

கும்கி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்று அடுத்தடுத்த ஆண்டுகளில் பிரபலமான சினிமா பாடல்களைத் தந்து வரும் டீ.இமானின் அடுத்த படம் ‘என்னமோ ஏதோ’. கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் ரவி தியாகராஜன் (பிரியதர்ஷனின் முன்னாள் உதவியாளர்). பாடல்களை எழுதியிருப்பவர் கார்க்கி.
இந்தப் படத்தில் சந்தானத்தின் பிரபல வசனமான ‘அப்பாடக்கரை’ வைத்தே ஒரு பாட்டை எழுதிவிட்டார்கள். ‘நீ என்ன பெரிய அப்பாடக்காரா?’ என்ற அந்தப் பாடலைப் பாடியிருப்பவர் இசையமைப்பாளர் அனிருத். ஆனால், அந்தப் பாடலில் அசத்தலாக ஸ்கோர் செய்திருப்பவர் பாடகி ஹர்ஷிதா கிருஷ்ணன்தான்.
டீ.இமானே பாடியுள்ள ‘முட்டாளாய் முட்டாளாய்’ ஹிட் ஆகக் கூடிய அதிரடி மெட்டும் மென்இசையும் கலந்த பாடல்.
"ஷட் யுவர் மவுத்’ பாடலில் ஸ்ருதி ஹாசனின் குரலை வீணடித்துவிட்டார்களோ என்று தோன்றுகிறது. தீபக், பூஜா பாடியுள்ள ‘மொசலே மொசலே’ பாடல் போகப் போகப் பிடிக்கலாம்.
"புதிய உலகை’ பாடல் மூலம், கடந்த ஆண்டின் புகழ்பெற்ற மலையாளப் பாடலான ‘காட்டே காட்டே’ (செல்லுலாய்டு) பாடலைப் பாடிய மயக்கும் குரலைக்கொண்ட வைக்கம் விஜயலட்சுமியை தமிழுக்குக் கொண்டுவந்துள்ளார் இமான். விஜயலட்சுமியின் காந்தக் குரலுக்காகவே அந்தப் பாடலை மீண்டும் மீண்டும் கேட்கலாம்.