

“பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும்போது ‘கத்திரிப்பூ’ படம் வரையச் சொல்லி ஆசிரியர் அசைன்மென்ட் கொடுத்திருந்தார். கத்திரிப்பூ வித்தியாசமாக இருக்கட்டுமே என்று பென்சிலை கொஞ்சம் ஈரமாக்கி வண்ணம் தீட்டினேன். அப்போது அந்த கத்தரிப்பூ படம் வயலட் கலர்ல வந்துச்சு. வகுப்பில் இருந்த 40 பேர்ல என்னோட கத்திரிப்பூ ஓவியம் தனியா தெரிஞ்சது. அந்த கவனம்தான் எனக்கு ஓவியத்தின் மீது தனி காதலை விதைத்தது!’’ என்று ஓவியக் கலை மீது தனக்கு ஆர்வம் ஏற்பட்ட சம்பவத்துடன் பேசத் தொடங்கினார் வி.செல்வகுமார். தமிழ் சினிமாவின் தற்போதைய முன்னணி கலை இயக்குநர்களில் ஒருவர். எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய ‘இயற்கை’ படத்தின் வழியே தமிழ்த் திரையுலகில் நுழைந்த இவர், ‘ஈ’, ‘பேராண்மை’, ‘மதராசப்பட்டினம்’, ‘நீர்ப்பறவை’ என்று நம் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட பல படங்களுக்கு அபூர்வமான செட்களைப் போட்டு கிறங்கடித்தவர். தன் கலை மற்றும் சினிமா அனுபவங்களைப் பற்றி தொடர்ந்து அவர் பேசியதிலிருந்து:
சிறு வயதில் இருந்தே உங்களுக்குள் இருந்த திறமையை எங்கே பட்டை தீட்டிக் கொண்டீர்கள்?
சென்னை ஓவியக் கல்லூரியில்தான். சிறு வயதில் இருந்தே ஓவியப் போட்டிகள் எல்லாவற்றிலும் நான் தவறாமல் கலந்துகொள்வேன். அந்த சமயம் டி.வியில் ‘சித்திரப்பாவை’ என்றொரு தொடர் ஒளிபரப்பானது. அதைப் பார்த்தபின் தான் ஓவியத்துறைக்கு தனியே படிப்பு இருக்கு என்று தெரிந்துகொண்டேன். 10-ம் வகுப்பு முடித்த கையோடு சென்னை அரசு ஓவியக்கல்லூரியில் 5 ஆண்டுகள் ஓவிய மாணவனாகத் திரிந்தேன். என் பயணத்தில் பூக்கள் பூத்த தருணம் அதுதான்.
சினிமா பயணம் எப்படி தொடங்கியது?
கல்லூரி முடிக்கும் சமயத்தில் நல்ல ஓவியனாக இருக்க வேண்டும் என்பது மட்டும்தான் எண்ணமாக இருந்தது. எம்.எஃப்.ஏ படிக்க வேண்டும் என்ற ஆசையில் கொஞ்ச நாட்கள் மல்டி மீடியா துறை சார்ந்த வேலைக்கு போய் வந்தேன். அங்கே கலை இயக்குநர் சாபுசிரிலின் நட்பு கிடைத்தது. அவருக்கு அந்த நேரத்தில் ஒரு உதவியாளர் தேவைப்பட்டார். அவரிடம் சேர்ந்தேன். ஏழரை ஆண்டுகள் அவரிடம் வேலை பார்த்தேன். ‘மருதநாயகம்’, ‘ஹேராம்’, ‘பாய்ஸ்’, ‘சிட்டிசன்’ என்று சாபுசிரில் தமிழில் பணியாற்றிய படங்களில் உடன் வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அந்த நேரத்தில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் சாபுசிரிலிடம் ‘இயற்கை’ படத்தின் கதையை விவரிக்க வந்தார். அந்த பட்ஜெட்டுக்குள் செட் ஆகுமா என்று யோசனையோடு இருந்த சாபுசிரில் என் பக்கம் திரும்பி, “ என் உதவியாளன் நல்லா பண்ணுவான். அவனை செய்யச் சொல்லவா?” என்று கைகாட்டி விட்டார். எஸ்.பி.ஜனநாதன், ‘உங்கள் மேல் உள்ள நம்பிக்கையில் ஒப்புக்கொள்கிறேன்’ என்று என்னை ஏற்றுக்கொண்டார். இயற்கை படம் தொடங்கி ஜனநாதனின் ‘ஈ’, ‘பேராண்மை’, ஜனவரி முதல் வாரம் தொடங்கத் திட்டமிடப்பட்டிருக்கும் அவரின் புதிய படம் வரைக்கும் நான்தான் கலை இயக்குநர். அப்படி ஒரு நல்ல அலைவரிசை எங்கள் இருவருக்கும்.
ஒரு ஓவியக் கலைஞனாக சினிமாவில் எந்த அளவுக்கு சுதந்திரமாக பயணிக்க முடிகிறது?
சினிமா என்னோட கலை இல்லை. இயக்குநருக்கும், கதைக்கும் தேவைப்படுகிற விஷயத்தை நான் பாலமாக இருந்து செய்வேன். அவ்வளவுதான். என் படங்களில் என்னோட கலை சார்ந்த விஷுவல் பங்கீடு இருக்கும். கண்டிப்பா அதை அங்கங்கே தெளிக்க முடியும். ஒரு ஹாலில், ஒரு புத்தகத்தை வைக்க வேண்டும் என்றால், அந்த தருணத்தில் நமக்குப் பிடித்த எழுத்தாளரின் புத்தகத்தை வைத்து அழகு பார்ப்பேன். இயக்குநர் ஜனநாதன் மாதிரியானவர்கள் கிடைக்கும்போது நன்றாக பணிபுரிய முடியும். ‘பில்லா 2’ படம் செய்தபோது நிறைய மாற்றம் வேண்டும் என்று சண்டை போட்டேன்.
இதுவரை எத்தனை படங்களுக்கு செட்களை அமைத்துள்ளீர்கள்?
மொத்தமாக 22 படங்களுக்கு செட் அமைத்திருக்கேன். அதில் கலையில் செல்வா ஒரு ஸ்கேல் கொடுத்திருப்பார் என்று பாராட்டை பெற்ற படங்கள் சில. என்னோட வேலைகளில் எனக்குப் பிடித்தப்படம் ‘ஈ’. அதில் கலை ஒரு வாழ்க்கையாகவே இருப்பதாகவே இன்றைக்கும் உணர்கிறேன். என் முதல் படமான ‘இயற்கை’ படத்தின் ‘லைட்ஹவுஸ்’ ரொம்பவே நல்லபெயர் வாங்கித் தந்தது. அதுபோல் ‘பேராண்மை’ படத்தின் 11 அடி ஏவுகணை செய்முறை திட்டமெல்லாம் நல்ல கவனத்தை பெற்றது. அதேபோலத்தான் ‘நீர்ப்பறவை’, ‘நேபாளி’, ‘பில்லா 2’, ‘மதராசப்பட்டிணம்’ ஆகிய படங்கள் என்னை வெளியே அடையாளம் காட்டியது. இப்போது, ‘இது கதிர்வேலன் காதல், ‘சைவம்’, ‘அஞ்சல’, ‘அமர காவியம்’, ஜனநாதன் புதிய படம் என்று 6 படங்களில் பணியாற்றுகிறேன்.
பிடித்த கலை இயக்குநர்?
பார்த்து வியந்தது, தோட்டாதரணி. கூடவே இருந்து பழகி புரிந்துகொண்டது சாபுசிரில். மகி, மணிராஜ், ராஜீவன், முத்துராஜ், நாகராஜ், சந்தானம், கிரண் எல்லாருமே நல்லா பண்றாங்க. அவங்களோட வேலைகள் ரொம்பவே ரசிக்கும்படியா இருக்கு.
குடும்பம்?
என் சொந்த ஊர் காஞ்சிபுரம். அப்பா காலத்திலேயே சென்னைக்கு வந்தாச்சு. அப்பா, அச்சுத் தொழிலில் இருந்தாங்க. என்னை ஓவியக்கல்லூரியில் அப்பா சேர்ப்பதற்கு அவரது தொழிலும் ஒரு காரணம். திருமணம் முடிந்தது. ஒரு பெண் குழந்தை. அவங்களுக்கு 6 வயது. இப்போ தான் பள்ளிக்கு போகத் தொடங்கியிருக்காங்க. பெரிதா பொழுதுபோக்கு எல்லாம் இருக்காது. ஷூட்டிங் இல்லை என்றால் ஈவண்ட் வேலைகளில் இறங்கிடுவேன். விளம்பரப்படங்கள் வேலைகள் பிடிக்கும். சமீபத்தில் ‘தி இந்து’ நாளிதழ் தொடங்கப்பட்ட போது அதுக்கான விளம்பர ஆர்ட் வொர்க்களைக்கூட செய்தேன். காசி, தென் ஆப்ரிக்கா, சென்னை இந்த பின்னணியில் உருவாக்கிய ஆர்ட் வேலைகள் எல்லாம் நல்ல ரீச் ஆச்சு. இப்படித்தான் எந்தன் கலையும், கலை சார்ந்த பயணமும் தொடர்கிறது.