மொழி கடந்த ரசனை 27: அழகான மந்திரவாதியே...

மொழி கடந்த ரசனை 27: அழகான மந்திரவாதியே...
Updated on
2 min read

மெட்டுக்கு ஏற்ற வரிகளைக் கவிதையாக்கும் பாடலாசிரியர்களும் துட்டுக்கு இசை அமைக்கும் இசையமைப்பாளர்களும் நுழையாத இடமாக ஒரு சமயம் இந்தித் திரை உலகம் இருந்ததது. பாடலை எழுதும் கவிஞர்களும் அதற்கு இசையமைக்கும் கலைஞர்களும் தங்கள் திறமையின் மீது அசாத்திய நம்பிக்கையும் எப்போதும் இழக்க விரும்பாத சுய மரியாதையையும் கொண்டிருந்தனர். அதற்குக் குந்தகம் ஏற்படுத்துவதாக அவர்கள் கருதிய சூழலில் இருந்து வெளியேற அக்கலைஞர்கள் சிறிதும் தயங்கவில்லை. ஓ.பி நய்யர் என்ற பெயரில் அனைவரும் அறிந்த இந்தி இசை அமைப்பாளர் ஓம் பிரகாஷ் நய்யர் அத்தகு அரிதான கலைஞர்.

பாகிஸ்தான் நாட்டின் பகுதியாக தற்பொழுது விளங்கும் லாகூர் நகரில் பிறந்த இவர், தனது 70-ம் வயதுவரை, இந்தித் திரையின் சிறந்த இசையமைப்பாளராக மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், இசைக் கலைஞர், இசை முன்னோடி ஆகிய பல் திறன் பெற்றவராகத் திகழ்ந்தார். ‘லதா மங்கேஷ்கர்’ என்ற விளக்கு இல்லாமல், ‘இனிமையான பாடல்’ என்ற வெளிச்சம் பெற முடியாது என்ற சூழல் அப்போது இருந்தது ஆனால், இந்தியாவின் நைட்டிங்கேலுடன் அவருக்கு நிகழ்ந்த முரண்பாட்டால் லதாவைத் தனது இசையில் பாட நய்யார் அழைக்கவில்லை (இவருடன் ஆஷா போஸ்லே கொண்டிருந்த நட்பை விரும்பாத லதா அவரைக் கடிந்துகொண்டதே இந்த உரசலுக்குக் காரணம் எனக் கூறப்பட்டது).

ஆஷாவுக்கு முகவரி தந்த நய்யார்

மெல்லிசைக்கு மாற்றான, மலிவான வரிகள் கொண்ட ‘காபரே’ பாடல்களைப் பாடுவதற்கே வாய்ப்பு அளிக்கப்பட்டுவந்த ஆஷா போஸ்லேவை, இந்தித் திரைப் பட பாடல்களின் மாபெரும் அடையாளங்களில் ஒன்றாக மாற வழி வகுத்தவர் நய்யர். மேலை நாட்டு இசையும் இந்தியப் பாரம்பரிய சங்கீதமும் கலந்த வித்தியாசமான இசையமைப்பு பாணியைத் தன் சிறப்பாகக் கொண்ட நய்யர், 1956-ம் ஆண்டு வந்த சி.ஐ.டி. என்ற படம் மூலம் பிரபலம் அடைந்தார்.

நயா தௌர், தும்சா நஹீன் தேக்கா, உஸ்தாத் பாகுன் ஏக் முசாஃபிர் ஏக் ஹஸினா, ஃபி வோஹி தில் லாயா ஹூம், காஷ்மீர் கி கலி மேரே சனம், சாவன் கீ கட்டா பிரான் ஜாயே பர் வசன் ந ஜாயே போன்ற காலத்தால் அழியாத பல பாடல்கள் தந்த நய்யர், தனது அனைத்துப் படங்களிலும் ஆஷா போஸ்லேக்குத் தவறாது வாய்ப்பளித்து ஆஷாவின் பல தளக் குரல் வண்ணத்தை வெளிக்கொணர்ந்தார்.

ராஜா மெஹதி அலி கான் எழுதிய இரண்டு பாடல்கள் மட்டும் இடம் பெற்ற ‘ஏக் ஹஸீனா ஏக் முசாஃபிர்’(ஒரு வழிப்போக்கன், ஒரு அழகி) என்ற 1962-ல் இந்திய-சீனப் போர் காலகட்டத்தில் இந்தப் படம் வெளிவந்தது. காஷ்மீர் பிரிவினைவாதிகள் ஈடுபடும் பயங்கரவாதச் செயல்களைச் சமாளிக்க ரகசியமாக அனுப்பப்பட்ட நாயகன் பாத்திரம் ஏற்ற ஜாய் முகர்ஜி, சாதனாவுடன் இணைந்து நடித்த இப்படப் பாடல்கள் பிரபலமடைந்தன.

“ஆப் யூ ஹீ ஹம்ஸே மில்த்தே ரஹே தேக்கியே ஏக் தின் பியார் ஹோ ஜாயேகா” என்று தொடங்கும் இந்தப் பாடல் இந்துஸ்தானி இசையின் கேதார் ராகத்தின் சாயலில் அமைந்தது. சிணுங்கல் பொங்கும் தொனியைக் கொண்ட இந்தக் காதல் பாடலின் பொருள்:

(நாயகன்):

இவ்வாறு நீங்கள் என்னைச்

சந்தித்துக்கொண்டே இருந்தால்

நம்மிடையே காதல் உருவாகிவிடும்.

(நாயகி)

அந்த மாதிரி பேசாதே என் அழகான மந்திரவாதியே

என் மனது உன் கண்களில் தொலைந்து போய்விடும்

(நாயகன்)

என் பின்னே என் பின்னே ஏன் நீங்கள் வருகிறீர்கள்

எழில் விழிப் பார்வையை என்னிடம் விரிக்கிறீகள்

(நாயகி)

எப்படிச் சொல்வேன் உங்களிடம் இதுவும் ஒரு ரகசியம்

இது ஒரு நாள் எல்லோருக்கும் தெரியவரும் என

(நாயகன்)

என்ன மாயம் செய்தாய் ஓ மந்திரவாதியே

உன் முகத்தை விட்டு அகல மறுக்கின்றன என் விழிகள்

(நாயகி)

அய்யோ அப்படி நீங்கள் என்னை விடாது பார்த்தால்

முகம் வெட்கத்தில் சிவந்துவிடும் மாதுளம் பூவாக

(நாயகன்)

காதல் நாடகத்தில் நான் ஒரு

அப்பாவி –அதனால்

எத்தனை அல்லல் அடைகிறான்

இப் பாவி

(நாயகி)

தங்கள் அல்லல் கண்டு தாளாமல் நானும்

அங்குபோல ஆகிவிடுவேன் அல்லல் படுவதற்கு.

பட நாயகி சாதனா, தொடர்ந்து இந்தப் படத்தின் இயக்குநர் ராஜ்கோஸ்லாவின் அடுத்த மூன்று திகில் படங்களிலும் நாயகியாகப் பரிமளித்தார். நாயகன் ஜாய் முகர்ஜி இப்படத்தின் தயாரிப்பாளர் சஷாதார் முகர்ஜியின் மகன். “அமுல் பேபி” என்று அழைக்கப்பட்ட ஜாய் முகர்ஜி பின்னர் தேவ் ஆனந்த் பிரபலமாக்கிய ஆழமற்ற, நாகரிகமான காதல் நடிப்பின் முன்னோடி என்று கூறலாம். ஆஷா போன்ஸ்லே முகமது ரஃபியுடன் சேர்ந்து பாடிய ‘மே பியார் கீ ராஹீ ஹூம்’ என்ற பாடலும் இந்தப் படத்தில் பிரபலமடைந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in