

திரைப்பட வரலாறு டி.டபிள்யூ. கிரிஃபித்தில் தொடங்கி அப்பாஸ் கியரோஸ்தமியுடன் முடிகிறது” என்று ஒருமுறை குறிப்பிட்டார் பிரபல பிரெஞ்சுத் திரைப்பட இயக்குநர் ழான் லுக் கோதார்து. கடந்த ஜூலை 4-ம் தேதி தனது 76-வது வயதில் காலமான ஈரானியத் திரைப்பட இயக்குநர் அப்பாஸ் கியரோஸ்தமியுடன் திரைப்படம் முடிந்துவிடவில்லை. ஏராளமான உலக இயக்குநர்களுக்கு உத்வேகமாக அமைந்து புதிய தொடக்கத்தையும் அவர் கொடுத்திருக்கிறார்.
ஓவியம் வழியே...
சிறு வயதிலிருந்து ஓவியக் கலை மீது ஈடுபாடு கொண்டிருந்த அப்பாஸ் கியரோஸ்தமி, ஓவியம், வடிவமைப்பு ஆகியவற்றையே படித்தார். படித்து முடித்த பிறகு விளம்பரத் துறைக்குள் நுழைந்தார். ஈரானியத் திரைப்படங்களில் புதிய அலை இயக்கத்தின் வித்தாக டாரீயூஷ் மெஹ்ர்ஜூயின் ‘த கவ்’ (பசு) திரைப்படம் அடைந்த வெற்றி அப்பாஸ் கியரோஸ்தமிக்குப் பெரும் உத்வேகம் தரவே திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தார்.
ஆரம்பத்தில் குழந்தைகளைப் பற்றி நிறைய ஆவணப்படங்களையும் குறும்படங்களையும் இயக்கினார். அவரது முதல் முழு நீளப் படம் ‘வேர் இஸ் த ஃப்ரண்ட்ஸ் ஹோம்?’. தன் வகுப்பு நண்பனின் வீட்டுப்பாட நோட்டைத் தவறுதலாக எடுத்துவந்துவிடும் எட்டு வயதுச் சிறுவன் அஹ்மதை அப்பாஸின் கேமரா பின்தொடர்கிறது.
அந்த நோட்டு இல்லாவிட்டால் அடுத்த நாள் தன் நண்பனை ஆசிரியர் வெளியேற்றிவிடுவார் என அஞ்சும் அஹ்மதுக்கு நண்பனின் வீடு எங்கிருக்கிறது என்பது தெரியாது. விசாரித்துக்கொண்டு போவதுதான் படம். அதனூடே கோக்கர் பிரதேசம் அழகாக விரிகிறது. எளிய வாழ்க்கை, வளர்ச்சியின் நிழல் மிகக் குறைவாகவே பட்டிருக்கும் பிரதேசம். இந்தப் பின்புலத்தில் நகரும் புள்ளி அஹ்மது.
அப்பாஸ் கியரோஸ்தமி உலக அளவில் கண்டு கொள்ளப்பட்டது இந்தப் படத்துக்குப் பிறகுதான்.
அவரது படங்களை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவர் கதைசொல்வதற்கு முயலவே மாட்டார் என்பது தெரியும். ஒரு கதாபாத்திரத்தை, ஒரு வாழ்க்கையை கேமரா பின்தொடர்ந்தால் எப்படி இருக்கும்? அதுதான் அப்பாஸின் திரைப்படம்.
அடையாளம் தந்த படங்கள்
கியரோஸ்தமியை மகத்தான இயக்குநர்களில் ஒருவராக நிலைநிறுத்திய படம் ‘குளோஸ்-அப்’ (1990). உலகத் திரை வரலாற்றிலேயே இதுபோல் வேறொரு படம் எடுக்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. ஒரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கும்போதே அது திரைப்படமாகவும் ஆன வரலாற்றைக் கொண்டது ‘குளோஸ்-அப்’ படம். ஈரானின் மிகச் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மஹ்ஸன் மக்மல்பாஃப்.
‘சைக்கிளிஸ்ட்’ போன்ற படங்களை இயக்கி அப்போதே புகழ்பெற்றிருந்தவர். அவரைப் போன்ற தோற்றம் கொண்ட ஒருவர் தான்தான் மக்ஸான் மக்மல்பாஃப் என்று சொல்லிக்கொண்டு ஒரு குடும்பத்தில் நுழைகிறார் (அவர் பெயர் சப்ஸியான்). அந்தக் குடும்பத்தினருக்குத் திரைப்பட வாய்ப்பு தருவதாக வாக்குறுதி தருகிறார். போகப்போக அந்தக் குடும்பத்தினர்களுக்குச் சந்தேகம் வர, காவல் துறைக்குத் தகவல் சொகிறார்கள். காவல் துறையினர் அவரைக் கைதுசெய்கிறார்கள்.
இதைக் கேள்விப்படும் அப்பாஸ் அப்போது தான் எடுத்துக்கொண்டிருந்த ஒரு படத்தை அப்படியே நிறுத்திவிட்டு, இந்தச் சம்பவத்தை, வழக்கைத் திரைப்பட கேமராவுடன் பின்தொடர்கிறார். வழக்கு நடக்கும்போதே அதைப் படம்பிடித்துக்கொள்கிறார். திருடுவது சப்ஸியானின் நோக்கமல்ல என்று தெரியவருகிறது. இறுதியில் சப்ஸியான் விடுவிக்கப்பட்டவுடன் அவரையும் மஹ்ஸன் மக்மல்பாஃபையும் சந்திக்க வைக்கிறார் கியரோஸ்தமி.
வழக்கு நடக்கும்போது நிகழ்நேரப் படப்பிடிப்பு தொடங்குகிறது. அதற்கு முன்பு நிகழ்ந்த சம்பவங்களை அந்தக் குடும்பத்தினர், சப்ஸியான் ஆகியோரையே நடிக்க வைத்து படப்பிடிப்பு நிகழ்த்துகிறார் அப்பாஸ். நடந்ததை மறுசித்தரிப்பு செய்தல், நிகழ்நேரப் படப்பிடிப்பு செய்தல் என்று இரு வகையிலும் இந்தப் படம் உருவாக்கப்பட்டது. படம் உலகெங்கும் பெரும் வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றது. அகிரா குரஸோவா, குவெண்டின் டாரண்டினோ, மார்ட்டின் ஸ்கார்ஸஸி, வெர்னர் ஹெர்ஸாக் போன்ற மகத்தான இயக்குநர்கள் கியரோஸ்தமியின் ரசிகர்களானார்கள்.
“சத்யஜித் ராய் மறைந்தபோது நான் மிகவும் துயருற்றேன். ஆனால், கியரோஸ்தமியின் படங்களைப் பார்த்த பிறகு ராயின் இடத்தை நிரப்புவதற்குச் சரியான நபரைத் தந்ததற்காகக் கடவுளுக்கு நன்றி தெரிவித்தேன்” என்று அகிரா குரஸோவா குறிப்பிட்டார்.
வாழ்க்கையே படம்
‘டேஸ்ட் ஆஃப் செர்ரி’ (1997) கியரோஸ்தமியின் இடத்தை மேலும் அசைக்க முடியாததாக ஆக்கியது. பாடி என்ற நடுத்தர வயது ஆசாமி தனக்கு உதவி செய்யக்கூடிய ஒரு நபரைத் தேடிக்கொண்டு காரில் செல்கிறார். அந்த உதவி என்ன தெரியுமா? தற்கொலை செய்துகொள்வதற்கான உதவி. மூன்று பேரைச் சந்திக்கிறார். மூவரும் மறுத்துவிடுகிறார்கள். அதில் ஒரு நபருடனான உரையாடல் மிகவும் கவித்துவமானது.
தனக்கு உதவுமாறு ஒரு பெரியவரிடம் கேட்டுக்கொண்டு அவரை காரில் அழைத்துச்செல்கிறார் பாடி. அந்தப் பெரியவர் தனது வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுகூர்கிறார். அவருக்குத் திருமணம் ஆன சில காலம் கழித்து வாழ்க்கையில் வெறுப்பு ஏற்பட்டுத் தற்கொலை செய்துகொள்வதற்காகச் செல்கிறார். மல்பெரி மரமொன்றில் தூக்கு மாட்டிக்கொள்ள முயல்கிறார். அவர் எறியும் கயிறு கிளையில் மாட்டிக்கொள்ளாமல் கீழே விழுகிறது. மரத்தின் மீது ஏறி, கிளையில் இறுக்கமாக முடிச்சுப்போடும்போது அவரது கையில் மிருதுவான ஏதோ ஒன்று படுகிறது. நன்றாகப் பழுத்த மல்பெரி பழம். சாறு நிறைந்ததாகவும் சுவையாகவும் இருக்கிறது. இன்னொன்று, இன்னொன்று என்று சாப்பிடுகிறார். சாப்பிட்டுவிட்டு நிமிர்ந்து பார்த்தால் மலைக்கு மேலிருந்து சூரியன் எழுந்துகொண்டிருக்கிறது. ‘என்ன அழகான சூரியன், என்ன அழகான காட்சி, என்ன பசுமையான நிலப்பரப்பு’ என்று பரவசத்துடன் விவரிக்கிறார். மல்பரிகளைப் பறித்துக்கொண்டு வீட்டுக்கு வருகிறார். மனைவி உறங்கிக்கொண்டிருக்கிறார். எழுந்த பிறகு அவரும் மல்பரியைச் சாப்பிடுகிறார். வாழ்க்கை முன்பைவிட லேசாக ஆகிறது.
மகத்தான ஆளுமை
2002-ல் வெளியான ‘டென்’ திரைப்படம் முழுக்க முழுக்க காருக்குள் எடுக்கப்பட்டது. காரின் டேஷ்ஃபோர்டில் கேமராவை வைத்து எடுக்கப்பட்ட படம் இது. ஒரு பெண் காரை ஓட்டிக்கொண்டு போக அவரோடு காரில் பயணிக்கும் வேறு வேறு நபர்களுடன் உரையாடல் தொடர, மிகவும் புதுமையாக எடுக்கப்பட்ட படம் இது. இதுபோன்ற உத்திகளைத் தன் திரை வாழ்க்கை முழுவதும் அப்பாஸ் மேற்கொண்டு வந்தார். 2008-ல் வெளியான ‘ஷ்ரின்’ திரைப்படம் முழுக்க நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் ‘குளோஸ்-அப்’ காட்சிகளை மட்டுமே உள்ளடக்கியது.
உலகின் மிக முக்கியமான திரைப்படப் பிராந்தியங்களுள் ஒன்றாக ஈரானை மாற்றிய சிலரில் இவரும் ஒருவர். மானிட வாழ்வின் புதிரையும், நுட்பத்தையும் தன் பார்வையை ஏற்றாமல் சித்தரித்த வகையில் உலகின் மகத்தான இயக்குநர்களில் ஒருவராகவும் ஆகிவிட்டிருக்கிறார்.