

செயற்கைக் கருத்தரிப்புக்குப் பின் னால் நடக்கும் முறைகேடுகளை மையமாகக் கொண்ட கிரைம் த்ரில்லர்தான் குற்றம் 23.
பாவ மன்னிப்பு அளிக்கும் பாதிரியார் மர்மமான முறையில் தேவாலயத்தில் இறக்கிறார். அதே நேரத்தில் பாவ மன்னிப்பு கேட்டு அங்கே வரும் ஒரு பெண் காணாமல் போகிறார். இந்த இரு சம்பவங்களுக்கும் இடையில் தொடர்பு இருக்கிறது என்ற நோக்கில் உதவி ஆணையர் வெற்றிமாறன் (அருண் விஜய்) விசாரணையில் இறங்குகிறார். சம்பவம் நடக்கும்போது தேவாலயத்துக்குச் சென்ற தென்றல் (மஹிமா) முதலான சிலர் கூறும் தக வல்களை வைத்துக்கொண்டு விசார ணையை முன்னெடுக்கிறார்.
கருவுற்ற பெண்கள் சிலர் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொள்வது இந்த வழக்கை மேலும் சிக்கலாக்குகிறது. இந்தச் சம்பவங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம் என்ன என்பதுதான் மீதிக் கதை.
குற்றச் சம்பவங்களையும் புலனாய்வை யும் விறுவிறுப்புடனும் யதார்த்தமாகவும் சித்தரிக்கிறார் இயக்குநர் அறிவழகன். விசாரணையிலிருந்து விலகிச் செல்லாமல் காதல் உள்ளிட்ட விஷயங்களை அடக்கி வாசித்திருப்பதால் திரைக்கதை கச்சித மாகவே நகர்கிறது. ஆக்ஷன் த்ரில்லர் படத்துக்கான முடிச்சுகளைக் கனமாக அமைத்திருக்கிறார். ஆனால், அந்த முடிச்சுகளை அவிழ்க்கும்போது இருக்க வேண்டிய சுவாரஸ்யமும் பரபரப்பும் போதிய அளவு கூடவில்லை. இரண்டாம் பாதியின் நீளமும் ஃபிளாஷ்பேக் காட்சியின் இழுவையுமே அதற்கான காரணங்கள்.
படத்தின் மையமே குழந்தைப் பேறு தொடர்பான வம்சி கிருஷ்ணாவின் உணர்ச்சி தான். அவரது பிரதான நோக்கம் குழந்தை சார்ந்ததுதானே? இதில் பணம் கேட்டு மிரட் டும் கிளைக் கதை எதற்கு? பிரச்சினை பணமா, குழந்தையா என்பதில் தெளிவில்லை. குழந்தைதான் முக்கியம் என்றால் கரு வுற்ற பெண்களிடம் உண்மையைச் சொல்லா மல் இருந்திருக்கலாம். பணம்தான் முக் கியம் என்றால் படத்தின் ஜீவனே சிதைந்து போகிறது. பணம் நண்பர்களுக்காக, எனக்கு எமோஷன்தான் முக்கியம் என்று வம்சி சொல்வது ஏற்றுக்கொள்ளும்படி இல்லை.
செயற்கைக் கருத்தரிப்பு மருத்துவ மனை நிர்வாகம் தங்கள் வாடிக்கை யாளர்களை ஏமாற்றும் காட்சிகள் நன்கு சித்தரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்த மருத்துவமனை வம்சியிடம் ஏமாறும் விதம் பலவீனமாக உள்ளது.
விசாரணையை மேற்கொள்ளும் அதி காரிக்கு நெருக்கமானவர்களைப் பிடித்து வைத்துக்கொண்டு மிரட்டுவது இதுபோன்ற கதைகளில் வழக்கம். இந்தப் படத்திலும் அது தப்பாமல் இடம்பெற்றிருக்கிறது. மஹிமா போலீஸிடம் முழு உண்மையைச் சொல்லாமல் தவிர்ப்பது ஏற்கும்படி இல்லை.
செயற்கைக் கருத்தரிப்பின் செயல்முறை, அதில் நடக்கக்கூடிய முறைகேடுகள், அந்தத் தீர்வுக்குப் பின்னால் இருக்கும் உணர்ச்சிப் போராட்டங்கள், உளவியல் சிக்கல்கள் ஆகியவற்றை இயக்குநர் வலுவுடன் பதிவுசெய்திருக்கிறார். தேவை யான பின்னணித் தகவல்களைத் திரட்டு வதில் திரைக்கதைக் குழு சிரத்தையோடு உழைத்திருக்கிறது. நாயக சாகசத்தை முன்னிறுத்தாமல் புலனாய்வை இயல்பாக நகர்த்திச் செல்வது திரைக்கதையின் முக்கிய அம்சங்களில் ஒன்று. பலவீனங்களை மீறிப் படத்தைக் காப்பாற்றும் அம்சங்கள் இவை.
அருண் விஜய்க்கு இது முக்கியமான படம். போலீஸ் அதிகாரிக்குரிய கம்பீரம், மிடுக்கு, தோற்றம், உடல்மொழி, விசாரிக்கும் தொனி ஆகியவற்றில் பக்குவப்பட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார். உணர்ச்சி நடிப்பிலும் குறைவைக்கவில்லை. மாஸ் ஹீரோ பில்டப் இல்லாமல் இயல்பாக அறிமுகம் ஆவது, பதறாமல் திட்டம் தீட்டுவது போன்றவை நம்பகத்தன்மையைக் கூட்டுகின்றன.
மஹிமா பாத்திரத்தோடு அழகாகப் பொருந்திப்போகிறார். குழந்தைக்கான ஏக்கம், செயற்கைக் கருத்தரிப்பு குறித்த மன உளைச்சல் ஆகியவற்றைக் கச்சிதமாகச் சித்தரித்து மனதைக் கரைக்கிறார் அபிநயா.
முதல் பாதியில் சோதிக்கும் தம்பி ராமையா, இரண்டாம் பாதியில் அர்விந்த் ஆகாஷை விசாரிக்கும் காட்சியில் கவனிக்கத்தக்க நடிப்பை வழங்கிவிடுகிறார். வம்சி கிருஷ்ணா, அர்விந்த் ஆகாஷ், விஜயகுமார், கல்யாணி நடராஜன், சுஜா வாருணி ஆகியோரின் பங்களிப்புகள் நேர்த்தியானவை.
பாஸ்கரனின் ஒளிப்பதிவும், விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்துக்குக் கூடுதல் பலம். தொடுவானம் பாடல் சோகத்தை மீட்டுகிறது. அர்விந்த் ஆகாஷுடன் அருண் விஜய் மோதும் சண்டைக் காட்சி இயல்பாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவப் பின்னணியில் குற்றவியல் கதையை விறுவிறுப்பாகக் கொடுக்க முயற்சிக்கும் இந்தப் படம் இரண்டாம் பாதியில் தன் பிடியை நழுவவிடுகிறது. அடுக்கடுக்கான முடிச்சுகளைப் போடும் இயக்குநர் அவற்றுக்கிடையேயான தொடர்பை நிலைநாட்டுவதிலும் சிக்கல் களை அவிழ்ப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். என்றாலும், செயற்கைக் கருத்தரிப்பு, தாய்மை உணர்வு, மருத்துவத் துறையிலுள்ள முறைகேடுகள் ஆகியவற்றைக் கையாளும் விதத்தில் கவனிக்க வைக்கிறது.