி இயக்கிய ‘காசேதான் கணவனடா’என்ற நாடகக் கதைதான் அது. அந்நாடகத்தை தொலைக்காட்சி தொடருக்கு ஏற்ற வடிவத்தில் வெங்கட் அவர்களை எழுதச் சொன்னோம். அவரும் எழுதினார். அந்தத் தொடர் எந்தத் தொடர்?

- இன்னும் படம் பார்ப்போம்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x