ரஜினியின் அரசியலும் காலத்தின் கட்டளையும்

ரஜினியின் அரசியலும் காலத்தின் கட்டளையும்
Updated on
3 min read

63 வயதை நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஒவ்வொரு பிறந்த நாளையும் ஊடகங்களும், ரசிகர்களும் வெவ்வேறு வடிவங்களில் கொண்டாடுகிறார்கள். சினிமா வியாபாரத்தைப் பொறுத்தவரை ரஜினி ஒரு மாபெரும் ‘பிராண்ட்’! இன்றைய இளைய தலைமுறை நடிகர்கள் ரஜினி படங்களை’ரீமேக்’ செய்து நடிக்க வேண்டும் என்று துடிக்கிறார்கள். அடுத்த ரஜினி யார் என்பதிலும் ஒரு மறைமுகப் போட்டி இருக்கவே செய்கிறது. ரஜினியின் உடல்மொழியையும், அவர் பாணி ஹீரோயிசத்தைப் போலி செய்வதிலும் வேகம் காட்டுகிறார்கள்.

இன்னொரு பக்கம் சினிமா வியாபாரத்தில் இன்று முன்னணியில் இருக்கும் இளைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜி என யாரை விடவும் பெரிய சந்தை மதிப்பு ரஜினியினுடையது. இந்திய எல்லைக்கு அப்பால் ஜப்பான் ரசிகர்களிடமும் செல்வாக்கு பெற்றுத் திகழும் ரஜினியின் சர்வதேசப் புகழுக்கும் குறைவில்லை. பொழுதுபோக்குத் துறையில் இருந்துகொண்டே ஆன்மிக ஆர்வம் கொண்டவராகவும் ரஜினி இருந்துவருகிறார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்திருக்கும் ரஜினி, எளிமையான செயல்கள் மூலம் தன் மீதான மரியாதையை அதிகரிக்க வைக்கிறார். மற்றவர்களை மனம் விட்டுப் பாராட்டும் அவரது மனமும், மற்றவர்களைப் பற்றி குறை கூறாத குணமும் மேலும் மேலும் அவரது ரசிகர்களை வசீகரித்துக்கொண்டே இருக்கின்றன. உலக அரங்கில் ஹிந்திப் படங்கள் மட்டுமே இந்தியப் படங்கள் என்று நினைத்துக்கொண்டு இருந்தவர்களைத் தனது படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகை நோக்கித் திரும்ப வைத்த பெருமையில் ரஜினிக்கும் பங்கு உண்டு.

ரஜினியின் எல்லாப் பெருமைகளுக்கும் ஆதாரச் சக்தியாக இருப்பவர்கள் அவரது ரசிகர்கள்! பெருந்திரளான ரசிகர்களைக் கொண்ட ‘மாஸ் ஹீரோக்கள்’ பட்டியலில் ரஜினிக்கே அதிக எண்ணிக்கையிலான ரசிகர் மன்ற அமைப்புகள் இருப்பதாகப் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ரஜினி தனது விதவிதமான நாயகக் கதாபாத்திரங்கள் வழியாக முன்வைக்கும் நீதிபோதனையை விட, அந்தக் கதாபாத்திரங்கள் கூறும் ‘பஞ்ச்’ வசனங்கள் தங்கள் வாழ்க்கையில் உத்வேகத்தையும் உற்சாகத்தையும் தரக்கூடியவை என அவர் ரசிகர்கள் நம்புகிறார்கள். அப்படிப்பட்ட ரசிகர்களின் இடையறாத எதிர்பார்ப்பாக இன்றும் நீடிப்பதுதான் “ரஜினி நேரடி அரசியலுக்கு வரவேண்டும்!” என்பது!

அரசியல் தகுதி

இந்தக் கோரிக்கையும் எதிர்பார்ப்பும் கடந்த இருபது ஆண்டுகளாக இருந்துவருகின்றன. ஆனால் ரஜினி அரசியலில் கால் வைக்கத் தயங்குவதன் பின்னணி எதுவாக இருக்க முடியும்? அவருக்கு நிஜமாகவே அரசியல் ஆசை இல்லையா? அல்லது தனது அரசியல் தகுதி மீது அவருக்கே சந்தேகம் இருக்கிறதா? அல்லது தமிழக அரசியலில் மாறி மாறி ஆதிக்கம் செலுத்தி வரும் திமுக, அதிமுக ஆகிய திராவிடக் கட்சிகளைத் தாண்டி சினிமா நட்சத்திரங்கள் யாருக்கும் தமிழக அரசியலில் வலிமையான இடம் இல்லை என்ற கணக்கை நம்புகிறாரா?

1998இல் வெளியான முத்து படத்துக்குப் பிறகு நான்கு ஆண்டு இடைவெளியில் ‘பாபா’ திரைப்படத்துக்குக் கதை, திரைக்கதை மற்றும் பூர்வாங்க வசனங்களையும் எழுதி நடித்தார் ரஜினி. ஒரு உள்ளூர் தாதா, ஆன்மீகவாதியாக மாற்றம் பெறும் செயல்முறைக்கு நடுவில் ஊழல் அரசியல்வாதிகளை எதிர்த்துப் போராடுவது போலக் கதையை அமைத்திருந்த ரஜினி அந்தப் படத்தின் முடிவில் அரசியல் குறித்த கேள்விக்குப் பதில் அளிக்கிறார். தன்னைத் தேடிவரும் பதவி நாற்காலியைப் புறக்கணித்து இமயமலையே தனக்குப் பிடித்த பாதை என்பதுபோலப் படம் முடியும். அவ்வளவுதான் படம் என்று நினைக்கும்போது அப்போது தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த நேர்மையான முதலமைச்சர் கொல்லப்பட்ட அதிர்ச்சியான செய்தி வரும். இமயமலையை நோக்கிச் செல்லும் நாயகனின் கால்கள் திரும்பும் இந்த ஷாட்டோடு படம் முடிகிறது.

ஆன்மிகம்தான் என் இலக்கு. ஆனால் சமுதாயத்திற்கு என் பங்களிப்பு தேவையென்றால் ஆன்மிகத்தைத் துறந்துவிட்டு அரசியலில் இறங்கத் தயங்க மாட்டேன் என்னும் செய்தியைத் தெளிவாகச் சொன்ன முடிவு அது. “உப்பிட்ட தமிழ் மண்னை நான் மறக்க மாட்டேன், உயிர் வாழ்ந்தால் இங்கேதான் ஓடிவிட மாட்டேன். கட்சிகளை, பதவிகளை நான் விரும்ப மாட்டேன், காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்” என்றும் பாடலில் அறிவித்த படம் அது. படம் வெற்றி பெறாததால் இந்தச் செய்தி அதற்குரிய முக்கியத்துவம் பெறவில்லை.

இந்தக் காட்சிகள் ரஜினியின் அரசியல் ஈடுபாட்டைக் காட்டுகின்றன என்றாலும் பாபா தோல்விக்குப் பிறகு அந்த ஈடுபாடு எந்த வகையிலும் வெளிப்படவே இல்லை. அரசியல் சார்ந்த தனது வசனங்களை வெறும் வசனமாகப் பாருங்கள் என்று ரஜினி சொல்வதுபோலக் குசேலன் படத்தில் ஒரு காட்சி வரும். அதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதிலிருந்து ரஜினி ரசிகர்களின் மனநிலையைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். பாபா படம் வெற்றிபெற்றிருந்தால் ஒருவேளை அவர்களின் உள்ளக்கிடக்கை நிறைவேறியிருக்கலாம். “காலத்தின் கட்டளை” கிடைத்திருக்கலாம்.

ஆவேசமற்ற அமைதி

எந்த வகையில் தன் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டாலும் பொறுமையும் யாரையும் குறை கூறாத அமைதியும் ரஜினியின் குணங்கள். இதுவரை ரஜினியை எத்தனையோ பேர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்கள். ஆனால் ஒருமுறைகூட ரஜினி அதற்கு ஆவேசமாகப் பதில் கொடுத்ததில்லை. விமர்சனங்களை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார். அல்லது சில காலம் ஒதுங்கியிருந்து அமைதியாகிவிடுகிறார்.

இப்படி அமைதியாக ஒதுங்கிவிடுவதும் தனிமைப்படுத்திக்கொள்வதும் அரசியலுக்கான தகுதிகளில் இடம்பெறத்தகாதவை. மக்களுடன் உடனடியாகத் தொடர்புகொள்வதற்கான தேவை உள்ள அரசியல் அரங்கில் ரஜினியின் அமைதியான குணம் அவரை அரசியலுக்குப் பொருத்தமற்றவராகவே அடையாளம் காட்டுகிறது. தனது அமைதியை உடைத்துக்கொண்டு தலைவர்களைக் குறித்தும் பொது விஷயங்கள் குறித்தும் பேசும்போதும் ரஜினி சறுக்கியிருக்கின்றார். பால் தாக்கரே குறித்த கருத்திலும் சரி, கருணாநிதி, ஜெயலலிதாவைக் காமராசர் ,அண்ணாவுடன் ஒப்பிட்ட விதத்திலும் சரி, ரஜினியின் அரசியல் பார்வையும் வரலாற்று அறிவும் மெச்சத்தக்க விதத்தில் வெளிப்படவில்லை.

இவை அனைத்துமே அரசியல் களத்துக்குப் பொருத்தமில்லாத குணங்கள். ஈழப்போர் முதலான பொதுப் பிரச்சினைகளில் தன் குரலைப் பதிவு செய்யாததில் பொதுவாழ்வில் ரஜினி தனக்கு வகுத்துக்கொண்டுள்ள எல்லை புலப்படுகிறது. அந்த எல்லையைத் தாண்டி அவர் வெளியில் வரும்போதும் பெரும்பாலும் விமர்சனங்களையே சந்திக்கிறார்.

தமிழகத்தின் சொத்தாக இருக்கக்கூடிய ரஜினி ஏன் அரசியல் ஒவ்வாமை கொண்டவராகத் தோற்றமளிக்கிறார் என்பதற்கான காரணத்தைத் தேடினால், தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய கட்சிகளைத் தாண்டி தமிழக அரசியல் களத்தில் முன்றாவதாக ஒரு கட்சிக்கு இடமில்லை என்பதை நம்பக்கூடியவராக ரஜினி இருக்கலாம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். தனித்து இயங்குவதாகக் களம் இறங்கிய விஜயகாந்த் இந்தக் கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதும் முன்னுதாரணமாக இருக்கிறது.

சரியான சூழல் அமைந்தால் இந்தக் காரணங்களைத் தாண்டியும் ரஜினி அரசியலுக்கு வரலாம். அதற்கான வாய்ப்பு வரவே வராது என்று சொல்வதற்கில்லை. ஆனால் அதற்கு ரஜினி பொது வாழ்வில் மேலும் துடிப்பான பங்கை ஆற்றத் தயாராக இருக்க வேண்டும். நடிகர் சங்கப் பொறுப்பு உள்பட எந்தப் பொதுவான பொறுப்பையும் ஏற்க ஆர்வம் காட்டியிராத ரஜினிக்கு இதுதான் பெரிய சவாலாக இருக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in