Last Updated : 10 Feb, 2017 10:11 AM

 

Published : 10 Feb 2017 10:11 AM
Last Updated : 10 Feb 2017 10:11 AM

சினிமா ஸ்கோப் 26: காதல் கவிதை

புகழ்பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஃபியோதர் தஸ்தோயெவ்ஸ்கி எழுதி, 1848-ல் வெளியான கதை ‘ஒயிட் நைட்ஸ்’. பனி பொழியும் காலத்தின் நான்கு இரவுகளில் நடைபெறும் சம்பவங்களை உள்ளடக்கிய கதையான இது ஒரு கனவுலகவாசியின் நனவுலகக் குறிப்புகள். கதைப்படி அந்தக் கனவுலகவாசி கூச்ச சுபாவி. அவனது பிரதேசத்தில் அழகிய இளம்பெண்கள் பிரவேசித்ததில்லை. பெண்களின் உலகுக்குள் அவனும் அத்துமீறி நுழைந்ததில்லை. ஓரிரவில் அவன் சந்திக்கும் இளம்பெண் ஒருத்தி அவனது வாழ்வின் திசையை மாற்றுகிறாள். தன்னைப் பிரிந்து சென்ற காதலனுக்காகக் காத்திருக்கிறாள்.

நான்கு நாட்களுக்குள் கனவுலவாசிக்கும் இளம் பெண்ணுக்கும் நட்பும் காதலும் உருவாகிவிடுகின்றன. அவள் முழு மனத்துடனும் காதலுடனும் கனவுலகவாசியுடன் கைகோத்த கணத்தில் பழைய காதலன் தோன்றிவிடுகிறான். அந்தக் காதலனுடன் சென்றுவிடுகிறாள் இளம்பெண். கனவுலகவாசி மீண்டும் தன் கனவுகளில் தஞ்சமடைந்துவிடுகிறான்.

அவளின் முடிவுகள்

சற்றே நீண்ட இந்தச் சிறுகதையை உலகின் பல இயக்குநர்கள் படமாக்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு இயக்குநரும் ஒவ்வொரு விதமான படத்தைப் படைத்திருக்கிறார்கள். கதை ஒன்றுதான். ஆனால், திரைக்கதையின் போக்குக்கு ஏற்ப இதன் காட்சிகளும், கதாபாத்திரங்களின் தோற்றங்களும் மாறுபடுகின்றன. களம் மாறுபடுகிறது, கதாபாத்திரங்களின் நடவடிக்கைகளில் வித்தியாசம் வந்துவிடுகிறது. இப்படி யாக அவை வெவ்வேறு வகையான திரை அனுபவங்களைத் தருகின்றன.

அடிப்படையில் இந்தக் கதையே முழுக்க முழுக்க காதலுணர்வில் முகிழ்த்த கதை. ஆகவே அசட்டுத்தனங்களுக்கும் அற்புதத் தருணங்களுக்கும் குறைவில்லை. ஒரு திரைப்படத்துக்குத் தேவையான திடுக்கிடும் திருப்பங்கள் என எவையுமில்லை. ஆனால், அறிவால் எளிதில் புரிந்துகொள்ள முடியாத உணர்வின் அடிப்படையில் அந்த இளம்பெண் எடுக்கும் முடிவுகள் அதிர்ச்சிதரவல்லவை.

இனிய காட்சியனுபவம்

இந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு 1957-ல் இத்தாலிய இயக்குநர் லூக்கினோ விஸ்கோந்தி ‘ஒயிட் நைட்ஸ்’ என்னும் பெயரிலேயே ஒரு படத்தை உருவாக்கினார். கறுப்பு வெள்ளைப் படமான இதில் பனிபொழியும் இரவு, ஆற்றுப் பாலம், அதை ஒட்டிய பகுதிகளில் நடைபெறும் சம்பவங்கள் ஆகியவை அசையும் ஓவியங்களைப் போலவே காட்சிகொள்ளும். கதையைப் போலவே இதிலும் இளம்பெண்ணின் பாட்டி உறங்கும்போது, தன்னுடன் அந்தப் பெண்ணின் உடையைப் பிணைத்திருப்பார். தீவிர வாசிப்பனு பவத்துக்கான கதையை இனிய காட்சியனுபவமாக மாற்றியிருப்பார் இயக்குநர்.

பிரெஞ்சுப் படம்

இதே கதையை 1971-ல் ‘ஃபோர் ஆஃப் எ ட்ரீம்மர்’ என்னும் பெயரில் ஃபிரெஞ்சு இயக்குநர் ராபே ப்ரேஸான் (ஆங்கில உச்சரிப்பு ராபர்ட் ப்ரஸ்ஸான்) படமாக்கினார். ‘பிக் பாக்கெட்’ படத்தை உருவாக்கிய ராபே ப்ரேஸான் தனக்குரிய முத்திரைகளுடன் ஒயிட் நைட்ஸ் கதையைக் கையாண்டிருப்பார். இந்தக் கதையில் இளம்பெண்ணுக்குப் பாட்டி கிடையாது. அதற்குப் பதில் அம்மா. தனது தனிமைக்குள் உழலும் அந்தக் கனவுலகவாசி ஓர் ஓவியன், ஆனால் அதையே பிறரிடம் வெளிப்படுத்தாத அளவுக்கு உள்ளடங்கிய குணம் கொண்டவன்.

தன் குரலில் தானே பேசி அதைக் கேட்டு மகிழ்பவன். அழகிய வெள்ளைப் புறாக்கள் புல் தரையில் அலைவுறும் ஒலியை மிகுந்த விருப்பத்துடன் பதிவு செய்யும் அளவுக்கு மென்மையானவன். காதலனுக்காகக் காத்திருந்த இளம்பெண் அவனைத்தான் காதலிக்கிறாள்; காதலன் திரும்பிவிடவும் கைவிட்டுவிடுகிறாள்.

ஸ்ரீதரின் கலைவண்ணம்

முக்கோணக் காதல் கதைகளைத் தனித்துவத்துடன் இயக்கியிருந்த இயக்குநர் ஸ்ரீதர் கதை வசனம் எழுதி இயக்கிய ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’ (1979) திரைப்படத்தில் ஒயிட் நைட்ஸின் பாதிப்பை உணர முடியும். திரைக்கதையில்ஸ்ரீதர் செய்திருந்த பல மாற்றங்களே இந்தப் படத்தை ஒயிட் நைட்ஸிலிருந்து வேறுபடுத்தும். வேணி என்னும் இளம் பெண் கதாபாத்திரத்தை லதா ஏற்று நடித்திருப்பார். அவருடைய காதலனாக ஜெய்கணேஷ் வேணு என்னும் பாத்திரத்திலும், வேணியை உருகி உருகிக் காதலிக்கும் வாசு என்னும் பாத்திரத்தில் விஜயகுமாரும் நடித்திருப்பார்கள். காதலன் பாத்திரத்தை ஸ்திரீலோலனாக மாற்றியிருப்பார் ஸ்ரீதர். ஒயிட் நைட்ஸில் ஓராண்டில் திரும்பிவந்துவிடுவதாகக் காதலன் கதாபாத்திரம் சொல்லிவிட்டுச் செல்லும். ஆனால், இதில் வேணியிடம் வேண்டியது கிடைத்ததும் ஜெய்கணேஷ் தலைமறைவாகிவிடுவார்.

பல முற்போக்கு சங்கதிகளை இந்தப் படம் கொண்டிருக்கும். வேணியின் அண்ணன் மகளாக வரும் பருவப் பெண் அடல்ட் ஒன்லி ஜோக்குகளை அள்ளிவிடுபவளாக நடித்திருப்பாள். வேணுவிடம் வேணி தன்னை இழந்திருப்பதை அறிந்தும் அவளைக் கரம் பற்ற விரும்புபவனாகவே வாசுவின் கதாபாத்திரத்தைப் படைத்திருப்பார் ஸ்ரீதர். வாலி எழுதிய ‘என் கல்யாண வைபோகம்’, ‘நானே நானா யாரோ தானா?’ உள்ளிட்ட பல பாடல்கள் இந்தப் படத்தை மறக்க முடியாததாக மாற்றியிருக்கிறது.

2003-ல், தோழர் எஸ்.பி.ஜனநாதன் கதை, வசனம் இயக்கத்தில் வெளியான ‘இயற்கை’ படமும் இதன் பாதிப்பில் உருவானதே. இதை ஜனநாதனே நேர்காணல்களில் குறிப்பிட்டிருக்கிறார். அதனால்தானோ என்னவோ படத்தின் டைட்டிலில் எதுவும் குறிப்பிட்டிருக்க மாட்டார். ஸ்ரீதரின் படத்தில் கனவுலகவாசியின் சாயல் கொண்ட கதாபாத்திரத்தில் விஜயகுமார் நடித்திருந்தார் என்றால் இயற்கையில் காதலன் கதாபாத்திரத்தில் அவருடைய மகன் அருண் விஜய் நடித்திருப்பார்.

பொழுதுபோக்குப் படங்களை உருவாக்கிவந்த ஸ்ரீதர் படத்தின் கதாபாத்திரங்கள் போல் முற்போக்கான கதாபாத்திரங்களை, மாற்றுப் படங்களை உருவாக்குவதான பாவனை காட்டும் ஜனநாதன் உருவாக்கவில்லை. நாயகி மாசற்ற பெண்ணாகவே படைக்கப்பட்டிருப்பாள். நெய்தல் நிலத்தின் பின்னணியில் படத்தை உருவாக்கியிருந்ததால் படத்துக்குப் புதியதொரு நிறம் கிடைத்தது. சிறந்த படமென மாநில அரசின் விருதும் கிடைத்தது.

பாலிவுட்டின் ‘ஒயிட் நைட்ஸ்’

இத்தனை படங்களுக்குப் பின்னர், இந்திப் பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, ‘சாவரியா’ (2007) என்னும் பெயரில், ஒயிட் நைட்ஸ் கதையை ஒரு காவியப் படமாக்கினார். காதலனாக சல்மான் கானும், காதலியாக சோனம் கபூரும், கனவுலகவாசியாக ரன்பீர் கபூரும் நடித்திருப்பார்கள். இத்தாலிப் படத்திலும், ஃபிரெஞ்சுப் படத்திலும் அந்த இளம் பெண் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவளாகக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பாள். இந்திப் படத்தில் அந்தப் பெண் இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்தவள். மெலோ டிராமா வகையைச் சேர்ந்த இந்தப் படம் ஒயிட் நைட்ஸின் தீவிரத் தன்மையைக் குறைக்கும் வகையிலானது.

ஸ்ரீதரைப் போலவே, அமெரிக்க இயக்குநர் ஜேம்ஸ் க்ரேயும் இந்தக் கதையின் பாதிப்பில் 2008-ல் ‘டூ லவ்வர்ஸ்’ என்னும் பெயரில் ஒரு படமெடுத்தார். இதில் அந்தக் கனவுலக வாசிக்கு வேறு ஒரு காதலியையும் இவர் உருவாக்கியிருப்பார். தான் விரும்பிய இளம் பெண் அவளுடைய காதலனுடன் சென்ற பிறகு, கனவுலகவாசி மற்றொரு காதலியைத் தஞ்சமடைந்துவிடுவான்.

ஒரே கதையைப் பல்வேறு திரைக்கதைப் பாதைகளில் கொண்டுசென்று பல படங்களை உருவாக்கிவிட முடியும். ஆனால் எல்லாப் படங்களும் தனித்துவம் கொண்டதாக அமைய வேண்டுமென்றால் அதற்கு இயக்குநரின் ஒத்துழைப்பு தேவை. அவருடைய பார்வை வழியேதான் படம் மெருகேறும்; அல்லது மொண்ணையாக மாறும்.

தொடர்புக்கு: chellappa.n@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x