

அமெரிக்கா என்ற மிகப் பெரிய தேசத்தின் வளர்ச்சிக்குப் பின்னால் ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு உயிர் வழிய வேலை செய்த அப்பாவி மக்கள் இருப்பதை யாரும் மறந்துவிட முடியாது. பிற்காலத்தில் பொது இடங்களில் பிரவேசிக்கவும் கல்வி பயிலவும் இன்ன பிற அடிப்படை உரிமைகளைப் பெறவும் சாத்வீகம் முதல் வன்முறைவரை பல்வேறு வழிமுறைகளை அம்மக்கள் பிரயோகிக்க வேண்டியிருந்தது. அஹிம்சாவாதியான மார்ட்டின் லூதர் கிங் முதல் வன்முறையில் தொடங்கி இஸ்லாம் மதத்துக்கு மாறி அமைதி வழியில் போராடிய மால்கம் எக்ஸ்வரை ஏராளமானோர் தங்கள் போராட்டத்தில் உயிர்நீத்தனர். இன்றும் அமெரிக்காவில் நிறவெறி முற்றிலுமாக அகன்றுவிடவில்லை.
இந்த நிலையில் 20-01-2009 என்ற தேதி ஆப்பிரிக்க மக்களின் மறக்க முடியாத நாளாக அமைந்தது. அன்று தான் கறுப்பினத்தைச் சேர்ந்த ஒபாமா அமெரிக்காவின் அதிபராகப் பதவியேற்றார். ஒபாமா பதவியேற்றதை யூஜீன் ஆலன் என்ற கறுப்பின மனிதர் கண்களில் வழியும் நீருடன் கண்டு ரசித்தார். அவரும் வெள்ளை மாளிகையில் முக்கியத்துவம் வாய்ந்த பதவியில் இருந்தவர்தான். அவர் வகித்த பதவி வெள்ளை மாளிகையின் சமையலறைப் பணியாளர். 34 வருடங்களாக அந்தப் பணியில் இருந்த அவர் 1986இல் தலைமை பட்லராக உயர்ந்தவர். தன் பதவிக் காலத்தில் அமெரிக்காவின் 8 அதிபர்களைக் கண்டவர். பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் அமெரிக்க அதிபர்கள் எடுத்த முடிவுகளை ஒரு மவுன சாட்சியாக நின்று கவனிக்கும் வாய்ப்பைப் பெற்றவர். அவரது வாழ்க்கையை அடிப்படையாக வைத்து லீ டேனியல்ஸ் இயக்கியுள்ள படம் 'தி பட்லர்'.
தந்தையாலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தாயின் சித்திரவதைகளையும் பொறுத்துக்கொண்டு கடைசியில் எய்ட்ஸ் நோயுடன் போராடும் பெண்ணை மையமாகக் கொண்டு லீ டேனியல்ஸ் இயக்கிய 'ப்ரீஷியஸ்' என்ற திரைப்படம் பல்வேறு விருதுகளைப் பெற்றது. ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'தி கலர் பர்ப்பிள்' போன்ற படங்கள் கறுப்பினப் பெண்கள் படும் துயரத்தைச் சொன்னாலும், லீ டேனியல்ஸின் இயக்கத்தில் ஒரு கூடுதல் வலி இருந்தது. காரணம் அவரும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்தான்.
'தி பட்லர்' படத்தின் முக்கியப் பாத்திரத்தில் நடித்திருப்பவர் பாரஸ்ட் விடேகர். 'தி லாஸ்ட் கிங் ஆப் ஸ்காட்லாந்து' படத்தில் உகாண்டா முன்னாள் அதிபர் இடி அமீனாக நடித்து மிரட்டியவர். அவரது மனைவியாக நடித்திருப்பவர் அமெரிக்க டாக் ஷோ நட்சத்திரமான ஓபெரா வின்பிரே. படத்தில் ராபின் வில்லியம்ஸ், ஆலன் ரிக்மேன், ஜான் கஸாக் போன்ற ஹாலிவுட்டின் பிரபல நடிகர்களும் நடித்துள்ளனர். மும்பையில் கடந்த 17-ம் தேதி தொடங்கிய சர்வதேச திரைப்படவிழாவில் முதல் படமாகத் திரையிடப்பட்டது இந்தப்படம்.