

ஆன்மிகக் காவியம்
ஸ்டார் மூவீஸில் திரையிடப்பட்ட ஒரு படத்தின் முக்கியப் பாத்திரம் ரிச்சர்டு பார்க்கர். ரிச்சர்டு பார்க்கரின் அற்புத நடிப்பு பலரை நாற்காலி நுனிக்குக் கொண்டு வந்திருக்கும். அந்தப் படம் ‘லைப் ஆஃப் பை’. பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒரு சிறுவனைப் பற்றிய கதை. கடலில் மாட்டிக்கொண்டு பல நாட்கள் ஒரு படகில் இருக்க வேண்டிய கட்டாயம். ஆனால் இந்த இளைஞனின் பெயர் ரிச்சர்டு பார்க்கர் அல்ல ‘பை படேல்’. அப்படியானால் ரிச்சர்டு பார்க்கர்? அவனோடு அதே கப்பலில் மாட்டிக்கொண்ட புலியின் பெயர். கடலைப் பின்னணியாகக் கொண்ட பல திரைப்படக் காவியங்கள் வெளிவந்துள்ளன. இது ஒரு மாறுபட்ட அசலான ஆன்மிக காவியம்.
இரண்டு பார்வைகள்
அரசிகளின் தேசம் என்று மதுரையை வர்ணித்தார் பேராசிரியர் ஞானசம்பந்தம். மீனாட்சி அம்மனில் தொடங்கி மங்கம்மாள் வரை விவரித்தார். 2010-ம் ஆண்டு மதுரை மேடையில் ‘நான் யாருக்கும் அஞ்சுவதில்லை’ என்று ‘அம்மா’ முழங்கியதை இறுதியில் தவறாமல் குறிப்பிட்டார். (ஜெயா டி.வி.).
முல்லைப் பெரியாறு அணை குறித்த சரித்திரப் பதிவுகளைத் தெளிவாக எடுத்துரைத்தார் சுபவீரபாண்டியன். “தற்போதைய தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் போதிய விழிப்புணர்வுடன் செயல்படுவதில்லை” என்று இறுதியில் தவறாமல் குறிப்பிட்டார் (கலைஞர் டி.வி.).
இப்படிப் பண்றீங்களேப்பா?
நேர்மை என்று பாராட்டுவதா, அடாவடித்தனம் என்று கண்டிப்பதா? ஒரே தந்தை இரண்டு தாய்களின் மூலம் பிறந்த இரண்டு மகன்கள் முட்டி மோதிக்கொள்ளும் ‘அக்னி நட்சத்திரத்தை’ நினைவுபடுத்துவது இயல்பு. அதேதான் எங்கள் கதை என்பதுபோல் முன்னோட்டம் அளித்த ‘பகல் நிலவு’ சீரியல்காரர்கள் (விஜய் டி.வி.) அதில் ‘தூங்காத விழிகள் இரண்டு’ என்ற அக்னி நட்சத்திரம் பாடலையும் பயன்படுத்திக்கொண்டார்கள்.
மனித உருவில் இருந்த நாக தேவனை, சில மானிடர்கள் கொன்றுவிட அவர்களைப் பழிவாங்க மனித உருவில் வருகிறார் ஒரு பெண். ‘நீயா’ திரைப்படம் நினைவுக்கு வருகிறதா? ஜி டி.வியில் இடம்பெறும் ‘நாக ராணி’ தொடரில் ‘நீயா’ படத்தில் இடம் பெற்ற ‘ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வாராய் கண்ணா’ பாடலின் இசையையும், ஹம்மிங்கையும் பின்னணியாகப் பயன்படுத்திக்கொண்டார்கள்.
எதிரிகளின் பாராட்டு!
புனிதர்களின் பூஞ்சோலை (பொதிகை) என்ற நிகழ்ச்சியில் ஒருவர் நபிகள் நாயகத்தின் பெருமைகளை அடுக்கினார். அல் சாதிக் என்றும் நபிகள் நாயகம் அழைக்கப்படுகிறார் என்பதைக் குறிப்பிட்டவர், சாதிக் என்பதன் பொருள் ’உண்மையானவர், உண்மையே பேசுபவர்’ என்றும் கூறினார். இந்த சாதிக் என்ற அடைமொழியை வழங்கியது அவரது ஆதரவாளர்கள் இல்லை, அவரை அடியோடு ஒழிக்க நினைத்த எதிரிகள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று அவர் கூறிய தகவல் வித்தியாசமானது.