மலையாளக் கரையோரம்
தனுஷ் ஜோடி!
‘பிரேமம்’ படத்தின் மற்றொரு கதாநாயகியான அனுபமா பரமேஸ்வரன், த்ரிவிக்ரம் இயக்கத்தில் தெலுங்கில் ‘அ ஆ’ என்ற படத்தில் நடித்துவிட்டார். இந்தப் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே ‘பிரேமம்’ படத்தின் தெலுங்கு மறு ஆக்கத்தில் அவர் மலையாளத்தில் ஏற்ற அதே கதாபாத்திரம் கிடைத்துவிட்டது. அதை முடிப்பதற்குள் தமிழில் தனுஷுக்கு ஜோடியாகிவிட்டார். துரை.செந்தில்குமார் இயக்கும் ‘கொடி’ படத்தில் இரண்டாவது கதாநாயகி. இதில் மாணவப் போராளியாக வருகிறாராம் அனுபமா பரமேஸ்வரன்
மறு ஆக்கத்தில் நிவின்
‘நேரம்’,‘பிரேமம்’ புகழ், நிவின் பாலி நடித்து வெளி வந்திருக்கும் ‘ஜெகோபிண்டே சாம்ராஜ்யம்’ சமீபத்திய மலையாளப் படங்களில் ஒன்று. துல்கரைப் போல் தமிழிலும் காலூன்ற வேண்டும் என்கிற ஆசை நிவினைப் பிடித்து ஆட்டுகிறது. இதனால் ஒரு நேரடித் தமிழ்ப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் நிவின் நடிக்கும் நேரடித் தமிழ்ப் படம் இது. கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற ‘உளிதேவாரு காண்டெந்தே’ என்ற கன்னடப் படத்தின் தமிழ் மறு ஆக்கம். படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
நான்கு மொழிகளில் ஷகீலா!
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை உட்படப் பல இந்திய நடிகைகளின் வாழ்க்கையில் கற்பனையும் கலந்து இந்திய மொழிகள் பலவற்றிலும் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் ‘டர்ட்டி பிக்சர்’ படத்துக்குக் கிடைத்த வசூல் வெற்றிக்குப் பிறகுதான் நடிகைகளின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் சூடுபிடித்திருக்கின்றன. இந்த வரிசையில் தற்போது ஷகீலாவின் வாழ்க்கை படமாவது உறுதியாகிவிட்டது.
பிரபல கன்னடப் பட இயக்குநர் இந்திரஜித் லங்கேஷ், ஷகீலாவின் வாழ்க்கையைப் நான்கு இந்திய மொழிகளில் படமாகத் தயாரிக்கிறார். படத்தில் ஷகீலாவாக நடிப்பவர் பிரபல இந்தி நடிகையான ஹுமா குரேஷி.
