

‘சைத்தான்’ படத்தின் மூலம் கவனிக்கவைத்த இயக்குநர் ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி ‘சத்யா’மூலம் மீண்டும் வந்துள்ளார். அவரிடம் உரையாடியதிலிருந்து
‘சத்யா’ வாய்ப்பு எப்படி வந்தது?
‘சைத்தான்’ படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு நாள் விஜய் ஆண்டனி அவர்களிடம் சிபிராஜ், ‘க்ஷணம்’ தெலுங்கு மறுஆக்க உரிமை வாங்கியிருப்பதைப் பற்றிப் பேசியிருக்கிறார். அதற்காகச் சரியான ஓர் இயக்குநரைத் தேடுவதாகவும் சொல்லியிருக்கிறார். அப்போது விஜய் ஆண்டனி எனது பெயரைப் பரிந்துரை செய்துள்ளார்.
நான் சைத்தான் பட வேலைகளோடு எனது அடுத்த படத்துக்கான கதைக்காகவும் திட்டமிட்டுக்கொண்டிருந்தேன். அப்போது சிபி என்னைத் தொடர்பு கொண்டார். அப்படித்தான் ‘சத்யா’ஆரம்பித்தது. சைத்தான் வெளியாகும்போது, சத்யாவின் படப்பிடிப்பு பாதி முடிந்துவிட்டது.
‘சத்யா’ படத்தின் கதைக்களம் பற்றி...
குழந்தை ஒன்று காணாமல் போனதிலிருந்து அதைக் கண்டுபிடிப்பதுவரைதான் படம். ஒவ்வொரு காட்சியுமே அடுத்து என்ன என்பது போல் நகரும். இது போன்ற படங்களில் காவல்துறையின் பார்வையில்தான் கதை நகரும். ஆனால், இதில் நாயகன் ‘சத்யா’ பார்வையில் செல்வது போல் திரைக்கதை நகரும்.
‘க்ஷணம்’ படத்தைத் தமிழுக்கு ஏற்றவாறு எப்படி மாற்றியுள்ளீர்கள்?
ஏற்கெனவே தெலுங்கில் வெற்றியடைந்த படத்தின் கதை. அப்படத்தைத் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் கொண்டாடியுள்ளனர். தமிழில் அப்படத்தின் காட்சியமைப்புகளின் வரிசை அப்படியே இருக்கும். தமிழுக்கு ஏற்றவாறு காட்சிகளின் பின்னணி, காமெடி எனக் கலந்து கொஞ்சம் வலுப்படுத்திச் செய்திருக்கிறேன்.
வழக்கமாக ரீமேக் படங்கள் எடுக்கும்போது, தமிழ் நேட்டிவிட்டிக்கு மாற்றியிருக்கிறேன் எனச் சொல்வார்கள். ஆனால், அது போல இதில் பெரிய மாறுதல்கள் கிடையாது. தெலுங்கில் எப்படி ரசித்தார்களோ அதைவிடத் தமிழில் ஒரு படி அதிகமாக ரசிப்பார்கள் என நம்புகிறோம். அதே கதையை அழுத்தமாக, தீவிரமாகச் சொல்லியிருக்கிறேன்.
கமல் ஹாசன் நடித்த ‘சத்யா’ படத்தின் தலைப்பை வைத்திருக்கிறீர்களே?
முதலில் படத்துக்கு ‘கண்ணை நம்பாதே’ என்ற தலைப்பே என் மனதில் இருந்தது. படம் வளரும் தறுவாயில் இன்னும்கூடச் சற்று அழுத்தமான, எளிதான தலைப்பாக வைக்கலாமே என நாங்கள் யோசித்தோம். அப்போது சிபிராஜ்தான் சத்யா என்று நாயகனின் பெயரைத் தலைப்பாக வைக்கலாம் என்றார். அனைவருக்கும் அது சரியென்று தோன்றியது.
உடனே கமல்ஹாசன் தரப்பைத் தொடர்பு கொண்டு அதற்கான அனுமதியை விரைவாகப் பெற்றோம். கமல் அவர்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன்.
‘சத்யா’ கதாபாத்திரத்துக்கு சிபிராஜ் எந்த அளவுக்குப் பொருந்தியுள்ளார்?
சிபிராஜை இந்தப் படத்துக்காக நிறைய மாற்றியிருக்கிறேன். அவர் இதுவரை நடித்த படங்களின் லுக் எதையுமே இந்தப் படத்தில் அவரிடம் பார்க்க முடியாது. இதை உறுதியாகச் சொல்ல முடியும். அவருடைய நடை, உடை, பாவனை, பேச்சுமொழி ஆகிய எல்லாவற்றையும் மாற்றியிருக்கிறேன். அவரிடம் என்னுடைய எண்ணத்தைக் கூறியவுடன் “கதைக்கு என்ன சொன்னாலும் செய்யலாம்” என முன்வந்தார். அவருடைய லுக்கை மட்டும் இறுதிசெய்யவே நீண்ட நாட்கள் எடுத்துக்கொண்டோம். கச்சிதமான, ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பைத் தந்திருக்கிறார் சிபிராஜ்.
அதே போல் காவல்துறை அதிகாரியாக வரலெட்சுமி நடித்துள்ளார். வழக்கமாக நீங்கள் பார்க்கும் வரலெட்சுமியை இதில் காண முடியாது. அவருடைய நடிப்பும் அந்த அளவுக்குப் பேசப்படும். ரம்யா நம்பீசன், ஆனந்த்ராஜ், சதீஷ், யோகிபாபு என அனைவரும் படத்துக்குச் சிறப்பாகப் பங்காற்றியுள்ளனர்.
ரீமேக் செய்தால் அதில் இயக்குநருக்குப் பெயர் கிடைக்காதே..
அப்படி ஒரு எண்ணம் பரவலாக இருக்கிறது. ஆனால், ரீமேக் படம் இயக்குவதும் சவால்தான். ஏனென்றால், வெற்றியடைந்த படத்தை அதன் சிறப்பம்சம் மாறாமல் ரீமேக் செய்ய வேண்டும். ஏதாவது ஒரு விஷயம் தவறினால்கூட இயக்குநரைத்தான் தவறாகப் பேசுவார்கள். அப்படி அசலின் தன்மை மாறாமல் படம் எடுப்பதும் சவால்தானே? அதனால்தான் ரீமேக் வாய்ப்பை ஒப்புக்கொண்டேன்.
தொடர்ந்து ரீமேக் படங்கள் இயக்கும் எண்ணம் உள்ளதா?
ஒரு எழுத்தாளர் அடுத்த என்ன செய்ய வேண்டும் என நேரமெடுத்து, யோசித்துச் செய்யலாம். நான் ஒரு இயக்குநர் மட்டுமே. அடுத்து ஒரு ஆவணப்படமோ, விளம்பரப் படமோ இயக்க வாய்ப்பு வந்தாலும் செய்வேன். ஏனென்றால், ஒவ்வொன்றுமே ஒருவித சவால்தான். இருக்கும் துறையில், செய்யும் வேலையைக் கச்சிதமாக செய்ய வேண்டும். ரீமேக்கோ அசல் கதையோ தழுவல் கதையோ, தொடர்ச்சியாக ஓடிக்கொண்டே தான் இருப்பேன்.
- ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி
அடுத்த படத்துக்கான கதையை இறுதி செய்துவிட்டீர்களா?
அடுத்து ஒரு ஹாரர் மிஸ்டரி த்ரில்லர் கதையை நானும் என் நண்பனும் எழுதிக்கொண்டிருக்கிறோம். அந்தக் கதை சார்ந்து சில தகவல்களை நான் சேகரித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் அதன் முழுத் திரைக்கதை தயாராகிவிடும். அதன் பிறகுதான் மற்றதை யோசிக்க வேண்டும்.