குறுக்கு விசாரணை: யாருடைய வாழ்வைச் சித்திரிக்கிறது மெட்ராஸ்?

குறுக்கு  விசாரணை: யாருடைய வாழ்வைச் சித்திரிக்கிறது மெட்ராஸ்?
Updated on
3 min read

பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் பற்றிய விமர்சனங்கள் அதை ஒரு தலித் வாழ்க்கையை அல்லது அரசியலைப் பற்றி விவாதிக்கும் திரைப்படமாக முன்வைக்கின்றன. அது அப்படித்தானா?

வடசென்னை வாழ்க்கையைத் தலித் வாழ்க்கை எனச் சொல்வதே பிழை. விளிம்பு நிலை வாழ்வு என்பது தலித் வாழ்வு அல்ல. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ள புறக்கணிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களில் பலர் கிராமப் புறங்களிலிருந்து வாழ்வாதாரங்களைத் தேடி இடம்பெயர்ந்தவர்கள்.

வாழ்வாதாரம் என்பது பொருளாதார நிலை சார்ந்தது மட்டுமல்ல. கிராமப்புறச் சமூகத்தின் சாதிய ஒடுக்குமுறையிலிருந்து விடுபட்டுச் சுயமரியாதையுடன் வாழும் எத்தனிப்புகளுடன் வருவதும் வாழ்வாதரங்களைத் தேடி வருதலே. அப்படி வருபவர்களுக்கு உடனடியான புகலிடங்களாக அமைவது பெருநகரின் புறக்கணிக்கப்பட்ட பிரதேசங்களே. வடசென்னை அப்படிப்பட்ட ஓரிடம்.

இங்கு மீனவர்கள், துப்பரவுப் பணியாளர்கள், சுமை தூக்குபவர்கள், சிறு வியாபாரிகள், கேளிக்கை மையங்களில் குற்றேவல் செய்து வாழ்பவர்கள், ரிக் ஷாக்காரர்கள், பாலியல் தொழிலாளர்கள், சில்லறைத் திருட்டுகளில் ஈடுபடுபவர்கள், ரௌடிகள், கூலிப்படையினர் உள்ளிட்டோருடன் வடசென்னையயைப் பூர்வீகமாகக் கொண்டவர்களும் வசித்து வசிக்கிறார்கள்.

அவர்களது வசிப்பிடங்கள் நிரம்பி வழியும் சாக்கடைகளால் பிசுபிசுத்துப் போனவை. அங்கு அவர்களது வாழ்வைக் கைப்பற்றிக்கொண்டுவிட்ட அரசியல்வாதிகள் இருக்கிறார்கள். கந்து வட்டிக்காரர்கள் இருக்கிறார்கள், தாதாக்கள் இருக்கிறார்கள்.

அந்த மக்களுக்கு நிறைவேறாத கனவுகள் இருக்கின்றன. நிராசையின் பெருமூச்சுக்களால் சூழப்பட்ட கைவிடப் பட்ட பூமி அது. அங்கு ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன. தீண்டாமைகூட இருக்கிறது.

மெட்ராஸ் எதைச் சித்திரிக்கிறது?

வட சென்னையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருப்பதால் அது அங்குள்ள அழுக்கடைந்த குடியிருப்புகளை, நெரிசலான தெருக்களை, பிளாஸ்டிக் குடங்களை, சவரம் செய்யப்படாத முகங்களைத் தனது காட்சிகளுக்கான பின்புலமாகக் கொண்டிருக்கிறது. படத்தின் மையப் பாத்திரங்களில் எதுவும் வட சென்னையின் வாழ்வாதரங்களோடு தங்களைப் பிணைத்துக்கொண்டதல்ல. நாயகன் காளி, அவனுடைய நண்பன் அன்பு அவனது தலைவன் மாரி, காதலி கலை உள்ளிட்ட எந்தப் பாத்திரமும்.

நண்பனின் கொலைக்குப் பழி தீர்க்கும் நாயகன் என்பதுதான் கதையின் கரு.

மாஸ் ஹீரோவான கார்த்தியை ஒரு வட சென்னைவாசியாக அதன் வாழ்வாதாரங்களோடு பிணைத்துக்கொண்ட ஒரு பாத்திரமாக உருவாக்குவதற்குத் திரைக்கதை எந்தப் பிரயத்தனத்தையும் மேற்கொள்ளவில்லை. அவன் ஏதோவொரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிபவன்.

அவன் காதல் வசப்படும் பெண் நடுத்தர வர்க்கப் பிராமணப் பெண்ணின் சாயலைக் கொண்டவள். இருவரிடமும் தலித் வாழ்க்கையின் எந்த அடையாளமும் இல்லை. நண்பனான அன்புகூட வடசென்னை வாழ்வைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாத்திரமல்ல.

அதுபோன்ற ஒரு பாத்திரத்தை வேறு எங்கும் எந்தச் சாதியிலும் காண முடியும். அன்பு, காளி ஆகியோரிடையே உருவாகும் நட்பு அரசியல் சார்ந்ததோ கோட்பாடு சார்ந்ததோ அல்ல. நம்ம ஆள் என்பதற்கும் போதுமான அடையாளக் குறிப்புகள் படத்தில் இடம்பெறவில்லை.

சுவர் என்னும் குறியீடு

குறியீடாக முன்னிறுத்தப்படும் சுவர், படத்தின் அழகியல் சார்ந்த தரத்தை உயர்த்துவதற்குப் பயன்பட்ட அளவுக்கு அரசியல் விவாதத்துக்கான குறியீடாக உருவாக்கப்படவில்லை. அன்புக்கு இருக்கிற அரசியல் முனைப்பு காளிக்கு இல்லையென்பது முக்கியம். காளியின் முனைப்பு கல்யாணம் பற்றிய கனவு, காதல், நட்பு சார்ந்தது. சுவரைக் கைப்பற்றுவது அன்புக்கு அரசியல். அதற்காக அவன் எதையும் சந்திக்கத் தயாராகிறான். அவனிடம் ஒரு நிதானம் இருக்கிறது, தீர்க்கம் இருக்கிறது. அதைப் போகிற போக்கில் குலைப்பவன் காளிதான்.

காளிக்கும் அன்புக்குமிடையேயான நட்பின் தீவிரத்தை உணர்த்துவதற்குக் கலை மீது காளி கொள்ளும் காதலே அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. முற்பகுதியில் அன்பு காளியைச் சந்திக்கும்போதெல்லாம் படத்தின் அரசியல் குறியீடான சுவரைப் பற்றிப் பேசுவதைவிடக் காதலியைப் பற்றிப் பேசுவதே அதிகம். அன்பு தனது அரசியல் வேட்கைகளுக்கிடையே காளிக்கும் கலைக்குமிடையே காதலை மலரச் செய்வதற்கும் முயல்கிறான். சித்திரிக்கப்பட்டுள்ளபடி பார்த்தால் காளி - அன்பு நெருக்கத்துக்கு இது முக்கியமான காரணம்.

முதல் தகவல் அறிக்கையில் காளியின் பெயர் இடம்பெறாதது பற்றிய தகவல் வெளிப்படும் காட்சி முக்கியமானது. தன்முனைப்புள்ள மூர்க்கமான இளைஞனான காளி, நண்பன் தனது குற்றத்தை ஏற்றுக்கொள்ள முன்வரும்போது திகைத்துப் போவதற்கப்பால் எதுவும் செய்ய முடியாதவனாகக் காட்டப்படுகிறான். கொலைக்குச் சாட்சியங்கள் இல்லை, அன்பு சீக்கிரத்திலேயே பிணையில் வந்துவிட முடியும் என்பன போன்ற தகவல்கள் அவனை ஆசுவாசப்படுத்துகின்றன. நீதிமன்ற வளாகத்தில் அன்புக்கு உணவு பரிமாறும்போது இந்த ஆசுவாசம் வெளிப்படுகிறது.

இது இயற்கையானது. தப்பிவிட்டதன் விளைவாக எழுவது. காளியைப் போன்ற ஒரு சாதாரண இளைஞனின் இயல்புகளுடன் ஒத்துப்போகக்கூடியது. ஆனால் திரைப்படத்தில் காளி ஏற்றிருப்பது நாயகனின் பாத்திரம். அந்த நாயகனுக்கு வேறு வேலைகள் இருக்கின்றன. நண்பனின் குற்றத்தைத் தான் ஏற்கும்போது அன்பு இரண்டு விஷயங்களை முக்கியமாக வலியுறுத்துகிறான். ஒன்று அவன் தன் காதலியை அடைய வேண்டும். இரண்டு தன் மனைவி குழந்தையைப் பார்த்துக்கொள்ள வேண்டும். அன்புக்கு உள்ள அரசியல் கடமையைவிடக் காளிக்கு உள்ள இந்தக் கடமைகள் முக்கியமானவை. ஏனென்றால் அவன் நாயகன்.

நாயக பிம்பம்

காளி தன் காதலியிடம் அன்பு தனக்காகச் செய்த தியாகத்தை மேலோட்டமான முறையிலேயே பகிர்ந்துகொள்கிறான். நான் முக்கியமா அன்பு முக்கியமா எனக் காதலி தன்னிடம் கேட்கும்போது குழம்புகிறான். தடுமாறுகிறான். அன்பு கொலை செய்யப்பட்டது மாரியின் ஆட்களால் என்பதோ மாரி கண்ணனோடு அரசியல் கூட்டு வைத்துக்கொண்டிருப்பவன் என்பதோ தெரியவராமலிருந்திருந்தால் காளி எந்த அறச் சிக்கலுக்கும் உள்ளாகாமல் கலையின் கரம் பற்றியிருக்க முடியும். ஆனால் அது அவனது நாயக பிம்பத்துக்குப் பொருந்தக்கூடியதல்ல.

காளிக்கு ஏற்படும் அறச் சீற்றம் நண்பனின் சாவுக்குக் காரணமான எதிரிகளைப் பந்தாடி, சுவரைக் கைப்பற்றி, காதலியை அடைந்து கடைசியில் அரசியல் போதனை செய்வதில் கொண்டுபோய் விடுகிறது. திரைக்கதை அத்தகைய நாயகனைக் கச்சிதமான முறையில் உருவாக்கியிருக்கிறது.

வடசென்னைப் பகுதியின் மீது அந்த மக்கள் மீது பிற வணிகத் திரைப்படங்கள் கட்டியெழுப்பியுள்ள அதே எதிர்மறையான பிம்பங்களைத்தான் இப்படமும் உருவாக்கியிருக்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வைத் தமது வணிக உத்திகளுக்கான கச்சாப் பொருளாக மாற்றும் உத்தியிலிருந்து மெட்ராஸ் விலகியிருக்கவில்லை.

ஆனால் படத்தின் கலைத்தரம், படச் சட்டகங்களுக்குள் நிரம்பியிருக்கும் குறியீடுகள் போன்றவை மேலான திரைப்பட அனுபவத்திற்கான வாய்ப்புகளை உள்ளடக்கியவை. திரைக்கதையின் வணிக முனைப்பு அவற்றைப் பொருட்படுத்தவில்லை.

நியாயமாகப் பார்த்தால் காளிக்கு ஏற்பட்டிருக்க வேண்டியது குற்ற உணர்வு. அந்தக் குற்ற உணர்வு ஏற்பட்டிருந்தால் இரண்டாம் பகுதியில் நாயகனின் செயல்பாடுகள் வேறு விதமாக இருந்திருக்க முடியும். ஒரு சுயபரிசீலனைக்குத் தன்னையும் வாழ்வையும் அரசியலையும் உட்படுத்திக்கொண்டிருக்க முடியும். அப்போது நாயகனால் யதார்த்தத்தின் மூர்க்கமான எல்லைகளைப் புரிந்துகொண்டிருந்திருக்க முடியும். நமக்கு நிச்சயமாக ஒரு உலகத் திரைப்படம் கிடைத்திருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in