Published : 07 Mar 2014 12:00 AM
Last Updated : 07 Mar 2014 12:00 AM

நட்சத்திரங்களுடன் என் வானம்..!: நிதி என்றால் கூடுதல் கவனம்!

எக்ஸ்க்ளூசிவ்… பத்திரிகையுலகில் நிருபர்களைப் பாடாகப் படுத்தும் வார்த்தை இதுதான். கிடைக்காத விஷயங்களைத் தேடித் தேடிக் கொண்டுவர வேண்டியிருக்கும். சில நேரங்களில் தானாகச் சில விஷயங்கள் வலையில் வந்து விழும். அப்படி வந்து விழுந்தவர்தான் உதயநிதி. அப்போது அவர் நடிகரில்லை, தயாரிப்பாளர் இல்லை. பிஸினஸ்மேன்.

சென்னையின் புதிய விளையாட்டு வடிவமான ஸ்னோ பவுலிங் என்ற விளையாட்டு மையத்தைத் தொடங்கும் முயற்சியில் இருந்தார். அந்த மையத்தை அப்போது சென்னை மேயராக இருந்த ஸ்டாலினை வைத்து தொடங்கும் திட்டத்தை வைத்திருந்தார். ஸ்னோ பவுலிங் தொடங்கப்படும் நாளில் பத்திரிகை கடைக்கு வரும் என்பதால் அதற்கு முன்பே தனியாக ஒரு ரிப்பன் கட்டிங்கைச் செய்ய வைத்து அதை ஸ்டோரி ஆக்கிவிடலாம்; அப்படிச் செய்தால் மையம் தொடங்கப்படும் நாளில் பத்திரிகையில் செய்தி வெளியாகும், எக்ஸ்க்ளூசிவ் என்ற பதத்துக்கு அர்த்தமாக இருக்கும் என்று திட்டமிட்டு அதை உதயநிதியிடம் சொன்னதும் டபுள் ஓகே சொல்லிவிட்டார்.

“வெறுமே நீங்களும் உங்க அப்பா ஸ்டாலினும் மட்டும் இருந்தா போதாது. இது இளைஞர்களுக்கான விளையாட்டு… அதனால் கொஞ்சம் காலேஜ் பொண்ணுங்க இருந்தா நல்லாயிருக்கும்” என்று உதயநிதியிடம் சொல்ல, “நீங்க வர்றப்ப ஏரியாவே கலகலனு இருக்கும்” என்றார்.

நிஜமாகவே ஏரியா கலகலவென்று இருந்தது. ஸ்டாலின் ஸ்னோ பவுலிங் பந்தை எடுத்து விளையாடுவதுபோலப் புகைப்படங்கள் எடுத்துவிட்டு, இந்த விளையாட்டைப் பற்றி அப்பாவும் மகனும் பேசிக் கொள்வதுபோலவும் படங்கள் எடுத்துக்கொண்டோம். பிறகு எல்லாப் பெண்களும் ஸ்டாலினோடு உரையாடுவதுபோல போட்டோ எடுக்க ஒருங்கிணைத்தபோது உதயநிதியின் முகத்தில் பதற்றம் குடியேறியது.

ஸ்டாலினுக்கு அருகே நின்றுகொண்டு அவரோடு பேசிக்கொண்டிருந்த பெண்ணைப் பார்த்து கண்களால் கண்டிப்பு காட்டிக்கொண்டிருந்தார் உதயநிதி. இதை ஓரக் கண்ணால் பார்த்த புகைப்படக்காரர் அந்தப் பெண்ணும் ஸ்டாலினும் மட்டும் பேசிக்கொண்டிருப்பது போல ஒரு க்ளோசப் படத்தை எடுக்க, உதயநிதிக்கு இன்னும் பதற்றம்.

பேட்டி வேலை முடிந்து ஸ்டாலின் வண்டியில் ஏறியதும் உதயநிதி வேகமாக உள்ளே வந்தார். “கிரு… என்ன நீ… அப்பகிட்டே இவ்ளோ கேஷுவலா பேசறே? எனக்கு வேர்த்துடுச்சு. இன்னும் நான் தாத்தாகிட்டேகூட எதுவும் சொல்லலை…” என்றார். அப்போதுதான் அந்தப் பெண் கிருத்திகா, உதயநிதியின் தோழி என்றும் இருவருக்கும் நடுவே வேறொரு டிராக் ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் தெரியவந்தது,

“சார்… இந்த விஷயம் எதுவும் எழுதிட வேணாம்” என்றார்.

அடுத்து ஒருமுறை கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வைத்து இருவரையும் பார்த்தபோது, “என்ன இவ்ளோ தைரியமா..?” என்றதும், “தாத்தாகிட்டே பேசியாச்சு..!” என்றார் சிரிப்போடு.

அதுவரையில் உதயநிதியும் கிருத்திகாவும் ஒன்றாக இருப்பது போல படங்கள் எதிலேயும் வரவில்லை. “அன்னிக்கு நீங்க எங்களை அப்பாகிட்டே மாட்டிவிடாம இருந்ததற்கு பரிசா இன்னிக்கு போட்டோ எடுத்துக்கோங்க!” என்றார். இருவரும் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இருக்கும் படம் அந்த வாரக் கட்டுரையில் வெளியாக, அதன் பிறகுதான் இந்த ஜோடி எல்லோருடைய கவனத்துக்கும் வந்தது.

அதன் பிறகு எந்த விழாவில் பார்த்தாலும் எந்த நிகழ்வில் பார்த்தாலும் ஹாய் ஹலோ சொல்வார். இயல்பிலேயே அவருக்குக் கூச்ச சுபாவம் என்பதால் அதற்கு மேல் பேச மாட்டார். படத் தயாரிப்பில் இறங்குகிறார் என்ற செய்தி வெளியாகி பூஜை, ஷூட்டிங் என்று போன பிறகும்கூடப் பத்திரிகைகளில் அவர் பேட்டி பெரிதாக வெளியாகவில்லை. பத்திரிகைகளைத் தனியே சந்திக்காமல் தவிர்ப்பது போலவே தோன்றியது.

பணம் பற்றி அவருக்கு இருக்கும் கருத்துகளைக் கேட்டு கட்டுரையாக்கலாம் என்று போன் பண்ணியபோது உடனே சந்திக்கலாம் என்றார். பள்ளி நாட்களில் பாக்கெட் மணிக்காகப் படாத பாடு பட்டது பற்றியும், கல்லூரி காலத்தில் காசு சேர்த்து iவார இறுதியில் ஓட்டலில் பரோட்டா சாப்பிட்டது பற்றியும் சொன்னவர், கன்ஸ்ட்ரக் ஷன் பிசினஸில் பட்ட கஷ்டங்களையும் சொல்லி, பணம் தன் வாழ்வில் எத்தனை முக்கியமாது என்பது பற்றியும் பேசினார். பேட்டியை முடித்துக்கொண்டு புறப்பட்ட போது, “சார்… என் சினிமா தயாரிப்பு பத்தி எதுவுமே கேட்கலையே..?” என்றார்.

“இல்லே சார்… நான் உங்க கிட்டே பணம் பற்றி பேசறதாகத்தான் அனுமதி கேட்டேன். அதுக்கு மேல கேட்கறது சரியா இருக்காது. அதனால்தான்…” என்றதும் சிரித்துவிட்டு, “உங்ககிட்டே என் சினிமா ப்ராஜெக்ட் பத்தி பேசறது எனக்கு சந்தோஷம்தான். இதை தனி பேட்டியா வெச்சுக்கோங்க. ஸ்டில்ஸ் தரச் சொல்றேன்” என்றார்.

டபுள் தமாக்காவாக அமைந்தது அந்தப் பேட்டி. எல்லா விஷயங்களும் பேசி முடித்ததும், “சார்… எழுதி முடிச்சதும் ஒரு தடவை வாசிச்சுக் காட்டிடறீங்களா..?” என்றார். எப்போதுமே அவர் அப்படிக் கேட்டதில்லை. “சினிமாவுல நுழைஞ்சதும் தப்பா ஏதும் வந்துடக் கூடாதுனு கவலைப்படுறீங்களா..?” என்றதும் மீண்டும் சிரித்தார்.

“நான் வாசிச்சுக் காட்டச் சொன்னது சினிமா பேட்டியை இல்லை. அதை நீங்க கரெக்டா பண்ணிடுவீங்க. நான் கேட்டது பணம் பத்தி நான் சொன்ன விஷயங்களை. ஏன்னா, பணம் பத்தி நான் கருத்து சொல்றேன்னா நாலு அர்த்தம் வெச்சு எல்லாரும் படிப்பாங்க… அதனால்தான் நீங்க எழுதறதை என்ன அர்த்தத்துல படிப்பாங்கனு நான் பார்த்துக்கலாமேனு கேட்டேன்” என்றார்.

அதேபோல வாசித்துக் காட்டியதும் சந்தோஷமாக “கரெக்டா இருக்கு சார்… நான் சொன்ன தொனி மாறாமல் இருக்கு. தப்பா எடுத்துக்காதீங்க. எங்க குடும்ப சூழ்நிலை அப்படி” என்றார்.

தாத்தாவில் தொடங்கி அத்தனை பேரிடமும் பெயரிலேயே நிதி இருக்கிறது. அதனால் அவர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டியிருக்கிறதுபோல!

தொடர்புக்கு cmbabu2000@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x