மும்பை மசாலா: ரன்பீருக்கு ஜோடி ஐஸ்வர்யாவா?

மும்பை மசாலா: ரன்பீருக்கு ஜோடி ஐஸ்வர்யாவா?
Updated on
2 min read

“ஹாலிவுட்டுக்குப் போக விருப்பமில்லை”

நடிகர் ஆமிர் கான் ஹாலிவுட்டில் நடிப்பதில் தனக்கு அவ்வளவாக ஆர்வமில்லை என்று சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். இர்ஃபான் கான், பிரியங்கா, தீபிகாவைப் போல ஆமிருக்கும் ஹாலிவுட்டுக்குச் செல்லும் எண்ணமிருக்கிறதா என்று கேட்டபோது, “எனக்கு ஹாலிவுட்டிலிருந்து நிறைய வாய்ப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், அவற்றின் திரைக்கதைகள் அவ்வளவாக என்னைக் கவரவில்லை.

அத்துடன், நம் நாட்டில் இருப்பதைப் போன்ற உணர்வுபூர்வமான இணைப்பு அந்தப் பார்வையாளர்களிடம் எனக்கிருக்காது. இந்நாட்டு மக்களுக்கும் எனக்கும் இருக்கும் இந்த இணைப்பை 27 ஆண்டுகளாக நாங்கள் இரு தரப்பும் சேர்ந்து உருவாக்கிவைத்திருக்கிறோம். அதை நான் மிகவும் மதிக்கிறேன். அதனால், என்னுடைய பார்வையாளர்களை விட்டுவிட்டு என்னால் எங்கும் செல்ல முடியாது. அது எனக்கு மகிழ்ச்சியளிக்காது. உணர்வுபூர்வமாக, நான் இங்கே வேலை பார்க்கவே விரும்புகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.

அத்துடன், பாலிவுட்டில் நிலவும் ஊதிய ஏற்றத்தாழ்வை நீக்குவதற்கும் குரல் கொடுத்திருக்கிறார் ஆமிர். “ஒருவருடைய பாலினத்தை வைத்து அவர்களுக்கான ஊதியத்தை நிர்ணயிக்கக் கூடாது. எந்தத் துறையாக இருந்தாலும் அதில் ஊதிய சமத்துவம் இருக்க வேண்டும். ஆணாதிக்க மனநிலை மாற வேண்டும்” என்றும் சொல்கிறார் அவர்.

ரன்பீருக்கு ஜோடி ஐஸ்வர்யாவா?

நான்கு ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு, கரண் ஜோஹர் இயக்கத்தில் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ திரைப்படம் இந்தத் தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது. ஐஸ்வர்யா ராய், ரன்பீர் கபூர், அனுஷ்கா ஷர்மா, ஃபவாத் கான் போன்றவர்கள் நடிக்கும் இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது.

ஒரு முக்கோணக் காதல் கதையின் சுவடுகளை இந்தப் படத்தின் டீசரில் பார்க்க முடிகிறது. ரன்பீர் கபூர், அனுஷ்காவுடன் இணைந்து ஏற்கெனவே ‘பாம்பே வெல்வட்’ படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அவரும் ஐஸ்வர்யாவும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பதால் பாலிவுட் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

1977-ல் வெளியான யஷ் சோப்ரா தயாரிப்பில் வெளியான ‘துஸ்ரா ஆத்மி’ படத்தின் ரீமேக்தான் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ என்று சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில், ஷாருக் கான், லிசா ஹைடன் போன்றவர்கள் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார்கள்.

அஜய் தேவ்கனின் ‘ஷிவாய்’ திரைப்படத்துடன் ‘ஏ தில் ஹை முஷ்கில்’ தீபாவளியன்று மோதவிருக்கிறது.

“நான் இப்படித்தான்!”

போபியா, பத்ளாபூர், ‘மாஞ்சி - தி மவுன்டேன் மேன்’, ‘அகல்யா’ குறும்படம் என வித்தியாசமான முயற்சிகளால் பாலிவுட்டில் தடம்பதித்தவர் ராதிகா ஆப்தே. அத்துடன், தொடர்ந்து தன்னுடைய வலிமையான சமூகப் பார்வைகளையும் பதிவுசெய்துவருகிறார். தனக்கு நம்பிக்கையிருக்கும் விஷயங்களை விளைவுகளைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்துசெய்வேன் என்று சொல்லியிருக்கிறார் ராதிகா. “நீங்கள் எதுவும் பேசவில்லையென்றாலும் உங்களுக்கு எதிர்மறையான கருத்துகள் கிடைக்கும். அதனால் எதிர்மறைக் கருத்துகளைப் பற்றி பயப்படக் கூடாது.

என்னால், இரண்டு விதமாக இருக்க முடியாது. நான் எதை நம்புகிறானோ அதைத் தொடர்ந்து செய்வேன். அத்துடன் என்னுடைய நடிப்புப் பயணத்தைத் தொடர்ந்து வெகுநாட்கள் ஆகிவிடவில்லை. என்னுடைய சில பணிகள் சவாலானதாக இருந்திருக்கின்றன. சிலவற்றைச் செய்யும்போது மகிழ்ச்சியுடன் உணர்ந்திருக்கிறேன். ஆனால், எனக்கு நடிப்பில் நிறைய பரிசோதனை முயற்சிகளைச் செய்ய வேண்டும்” என்கிறார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in