

விவேக் நடிப்பில் வெளிவரவிருக்கும் ‘நான் தான் பாலா’ படத்தின் இசை மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது. இயக்குநர்கள் கே.பாலசந்தர், பாரதிராஜா, மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், தயாரிப்பாளர் சங்கத்தலைவர் கேயார், இயக்குநர் சங்கத்தலைவர் விக்ரமன் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மணிரத்னம் பேசியதாவது:
இங்கே விவேக் ஒரு இருக்கையை காட்டி அதில் அமரும் படி கூறினார். அந்த இருக்கையில் ‘கே.பி ’ என்று எழுதியிருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த எனக்கு அவரது இருக்கையில் அமரக் கிடைத்த இந்த வாய்ப்பை, அவருடன் நெருக்கமாக இருக்க முடிந்ததாக எடுத்துக்கொள்கிறேன். அதேபோல முன்பு ஒருமுறை பாரதிராஜா அலுவலகத்தில் போனில் பேசிக்கொண்டே அவருடைய இருக்கையில் அமர்ந்துவிட்டேன். அதைக் கவனித்தவர், ‘யாரும் உட்கார யோசிக்கும் இருக்கையில் அமர்ந்துட்டியே’ என்று சிரித்தார். அவர்கள் இருவரின் இருக்கைகளில் அமரும் வாய்ப்பு கிடைத்தது சந்தோஷமாக இருக்கிறது. காமெடியன்களை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கிறது. காமெடியில் நிறைய உழைப்பும், தரமும் சேர்த்து அற்புதமாக கொடுத்து எல்லா தரப்பு மக்களையும் சந்தோஷப்படுத்துகிறார்கள். அதில் விவேக்கின் பங்கும் நிறைய இருக்கிறது. அறிவுப்பூர்வமான காமெடியை கொடுத்து விவேக் அசத்துகிறார். இந்தப்படத்தை அவர் முதல் படியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேசுகையில், “இங்கே வந்திருக்கும் மணி சார், கே.பி சார், பாரதிராஜா சார் மூன்று பேரும் ஒரிஜினாலிட்டியான படங்களை கொடுத்திருக்கிறார்கள். அவர்களின் படத்தில் கலாச்சாரம் சார்ந்த விஷயங்கள் அதிகமாக இழையோடும். பொதுவாக இசை கேட்கும்போது சோகம், சந்தோஷம் என்று இரண்டு நிலைகளையும் நாம் அடைவதுண்டு. காமெடி முழுக்க முழுக்க சந்தோஷத்தையே கொடுக்கும். நான் சோகமாக இருந்தால் அந்த நேரத்தில் யூடியூப்பில் விவேக் நடித்த காமெடி காட்சிகளைப் பார்ப்பேன். எதிர்பார்ப்பைத் தாண்டி மிக அதிகமான நல்ல விஷயங்களை விவேக் காமெடியில் கொடுத்திருக்கிறார். உலக அளவில் சார்லி சாப்ளின் புகழ்பெற்றிருப்பதைப்போல, விவேக்கும் பெற்றிருக்கிறார்” என்றார்.
பாரதிராஜா பேசுகையில், “இந்த மேடையில் பொய் பேச வேண்டியதில்லை. அமர்ந்திருக்கும் அத்தனைப்பேரும் ஜாம்பவான்கள். என் ‘16 வயதினிலே’ படத்தை பார்த்துவிட்டு ‘தன்ட்ரிங் மை ஹார்ட்’ என்று பாராட்டியவர் கே.பி. இங்கே மணிரத்னம் வந்திருக்கிறார். அவன் படத்தின் ஒளி என்னை பிரகாசமாக பாதித்திருக்கிறது. அவனை விஞ்சும் அன்றுதான் பெரிய இயக்குநர் என்று சொல்வதை ஏற்றுக்கொள்வேன். அவன் பாதை வேறு, என் பாதை வேறு. அவன் வழியில் நான் முயற்சி செய்தும் பார்த்திருக்கிறேன். இங்கே வந்திருக்கும் ஏ.ஆர் ரஹ்மான் புகழை தலைக்கு ஏற்றிக்கொள்ளாத மனிதன். அவன் கடவுளின் குழந்தை. இவர்கள் இருக்கும் மேடையில் உண்மையைத்தானே பேச முடியும். இவர்கள் எல்லோரையும் ஒன்று சேர்த்து அமர வைத்திருக்கும் விவேக்கை எப்படி பாராட்டாமல் இருக்க முடியும்!’’ என்றார்.
பாலசந்தர் பேசுகையில், ‘‘என் சிஷ்யன் விவேக், மகா புத்திசாலி. மூன்று, நான்கு படங்களில் நடித்தவுடன் ஊருக்கு ஓடிவிடலாமா? என்று இருந்தவன்.ஆனால் சினிமா அவனை விடவில்லை. ‘ஒரு வீடு இரு வாசல்’ படத்திற்காக குற்றாலத்தில் ஷூட்டிங்கில் இருந்தோம். அந்த நேரத்தில் திடீரென்று அழகான ஒரு வானவில் தோன்றியது. மறைவதற்குள் அதை எப்படியும் ஷூட் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். விவேக் அழகாக புதுக்கவிதை எழுதுவான். அந்தப்படத்திலும் அவன் பத்திரிகையாளராகத்தான் வருவான். அவனை தேடிப்பிடித்து, ‘கவிதை.. கவிதை என்று திரிகிறவனாச்சே.. இப்போ உடனே இந்த வானவில்லைப் பார்த்து ஒரு கவிதை சொல்’ என்றேன். அவனுக்கு நடுங்கவே ஆரம்பிச்சுடுச்சு. கேமராவையெல்லாம் ரெடி செய்து வைத்தோம். ‘‘ஆஹா.. வண்ணங்கள் கோர்த்த வளைந்த மலரா… வானம் அளித்த வாடா கலரா… அர்ஜூனன் வில்லெனும் கனவு போஸ்டர்… ஆண்டவன்தான் இதற்கு டிராயிங் மாஸ்டர்..!’’ இப்படி ஒரு கவிதையை எழுதி எடுத்துக்கொண்டு அருகில் ஓடி வந்தான். அந்தக் காட்சி படத்தில் இருக்கிறது. அந்த அளவுக்கு கெட்டிக்காரப் பையன்!’’ என்றார்