

நானும் ரஜினியும் ஹோட்ட லில் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, எங்கள் பக்கத்து டேபிளில் வந்து உட்கார்ந்தவரைப் பற்றி ரஜினி சுட்டிக் காட்டியவுடன், அந்த நபர் யாரென்று உற்றுப் பார்த்தேன். கண்கள் எல்லாம் உள்ளே போய், தாடி வளர்ந்து அடையாளமே தெரியாத அளவுக்கு மாறியிருந்த அவர், ரகுவரன்.
சில விநாடிகள் என்னால் நம்பவே முடியல. ‘‘ரகுவரன்… ரகுவரன்…’’ என்று இரண்டு தடவை உரக்கக் கூப்பிட்ட பிறகுதான் எங்கள் பக்கம் திரும்பினார். நான் ரஜினியைப் பார்த்தேன். அவர் சொன்னார்: ‘‘என்ன சார் பண்றது? நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டேன். அவர் திருந்துற மாதிரி தெரியலையே!’’ என்றார். ரொம்ப வருத்தப்படும் அளவுக்கு அந்த சந்திப்பு அமைந்துவிட்டது.
அடுத்த சில ஆண்டுகளுக்குப் பிறகு ரகுவரன் திருந்திவிட்டார் என்ற செய் தியை கேள்விப்பட்டு மகிழ்ந்தேன். அதன் பிறகு நடிகை ரோகிணி, ரகுவரன் இரு வரும் திருமணம் செய்துகொண்டார்கள். சினிமாவை உயிராக நேசிக்கும் நடிகைகளில் ரோகிணியும் ஒருவர். எதையும் வித்தியாசமாக செய்ய வேண்டும் என்று விரும்புபவர். ஆனால், ரகுவரன் - ரோகிணி இல்லறமும் நீடிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அடுத்த சில ஆண்டுகளில் ரகுவரன் உடல் நலக்குறை வால் உயிரிழந்தார்.
‘ஒரு மனிதனின் கதை’ தொடரில் நடித்த ஒரு மனிதனின் நிலை இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டேன். அதனால்தான். ‘மதுப் பழக்கம், போதைப் பழக்கம் கூடாது’ என்று சந்தர்ப்பம் கிடைக்கும் இடங்களில் எல்லாம் நான் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
ரகுவரன் நடித்த ‘ஒரு மனிதனின் கதை, தொலைக்காட்சித் தொடரை ‘தியாகு’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கத் தொடங்கியபோது, எழுத்தாளர் சிவசங்கரி சிறந்த முறையில் திரைக்கதை அமைத்துக் கொடுத்தார். மதுப் பழக்கத்தால் ஏற்படும் கொடுமைகளை காட்சியின் மூலம் நல்ல முறையில் பதிவு செய்தார். இதன் மூலம் அவர் சிறந்த தொலைக்காட்சி மற்றும் திரைப்பட எழுத்தாளராகவும் பெயர் பெற்றார். ‘தியாகு’ படம் சிறப்பாக தயாராகியும், அப்படத்தை விநியோகஸ்தர்கள் யாரும் வாங்க முன்வரவில்லை. எங்களாலும் படத்தை வெளியிட முடியவில்லை.
அந்த சமயத்தில் எழுத்தாளர் சிவசங் கரி டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த அதே விமானத்தில் அப்போது முதல் வராக இருந்த கலைஞர் அவர்களும் வந்திருக்கிறார். கலைஞரிடத்தில் சிவசங்கரி, ‘‘மதுப் பழக்கம் கூடாது என் பதை வலியுறுத்தும் விதமாக ஏவி.எம் நிறுவனம் ‘தியாகு’ என்ற படத்தை எடுத் திருக்கிறார்கள். அதை வியாபாரம் செய்ய முடியவில்லை. அதை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.
‘தியாகு’ (1990) படத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், ரகுவரன்
அதைக் கேட்ட கலைஞர் அவர்கள், ‘‘ஏவி.எம்.சரவணனை எனக்கு அந்தப் படத்தை போட் டுக் காட்டச் சொல்லுங்கள். பார்த்து முடிவு பண்ணுவோம்!’’ என்று சொல்லியிருக்கிறார்.
கலைஞர் அவர்கள் ‘தியாகு’ படம் பார்க்க ஏற்பாடானது. மது ஒழிப்பு கமிட் டியையும் அழைத்துக் கொண்டு வந்து கலைஞர் படம் பார்த்தார். படம் பார்த்து விட்டு வெளியே வந்த கலைஞர் என்னைப் பார்த்து ‘‘என்ன முத்துராமா! நீ இந்த மாதிரி படமும்கூட எடுப்பியா?’’ என்றார் சிரித்துக்கொண்டே. அதன் பிறகு மது ஒழிப்பு கமிட்டியிடம் கலந்து பேசிவிட்டு சரவணன் சாரிடம் ‘‘படத்தை அரசுக்கு கொடுத்துவிடுங்கள். நாங்கள் ரிலீஸ் செய்து, மக்களிடம் அந்தக் கருத்தைக் கொண்டு சேர்க்கிறோம்’’ என்றார். இப்படித்தான் அந்த விழிப்புணர்வு படத்தை மக்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டியிருந்தது.
ஏவி.எம் தயாரிப்பில் விஜய காந்த், ராதிகா, சரத்பாபு, பல்லவி, டெல்லி கணேஷ் நடிப்பில் ‘தர்ம தேவதை’ படத்தை இயக்கினேன். முதலாளி, தொழி லாளிக்கு இடையே உள்ள பிரச்சி னையை மையமாகக் கொண்ட படம் அது. தொழிலாளர் தலைவராக சரத்பாபுவும், அவரது மனைவியாக போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் ராதிகாவும் நடித்தார். முதலாளிகளின் சூழ்ச்சியில் சரத்பாபு கொல்லப்பட, அதற்காக விஜயகாந்த் நீதி கேட்டு தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி சென்னை நகரில் சரத்பாபு உடலோடு மிகப் பெரிய ஊர்வலம் நடத்துவார். கணவன் இறந்தாலும் கடமை ஆற்றும் போலீஸ் அதிகாரி ராதிகா, ஊர்வலத் தில் பாதுகாப்புக்கு வருவார். அந்த ஊர்வ லத்தை பார்த்தவர்கள், படப்பிடிப்பு என்று நினைக்காமல் உண்மையான தொழி லாளர்கள் ஊர்வலம் என்றே நம்பினார் கள். படத்தில் ஒருசில காட்சிகளில் விஜயகாந்த் தோன்றினாலும், அந்தக் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருந்தார்.
‘தர்ம தேவதை’ படத்தில் விஜயகாந்த், ராதிகா
அடுத்து அந்தப் படத்தை முடித்துவிட்டு, தமி ழில் விசு இயக்கிய ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்தை தெலுங்கில் நான் இயக்க ஆரம்பித்தேன். விசுவின் கதா பாத்திரத்தில் தெலுங்கில் கொள்ளபுடி மாருதி ராவ் ஏற்று நடித்தார். அவருடன் சரத்பாபு, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, அன்னபூரணி நடித்தனர். பட வேலை களை ஆரம்பித்தபோது ஒரு சிக்கல் ஏற் பட்டது. கொள்ளபுடி மாருதி ராவ் 20 நாட்களில் அமெரிக்கா போக வேண்டி யிருந்ததால், அதற்குள் படப்பிடிப்பு நடத்த வேண்டிய நெருக்கடி உருவானது. படத்தில் நடிக்கவிருந்த நடிகர்களை அழைத்து தமிழ் ‘சம்சாரம் அது மின் சாரம்’ படத்தை போட்டுக் காட்டினேன்.
அவர்கள் அத்தனை பெரும் படம் பார்த்து முடிந்ததும், ‘‘இப்போது உங்க எல்லோருக்கும் கதையும், காட்சிகளும் தெரிஞ்சிருக்கு. இதில் மாருதி ராவ் நடிக்கும் காட்சிகளை மட்டும் முதலில் துண்டுத் துண்டாக எடுக்கப் போறேன். அதனால நான் பேட்ச் பேட்ச்சாகத்தான் எடுப்பேன். கடைசியில் எடிட்டிங்கில் சரியாக தொகுத்துக்கொள்வேன்!’’ என் றேன். அதற்கு மாருதி ராவ், ‘‘என்னால பேட்ச் பேட்ச்சாக எடுத்து படமே ‘பேட்ச்’ ஆக வந்துடப் போகுது?’ என்றார். ‘‘இல்லை சார். நான் அடிப்படையில் ஒரு எடிட்டர். மனதில் இப்படித்தான் எடுக்கணும் என்பதை ஒரு வடிவத்துக்கு கொண்டு வந்துட்டேன். நிச்சயமாக அது பேட்ச்சாக இருக்காது!’’ என்று உறுதியோடு கூறிவிட்டு, படப்பிடிப்பைத் தொடங்கி விறுவிறுவென குறித்த நாட்களுக்குள் எடுத்து முடித்துவிட்டேன்.
அமெரிக்கா சென்று திரும்பி வந்த மாருதி ராவ் மிகவும் ஆர்வத்தோடு, நான் பேட்ச் பேட்சாக எடுத்த காட்சி களை முழு படமாக பார்க்க வேண்டு மென்று வந்து பார்த்தார். பார்த்தவர் என்ன சொன்னார்?
- இன்னும் படம் பார்ப்போம்… | படம் உதவி: ஞானம்