

1. திரையில் கவர்ச்சிக் கதாநாயகியாக வாழ்க்கையைத் தொடங்கி காவியக் கதாநாயகியாக உயர்ந்து காட்டியவர் அனுஷ்கா. 1981-ம் ஆண்டு, நவம்பர் 7 அன்று கர்நாடகா மாநிலம் மங்களூரில் விட்டல் ஷெட்டி - ஊர்மிளா பிரபுல்லா தம்பதியின் மகளாகப் பிறந்தார். பெற்றோர் இவருக்குச் சூட்டிய பெயர் மகாலட்சுமி. சிறுவயதுமுதல் குடும்பத்தினர் ‘ஸ்வீட்டி’ என்ற செல்லப் பெயரால் அழைத்துவருகிறார்கள். இவருக்கு சாய் ரமேஷ், குணராஜ் ஆகிய இரு சகோதரர்கள் இருக்கிறார்கள். பெங்களூரு ஈஸ்ட்வுட் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்து, மவுண்ட் கார்மெல் கல்லூரியில் இளங்கலையில் கணினி அறிவியல் பயின்றவர்.
2. கல்லூரியில் படித்தபோது பரத் தாக்கூர் என்ற யோகா குருவிடம் பயிற்சிபெற்று அவரது பயிற்சிக் கூடத்தில் யோகா ஆசிரியையாகவும் பணியாற்றினார். அங்கே யோகா பயிற்சிக்காக வந்த தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத், தனது படத்துக்கு இரண்டாவது கதாநாயகி தேடிக்கொண்டிருப்பதை பரத் தாக்கூரிடம் கூறினார். அப்போது பரத் தாக்கூர் அனுஷ்காவைப் பரிந்துரைத்தார். பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் 2005-ல் நாகார்ஜூன் ஜோடியாக ‘சூப்பர்’ என்ற தெலுங்குப் படத்தின் வழியாகத் திரைக்கு அறிமுகமானார். ஆனால், அதற்கு முன்பே அனுஷ்கா ஒரு பன்னாட்டு ஷாம்பூ விளம்பரத்தில் கூந்தல் அழகியாக நடித்துவிட்டார்.
3. அறிமுகப் படத்தில் கதாநாயகனுடன் டூயட் பாடும் கமர்ஷியல் கதாநாயகியாக நடித்தாலும் அவரது நெடுநெடு உயரமும் ஈர்க்கும் கண்களும் வசியம் செய்யும் புன்னகையும் ஆந்திர மக்களிடம் உடனடி ஆதரவைப் பெற்றுத் தந்தன. ‘சூப்பர்’ தெலுங்குப் படத்தில் அனுஷ்காவைக் கண்ட இயக்குநர் சுந்தர்.சி உடனடியாகத் தனது ‘ரெண்டு’ படத்தின் மூலம் அனுஷ்காவை கோலிவுட்டுக்கு அறிமுகப்படுத்தினார். அந்தப் படத்தின் தோல்வியால் அனுஷ்காவின் தமிழ் அறிமுகம் எடுபடவில்லை. இதனால் ஆந்திரம் திரும்பிய அனுஷ்கா, எஸ்.எஸ்.ராஜமௌலியின் ‘விக்ரமார்குடு’ உட்பட ஒரு டஜன் படங்களில் கவர்ச்சி பொம்மையாக வலம்வந்தார். இந்தக் கவர்ச்சி முத்திரையிலிருந்து அனுஷ்காவை மீட்டெடுத்தது கோடி ராமகிருஷ்ணா இயக்கிய ‘அருந்ததி’ திரைப்படம். தமிழிலும் மொழிமாற்றமாக வெளியான இந்தப் படமே அனுஷ்காவைக் கவர்ச்சியும் வீரமும் கூடிய காவிய நாயகியாகத் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியது.
4. ‘அருந்ததி’க்குப் பிறகு விஜய் உடன் ‘வேட்டைக்காரன்’ சூர்யாவுடன் ‘சிங்கம்’, அஜித்துடன் 'என்னை அறிந்தால்' ஆகிய படங்கள் வெளியாகித் தமிழின் முன்னணிக் கதாநாயகி ஆனார். அதேபோல் ‘அருந்ததி’ தெலுங்குப் பதிப்பின் மெகா வெற்றியால் பெண் மையக் கதாபாத்திரங்கள் அனுஷ்காவைத் தேடிவரத் தொடங்கின. அதற்கு நல்ல தொடக்கமாக அமைந்தது கிரிஷ் இயக்கத்தில் தெலுங்கில் வெளியான ‘வேதம்’. அதைத் தமிழில் ‘வானமா’க அதே கூட்டணி மறு ஆக்கம் செய்துபோது, பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தைத் துணிவுடன் ஏற்று நடித்திருந்த அனுஷ்காவைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள் தமிழ் ரசிகர்கள்.
5. பாலியல் தொழிலாளி வேடம், உடல்பருமன் பிரச்சினையால் திருமணச் சிக்கலைச் சந்திக்கும் வேடத்துக்காக 20 கிலோ கூடுதல் எடைகூட்டி நடித்தது, ‘பாகுபலி’க்காக வாள் சண்டை, அம்பு எய்தல், குதிரைச் சவாரி பழகியது எனக் கதாபாத்திரங்களுக்கான அனுஷ்காவின் அர்ப்பணிப்பு தென்னிந்திய அளவில் அவரை முக்கிய நட்சத்திரம் ஆக்கியது. காவியக் கதாபாத்திரங்களில் எத்தனை முறை நடித்தாலும் அத்தனைமுறையும் அனுஷ்கா அந்தந்த கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்ததில், அவரது கவர்ச்சி முத்திரை காணாமல்போனது. ‘நாகவல்லி’, ‘ராணி ருத்ரம்மா தேவி’ ஆகிய கதாபாத்திரங்களைக் கடந்து தற்போது குந்தள தேசத்தின் தேவசேனாவாக உலகம் முழுவதும் புகழ்பெற்றுவிட்டார்.
6. அழகுடன் திறமையும் இருந்தால் வெறும் கமர்ஷியல் கதாநாயகியாக சுருங்கிவிடத் தேவையில்லை என்பதற்கு முன்மாதிரி ஆகியிருக்கும் அனுஷ்கா, “எனக்கு ரோல்மாடல் என்று ஒருவரை மட்டும் கூறமாட்டேன். பலரிடமிருந்து பல நல்ல குணங்களைக் கற்றுக்கொண்டு வளர்ந்திருக்கிறேன். சிறு வயதில் எனக்கு அம்மாவும், அப்பாவும் ரோல் மாடல். நான் படித்த பள்ளியின் முதல்வரான பிளாரன்ஸ் ஈஸ்ட்வுட் ஒரு ரோல் மாடல். கடந்த 17 வருடங்களாக எனக்கு யோகா குருவாக இருக்கும் பரத் தாக்கூர் ஒரு ரோல் மாடல். எப்படிக் கற்பனை செய்ய வேண்டும் என்பதற்கு ராஜமௌலி சாரும் எப்படி உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பது என்பதற்கு பிரபாஸும் எனக்கு ரோல் மாடல்கள்” என்கிறார் அனுஷ்கா.
7. தன்னிடம் பணியாற்றுபவர்களை மதித்துப்போற்றும் அனுஷ்கா, அவர்களது கனவுகளையும் நிறைவேற்றி வைப்பதில் அழகான மனம் படைத்தவர். மாற்றுப் பாலின ஒப்பனைக் கலைஞரான நிக்கியைத் தனது தனிப்பட்ட ஒப்பனைக் கலைஞராகப் பணிக்கு அமர்த்திக்கொண்ட அனுஷ்கா, அவருக்குப் பல படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றுக்கொடுத்திருக்கிறார். தன்னிடம் நீண்ட காலமாக கார் டிரைவராகப் பணியாற்றியவருக்குச் சொந்தமாக கார் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
8. காலை 6 மணிக்குப் படப்பிடிப்பு என்றால் தனது கேராவனிலேயே காலைநேர யோகாவைச் செய்துவிடுவார் அனுஷ்கா. படப்பிடிப்புக்கு சக நடிகர், நடிகைகள் அதிகாலையிலேயே வந்திருந்தால் அவர்களுக்கு யோகா சொல்லிக்கொடுப்பதையும் அவர்களுடன் இணைந்து டீமாக யோகா செய்வதையும் இன்றுவரை வழக்கமாக வைத்திருக்கிறார்.
9. விதவிதமான மலர்ச்செடிகளையும் கொடிகளையும் வளர்ப்பதும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மொட்டை மாடியில் தான் வளர்த்துவரும் செடிகளுக்கு மத்தியில் திறந்தவெளியில் யோகா செய்வதும் அனுஷ்காவுக்கு மிகவும் பிடித்தமானது. இயற்கை தொடர்பான நூல்களை வாசிப்பதும், இயற்கை தொடர்பான கவிதைகளைச் சேமித்துவருவதையும், இயற்கை குறித்த கவிதைகளை எழுத முயல்வதையும் பொழுதுபோக்காக வைத்திருக்கிறார்.
10. பன்னிரண்டு ஆண்டுகளைக் கடந்து கதாநாயகியாகத் தொடரும் அனுஷ்கா தற்போது வசித்துவருவது தெலுங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தின் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில். பாகுபலி 2 வெளியானபின் அந்தப் பகுதி அஞ்சலகத்துக்கு ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலிருந்து வந்து குவிந்த ரசிகர்களின் கடிதங்கள், வாழ்த்து அட்டைகளை அஞ்சல் அதிகாரியின் அறிவுரையின் பேரில் அனுஷ்காவின் உதவியாளர்கள் அவற்றை ஒரு லாரியில் அவரது அலுவலகத்துக்கு ஏற்றி வந்திருக்கிறார்கள்.
தோழியின் பார்வையில்
தமிழ், தெலுங்கு, இந்திப் படவுலகிலும் விளம்பரப் பட உலகிலும் நன்கு பிரபலமான யோகா நட்சத்திரம் அதிதி செங்கப்பா. அனுஷ்காவின் நெருங்கிய தோழியரில் ஒருவரான அவரது பகிர்வு…
“அனுஷ்காவும் நானும் பரத் தாக்கூரின் யோகா பள்ளியில் தோழிகள் ஆனோம். என்னைப் போலவே யோகா பள்ளியில் பழகிய பல தோழிகளுடன் இன்றுவரை நட்புடன் பழகி வருகிறாள். பார்க்கத்தான் மென்மையாக இருப்பாளே தவிர ,இயல்பில் அனுஷ்கா படு சுட்டி. அவளிடமிருந்து முதலில் கற்றுக்கொள்ள வேண்டியது சுறுசுறுப்பு. கோபம் வந்தால் அதைப் பொத்திவைக்கவே மாட்டாள். உடனே வெளிக்காட்டிவிடுவாள். அதுதான் அவளின் அழகு ரகசியம்.
உடல் எடையைக்கொண்டே இங்கே பலரும் பெண்களின் தன்னம்பிக்கையை அளவிடுகிறார்கள். ஆனால் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக அவள் இருபது கிலோ எடையை அதிகரித்தது எந்தப் பெண்ணும் எடுக்கத் தயங்கும் ரிஸ்க். அதை அவள் எடுத்தாள். அந்த டெடிகேஷனின் பெயர்தான் அனுஷ்கா”