

சமீப காலமாகத் தமிழ்ப் பாடல்கள், தமிழ் வசனங்கள் எனத் தமிழ்ச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட சினிமாக்களை, மலையாள இளம் இயக்குநர்கள் எடுத்து வருகிறார்கள். ஆனால் இந்த முறை மலையாளத்தின் மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காடும் ‘ஜோமோண்டெ சுவிசேஷங்கள்’ மூலம் இந்த முயற்சியில் குதித்திருக்கிறார்.
மலையாளத்தின் வெற்றி நாயகர்களில் ஒருவரான துல்கர் சல்மான் கதாநாயகன் வேடம் ஏற்றிருக்கிறார். அவர் மிகச் சரளமாக தமிழ்ப் பேசக்கூடியவர். துல்கரின் கதாநாயகியாக ‘காக்கா முட்டை‘புகழ் ஐஸ்வர்யா நடித்திருக்கிறார். இவர் தவிர, ‘பிரேமம்’ புகழ் அனுபமா பரமேஸ்வரனும் நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தில் துல்கருக்கு இணையாக மலையாளத்தின் முன்னணி நடிகர் முகேஷுக்கும் காட்சிகள் உண்டு. முகேஷுக்குத் தந்தை கதாபாத்திரம். இந்த அடிப்படையில் இதை தந்தை - மகன் உறவைச் சொல்லும் படம் என்றும் சொல்லலாம். முதல் பாதி படம் திருச்சூரில் நடக்கிறது. ஏற்கனவே திருச்சூர் பின்னணியில் வந்த பல மலையாளப் படங்களை நினைவுபடுத்துவதுபோலக் காட்சிகள் நகர்கின்றன. திருச்சூரின் மிகப் பெரிய செல்வந்தராக இருக்கிறார் முகேஷ். ஹரி படத்தில் வருவதுபோல அவருக்குச் சொந்தமாக பஸ் கம்பெனி, ஜவுளிக் கடை இன்னும் என்னென்னமோ இருக்கின்றன. ஆனால் அவரது முக்கியமான தொழில் ரியல் எஸ்டேட். இடம் வாங்கி அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டிக்கொடுப்பது. அதன் மூலம்தான் இப்போது இருக்கும் செல்வங்களையெல்லாம் சம்பாதித்திருக்கிறார்.
இந்த இடத்தில் மலையாளத்தின் மிகப் பெரிய வெற்றிப்படமான ‘பிராஞ்சியேட்டன் அண்ட் செய்ண்ட்’ படம் ஞாபகத்துக்கு வருகிறது. அதில் மம்மூட்டி மிதமிஞ்சிய செல்வத்தை வைத்து என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டிருப்பார். நண்பர்கள் அவரை ஒரு கோடி கொடுத்து பத்ம விருது வாங்கச் சொல்வார்கள். ஆனால் இந்தப் படம் வேறு மாதிரியானது என்பதைச் சொல்ல, முகேஷ் பாத்திரத்தின் வழியே “நான் ஒண்ணும் பிராஞ்சியேட்டேன் இல்ல. எனக்கு பத்மயும் வேண்டாம்” எனச் சொல்கிறார் இயக்குநர்.
இந்தச் செல்வந்தர் தந்தைக்குப் பொறுப்பில்லாத கடைக்குட்டிப் பையன் துல்கர். இதையும் தமிழ் சினிமா பலவற்றிலும் பார்த்திருப்போம். எம்.பி.ஏ. படிப்பைப் பல்லாண்டுகளாக கோயம்புத்தூரில் படித்துவருபவர். அவரது மற்றொரு மகன் டாக்டராகவும், மருமகன் ஆடிட்டராகவும் சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கும்போது இவன் மட்டும் இப்படி இருப்பது அவருக்குக் கவலை அளிக்கிறது. இந்தப் பொறுப்பில்லாப் பிள்ளைக்குப் பொறுப்பை வரவைக்க முகேஷ் சில முயற்சிகளை எடுக்கிறார். ‘தம்பிக்கு எந்த ஊரு’ படம் நினைவுக்கு வருகிறது. ஆனால் அதை அங்கேயே விட்டுவிட்டு முகேஷின் ரியல் எஸ்டேட் பக்கம் படம் திரும்புகிறது. ஒரே நாளில் குடும்பம் வீதிக்கு வரும் பல படங்களை நினைவுபடுத்துவதுபோலக் காட்சிகள் வருகின்றன.
பின் பாதி சினிமா தமிழ்நாட்டில், திருப்பூரில் நடக்கிறது. மனோபாலா, ஐஸ்வர்யா எனப் பல பாத்திரங்கள் இந்தப் பகுதியைத் தமிழ்மயமாக்குகிறார்கள். பற்றாக்குறைக்கு துல்கரும் தெளிவாகத் தமிழ் பேசுகிறார். முகேஷ் உடைந்த தமிழில் பேசுகிறார். ஐஸ்வர்யாவுக்கு ஒரு மலையாளத் தொடர்பு இருக்கிறது. இறந்த அவரது தாய்க்கு பாலக்காடு. அவர்கள் மலையாளிகளைப் போல் இரவு கஞ்சி சாப்பிடுபவராக இருக்கிறார்கள். பொறுப்பு வந்த தன் மகனுடன் முகேஷ் ஜீவிதத்தைக் கழிக்கிறார். இந்தக் காட்சிகள் சமீபத்திய மலையாளப் படமான ‘ஜாக்கொபிண்டே சொர்க்கராஜ்ஜிய’த்தை ஞாபகப்படுத்துகின்றன. இறுதியில் பார்வையாளர்கள் எதிர்பார்ப்புக்குச் சற்றும் விரோதமில்லாத ஒரு முடிவுடன் சினிமா நிறைவடைகிறது.
எந்த ஒழுங்குமில்லாமல் துண்டு துண்டுக் காட்சிகளாக உள்ளது படம். இந்தப் படம் ஒற்றை உணர்ச்சியைப் பின்பற்றாது குறுக்கும் நெடுக்குமாகப் பயணிக்கிறது. பிள்ளைகளைக் குற்றவாளிகளாக்கும் சீரியல் தனத்துடன் பின்பகுதியை நகர்த்தியிருக்கிறார் சத்யன் அந்திக்காடு. இன்றைய உலகத்துக்குத் தகுந்தாற்போல் ஒரு சினிமாவைப் படைக்க நினைத்திருக்கிறார். ஆனால் அது ஆடைகளிலும் அலங்காரங்களிலுமான புதுமையாக மட்டுமே வெளிப்பட்டுள்ளது.