மாயப்பெட்டி: பின்னணியில் சின்னம்

மாயப்பெட்டி: பின்னணியில் சின்னம்
Updated on
1 min read

“நம்மளை மொட்டை அடிச்சதை நினைவுபடுத்துவதற்காக தொப்பி சின்னம், பெரும்பாலான கிராமங்களுக்கு மின்வெட்டு இருந்தபோது ரெண்டு மணி நேரம் மின்சாரம் அளிச்சதை நினைவுபடுத்துவதற்காக இரண்டு மின்விளக்குக் கம்பம் சின்னம்” என்று கிண்டலடித்த சீமான், “சின்னம் என்கிற வழிமுறையையே ஒழித்துக் கட்ட வேண்டும் என்றார்” (தமிழன் டிவி.). பின்னணியில் மிகப் பெரிய அளவில் மெழுகுவர்த்திச் சின்னம் திரையில் தெரிந்தது.

நகைச்சுவையான சந்தைப்படுத்தல்

நாப்டால் சேனலில் ஒரு செல்போனைச் சந்தைப்படுத்திய விதம் இருக்கிறதே, ஹையோ ஹையோ! இஞ்சி, உருளைக்கிழங்கு போன்றவற்றை அந்த செல்போனால் மோதி உடைக்கிறார்கள். செல்போன் உடையவில்லை. துளையிடும் கருவியால் துளையிடும் முயற்சிக்கும் தோல்வி. பாட்டிலில் சில சிறு கற்களோடு அந்த செல்போனைப் போட்டுக் குலுக்கிக் கீழே வீசியெறிகிறார்கள். செல்போன் அப்படியே இருக்கிறது (இந்த முயற்சிகளில் உடையாத செல்போனில் அதற்குப் பிறகு பேச முடிகிறதா என்பதைப் பற்றி அவர்கள் குறிப்பிடவில்லை). நடுநடுவே ‘இன்னும் 16 செல்போன்களே விற்பனைக்கு இருக்கின்றன .. இப்போது 11 மட்டுமே’என்றெல்லாம் வேறு அவசரப்படுத்துகிறார்கள். உண்மை எப்படியும் இருக்கட்டும், பார்க்க சுவாரசியமாகவும் புன்னகையை வரவழைப்பதாகவும் இருக்கிறது.

ஒரேநாளில் பதவி உயர்வு

“இட்லிதான் தலைசிறந்த காலை உணவு. இட்லி, சட்னி, சாம்பாரில் நம் உடலுக்குத் தேவையான மாவுச்சத்து, புரதம், காய்கறிகள் அனைத்தும் உள்ளன” என்றவர் நிச்சயம் மெக்டொனால்டு அதிபராக இருக்க முடியாது என்பதை யூகித்திருப்பீர்கள். பேசும் தலைமை (நியூஸ் 7) நிகழ்ச்சியில் இப்படிக் கூறியவர் முருகன் இட்லிக் கடை அதிபர் மனோகர். ஒரு கடையில் இட்லி தயாரிக்கும் வேலையில் இருந்தபோது இட்லித் துணிகளைத் துவைத்துக் காயப்போட்டது உட்பட இணை வேலைகளையும் தானே முன்வந்து செய்ததால் சேர்ந்த ஒரே நாளில் அவரை மேனேஜராக்கினாராம் முதலாளி.

பொருளை உணர்த்திய மாற்றம்

சில சமயம் புதிய சூழல்கள் காரணமாக யதார்த்தமான நிகழ்வுகள்கூட காரணம் பொதிந்ததாகப் படக்கூடும் அல்லது தோன்றும். காரணம்கூட நிஜமானதாக இருக்கலாம். விஜய் சூப்பர் நிகழ்ச்சியில் இளையராஜா ஆயிரம் நிகழ்ச்சி என்று அறிவிப்பு வந்துகொண்டிருக்க, மாறாக, சேட்டை திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in