

எம்ஜிஆர் மறைந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. தமிழ்ச் சமூகத்தில் அவரது கீர்த்தியும் அவர் குறித்த வழிபாட்டுணர்வும் எளிய மக்கள் மத்தியில் குறையவேயில்லை. அவர் நடித்த படங்கள் வழியாக, அவர் வாயசைத்துப் பாடிய பாடல்கள் வழியாகத் தமிழ்ப் பாட்டாளிகள் சமூகம், எம்ஜிஆர் என்ற பிம்பத்தை இன்னமும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஆண்டுதோறும் பத்திரிகைகள் அவரது தலைமைப் பண்பு, வள்ளல் குணம், ஏழைகளிடம் காட்டும் பிரியம், எதிர்பாராத தன்மை மற்றும் சாகசங்களைச் செய்தித் துணுக்குகளாக அவரது பிறந்த நாளை முன்னிட்டும், இறந்த நாளை முன்னிட்டும் வெளியிடுகின்றன. இன்னும் எம்ஜிஆரின் ரசிகர்களை மட்டுமே வாசகர்களாக நம்பி இதயக்கனி போன்ற பத்திரிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. அவரைப் பற்றி ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கதைகள் இன்னும் உலவுகின்றன.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அடித்தள மக்களில் முதியவர்கள் முதல் ஐம்பது வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் ஆண், பெண்கள் வரை உள்ள பெரும்பாலானவர்களின் இதயங்களில் எம்.ஜி.ஆர். என்ற மீட்பரின் செல்வாக்கு உயர்ந்தபடிதான் உள்ளது.
சினிமா என்னும் பிரச்சார சாதனம்
உலக அளவில் பெரும் போராட்டங்களுடனும், உயிர்ப் பலிகளுடனும் நடந்த விடுதலை, சமத்துவம், சமூக நீதிக்கான போராட்டங்களின் கருத்துகளைத் தமிழகத்தில் வெகுமக்களிடையே திரைப்படம் வழியாக எளிமையாகக் கொண்டு சேர்த்ததில் திராவிட இயக்கம் பெற்ற வெற்றி சாதாரணமாகக் கருதக்கூடியது அல்ல. நவீன கல்வி, அரசியல், கலாசாரம், ஜனநாயகம் ஆகியவற்றைப் பரப்பும் பிரச்சாரச் சாதனமாகவும் திரைப்படமே இருந்துள்ளது. தமிழ் மக்களுக்கு ஒரு சமூகமாகப் பொது அடையாளத்தை, பொதுப் பேச்சை உருவாக்கியதிலும் தமிழ் சினிமாவுக்கு மகத்தான பங்குண்டு. சாதி ஒழிப்பில் தொடங்கி விதவைத் திருமணம்வரை பல மாற்றங்களைச் சினிமா முன்னெடுத்திருக்கிறது. வெவ்வேறு துண்டுகளாகச் சிதறியிருந்த மக்களைக் கத்தியின்றி ரத்தமின்றி, கொஞ்சம் முற்போக்காக, கொஞ்சம் சமத்துவ உணர்வு கொண்டவர்களாக, கொஞ்சம் நேர்மை உணர்வை ஏற்பவர்களாக மாற்றியதும் சினிமா என்ற வடிவமே. ஆனால் அனைத்துக் கருத்தியல்களையும் எளிமையான பொழுதுபோக்கு வடிவமாக மட்டுமே நாம் செரித்ததின் எதிர்மறை விளைவுகளும் சமூகத்தில் உள்ளன. எந்த மாற்றமும் ஆழமானதாகவும் நீடித்திருப்பதாகவும் இல்லாமல்போனதற்கு இந்த எளிமைப்படுத்தல்தான் காரணம்.
சினிமா சமூக மாற்றத்தை முன்னெடுத்த காலகட்டத்தில் உருவான நாயகன்தான் எம்.ஜி.ஆர். பணக்காரப் பண்ணையார்களிடமிருந்து ஏழைப் பாட்டாளிகளைக் காப்பாற்றுபவராக, நீதியின் கரங்களை வலுப்படுத்துபவராக அவர் ஏற்ற பாத்திரங்களை மக்கள் ‘நிஜம்’ எனவே நம்பினார்கள். இந்தியச் சுதந்திரம் அவர்கள் எதிர்பார்த்த எந்தப் பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. தங்கள் மீது காலம்காலமாக நடத்தப்படும் ஒடுக்குமுறைகளையும், அடுக்கடுக்காகப் பொழியும் துயரங்களையும் ஒரு வகையில் ‘விதி’ என்று ஏற்றுப் பழகிக்கொண்ட அந்த எளிய மக்கள் எம்.ஜி.ஆரைத் தங்கள் துயரங்களைத் தீர்க்கவரும் கடவுளாகத் திரையில் கண்டனர். திரையரங்குக்கு வெளியிலும் விழித்த நிலையிலேயே அவர்கள் கண்ட கனவுதான், எம்.ஜி.ஆர். என்னும் தனித் திரைப் பிம்பத்தை அரசியல் கட்சித் தலைவராகவும், இதயத் தெய்வமாகவும், தமிழக முதலமைச்சராக வும் மாற்றியது.
எம்ஜிஆர் இறந்து 25 ஆண்டுகள் ஆன பிறகான தமிழக அரசியல் மற்றும் சமூகச் சூழல் மேலும் சிக்கல்களை அடைந்துள்ளன. இளைய தலைமுறை யினரிடம்கூடச் சாதிய உணர்வு மேலோங்கி யுள்ளதைப் பார்க்கிறோம். சாதி தாண்டிய திருமணங்களைச் சகித்துக்கொள்ளாமல் செய்யப்படும் கௌரவக் கொலைகள் அதிகரித்துள்ளன. தமிழகத்தில் முற்போக்குத் தன்மை கொண்ட அரசியல் தலைமைகளைப் பார்ப்பதே அரிதாகிவிட்டது.
சாலைகளில் எம்.ஜி.ஆரின் அரசாங்கம்
இந்தச் சூழலிலும் எம்ஜிஆர் தமிழகமெங்கும் ஆட்டோ நிறுத்தங்களிலும், சாலை முனைகளிலும் டிசம்பர் 24 அன்றும், ஜனவரி 17ஆம் தேதியிலும் நினைவுகூரப்படுகிறார். அவரது ரசிகர்களுக்கு வயதாகிவிட்டதை அவர்களது சுருங்கிய முகங்களும், காய்ப்பேறிய கைகளும் காட்டுகின்றன.
எம்.ஜி.ஆர். பாடல் ஒலிக்கும் தெருவில் எம்ஜிஆரின் அரசாங்கம் நிகழ்வது போன்ற தோற்றத்தை எப்படியோ அந்த இடம் அடைந்துவிடுகிறது. பூ விற்கும் பெண்கள் முதல் வெள்ளை வேட்டியுடன் தொழிலாளர்களைப் பார்த்து அன்று உற்சாகமாகக் கையுயர்த்தி செல்லும் சிறு முதலாளி வரை எல்லாரும் கதாபாத்திரங்கள் ஆகிவிடுகிறார்கள். நல்ல முதலாளி, நல்ல தொழிலாளி என்ற உலகம் அந்தப் பாடல்களின் கீழே ஒவ்வொரு வருடமும் சிருஷ்டிக்கப்பட்டு விடுகிறது. ‘உலகம் பிறந்தது எனக்காக’ பாடலும் ‘உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே’ பாடலும் ஒலிக்கும்போது, தமிழகம் முழுவதும் தெருவோரங்களில் இருக்கும் பாட்டாளிகளின் கைகள் ஒரே கையாக அன்று எழும்பும். ‘கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமா?’ என்ற பாடலின்போது ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வரும்.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கற்பனை அரசாங்கத்தில் நீதி தவறுவது போலத் தோன்றினாலும் கடைசியில் ஜெயிக்கவே செய்யும். நம்பிக்கை சிறகடிக்கும். ‘உள்ளம் என்றொரு கோவிலிலே தெய்வம் வேண்டும் அன்பே வா...கண்கள் என்றொரு சோலையிலே தென்றல் வேண்டும் அன்பே வா...’
எம்ஜிஆரின் பாடல்களுக்குள்ளேயே நாளைக்கான நம்பிக்கையையும், மாற்றத்தையும், புரட்சியையும், நீதியையும் பாவித்து வளர்ந்த தலைமுறையினர் இன்னமும் வாழ்ந்துவருகின்றனர். அவர்களில் ஒருவர்தான் எப்போதும் ஒன்றேபோல இருக்கப்போகும் ‘நாளை ஒன்றை நம்பி’ களைப்பேயில்லாமல் கற்பனை வீதியில் அபிநயம் செய்கிறார். ‘நாளை நமதே இந்த நாளும் நமதே… அந்த நாள் நினைவுகள் எந்த நாளும் மாறாது.’ என்கிறது ஒலிபெருக்கி. ரசிகர் பூரிக்கிறார்.
நடுவே மின்சாரம் நிற்கிறது. அப்போது அவரது முகம், உடல் எல்லாம் நிஜ உலகத்தில் நிற்பதற்கு அஞ்சி ஒடுங்குகிறது.