

உதயநிதி ஸ்டாலின் இதுவரை தயாரித்துள்ள 8 படங்களில் நாலுக்கு இசை ஹாரிஸ் ஜெயராஜ்தான். உதயநிதி நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்துக்கும் ஹாரிஸ்தான் இசை.
தனது அடுத்த படமான `இது கதிர்வேலன் காதல்’ (இயக்கம் எஸ்.ஆர். பிரபாகரன்) படத்துக்கும் ஹாரிஸ் ஜெயராஜையே உதயநிதி தேர்வு செய்துள்ளார்.
கார்த்திக் பாடியுள்ள மேலே மேலே பாடல், ஹீரோ தன் காதலை ஊருக்குச் சொல்லும் பாடல். கே.கே. லேகா பார்த்தசாரதி பாடியுள்ள சரசர சரவெடி பாடலில், அங்கங்கே கிராமத்து சாயல் இசையை பார்க்க முடிகிறது. இந்த இரண்டு பாடல்களும் ஹிட் ஆகிவிடும் ரகம்.
தாமரை எழுதியுள்ள அன்பே அன்பே பாடலை ஹரிஷ் ராகவேந்திரா, ஹரிணி பாடியுள்ளனர். பழைய மெட்டு ஒன்றை ஞாபகப்படுத்தினாலும் ஹிட் அடித்துவிடும் டூயட்டாக இருக்கும்.
ஜாஸ்ஸி கிஃப்ட், வேல்முருகன், ஜெயமூர்த்தி பாடியுள்ள பல்லாக்கு தேவதைய பாடலில், வேணாம் மச்சான் வேணாம் பாடலைப் போல முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், செல்லுபடியாகவில்லை. விழியே விழியேவும் (ஆலாப் ராஜு) பெரிதாகக் கவரவில்லை.
இந்த ஆடியோவில் உள்ள கிராமத்து சாயல் கொண்ட இசை பல நேரம் வெறும் மேற்பூச்சாகவே நின்றுவிடுகிறது. தொடர்ச்சியாக கேட்க வைக்கப்படும் நிலையில் இந்தப் பாடல்களும் கொஞ்ச நாளைக்கு ஹிட்டாக இருந்து செல்லக்கூடும்.