

நடிகர் விஜய் விரும்பினால் ஆம் ஆத்மி கட்சியில் சேரலாம் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது.
தமிழ்த் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் அரசியலில் குதிக்கப் போவதாக அடிக்கடி பரபரப்பு எழுந்து அடங்குவது வாடிக்கை. கடந்த ஆண்டு டெல்லிக்கு வந்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியை சந்தித்ததாகக் கூறப்பட்டது. தனிக்கட்சி தொடங்க திருவனந்தபுரத்தில் ரசிகர்களிடம் ரகசிய ஆலோசனை நடத்தியதாகவும் பரபரப்பாகப் பேசப்பட்டன.
இந்நிலையில் நடிகர் விஜய் ஆம் ஆத்மி கட்சியில் சேர முயல்வதாகவும் அதற்காக அவர் டெல்லிக்கு வந்திருப்பதாகவும் தமிழகத்தில் தகவல்கள் பரவி வருகின்றன. இதுகுறித்து சில நாள்களுக்கு முன்பு செய்தியும்கூட வெளியானது.
இதன் உண்மைத்தன்மையை உறுதி செய்ய “தி இந்து” தரப்பில் டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைமையை அணுகினோம். அப்போது அந்தக் கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் பங்கஜ் குப்தா “தி இந்து”க்கு அளித்த சிறப்புப் பேட்டியில் கூறியதாவது:
நடிகர் விஜய்யோ, வேறு எந்த திரையுலக நட்சத்திரங்களோ எங்களுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை. விஜய் அல்லது வேறு எந்த நட்சத்திரங்களாலும் ஆம் ஆத்மி கட்சியில் தாராளமாக சேரலாம். அவர்கள் கட்சியில் சேர எந்த தடையும் கிடையாது.
ஆனால் கட்சியில் சேரும் விஜய் அதன் சாதாரண உறுப்பினராகத்தான் இருக்க முடியும். அவர் ஆம் ஆத்மியின் நிர்வாகியாக விரும்பினால் அவரது நேர்மை மற்றும் ஊழலற்ற நடவடிக்கைகள் குறித்து விசாரித்து உறுதி செய்த பின்னரே அவருக்குப் பொறுப்பு தரப்படும்.
பொறுப்பை ஏற்பவர்களுக்காக ஆம் ஆத்மியில் மூன்று முக்கிய விஷயங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. அவை, நன்னடத்தை உடையவர்கள், குற்றப் பின்னணி அல்லாதவர்கள் மற்றும் ஊழல் செய்யாதவர்கள். இதை விசாரிப்பதற்கு என்றே கட்சியில் தனியாக ஒரு குழு செயல்பட்டு வருகிறது என்று பங்கஜ் குப்தா தெரிவித்தார்.